ரோமாபுரி வெற்றி பற்றிய முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது உலகில் இரு வல்லரசுகள் இருந்தன. ஒன்று, கிறித்தவர்கள் ஆளுகையிலிருந்த ரோமாபுரி சாம்ராஜ்யம். இன்னொரு வல்லரசு, நெருப்பை வணங்கிக் கொண்டிருந்த பாரசீகர்களின் சாம்ராஜ்யம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இவ்விரு வல்லரசுகளும் மோதிக் கொண்டபோது ரோமாபுரி தோற்கடிக்கப்பட்டது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
முஹம்மதைப் போலவே தங்களிடம் வேதம் இருக்கிறது என்று கூறிக் கொள்ளும் ரோமாபுரி சாம்ராஜ்யம் வீழ்ந்து விட்டது. நம்மைப் போலவே பல கடவுள்களை நம்பும் சமுதாயம் வெற்றி பெற்று விட்டது. எனவே முஹம்மதை நாம்தான் மிகைப்போம் என்று மக்காவிலிருந்த எதிரிகள் பேசிக் கொண்டனர்.
“மிகச் சில ஆண்டுகளில் ரோமாபுரி வெற்றி பெறும்; பாரசீகம் தோற்று ஓடும்” என்று அப்போதுதான் இவ்வசனங்கள் (30:2,3,4) முன்னறிவிப்புச் செய்தன.
இந்த முன்னறிவிப்பின்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே ரோமாபுரி வெற்றி பெற்று, பாரசீகம் தோற்கடிக்கப்பட்ட அதிசய நிகழ்ச்சி நடந்தேறியது. திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாக இது திகழ்கிறது.