ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவது சரியா?
வித்ருகுனூத்துக்குஆமீன்கூறலாமா?
இமாம்வித்ர்குனூத்ஓதும்போதுஆமீன்கூறலாமா?
வித்ருத் தொழுகையில் ருகூவிற்கு முன்பு குனூத் ஓதுவதற்கும், ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவதற்கும் ஆதாரம் உள்ளது.
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவிற்கு முன்னால் குனூத் ஓதினார்கள்.
நூல் : நஸாயீ 1681
ஹசன் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தி சஜ்தாவைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்காத போது அல்லாஹும்மஹதினீ என்ற குனூத்தை ஓதுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத்தந்தார்கள்.
நூல் : ஹாகிம் 4800
ஆனால் குனூத் ஓதும் போது கைகளை உயர்த்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே கைகளை உயர்த்தக் கூடாது.
மேலும் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் வித்ரில் ஓதவேண்டிய குனூத்தை ஃபஜர் தொழுகையில் ஓதி வருகிறார்கள். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தாரத பித்அத் ஆகும்.
அபூமாலிக் அல்அஷ்ஜயீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
என் தந்தையே நீங்கள் அல்லாஹ்வின் தூதர்கள் (ஸல்) அவர்களுக்குப் பின்னாலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோர்களுக்குப் பின்னாலும் தொழுதிருக்கிறீர்கள். இவர்கள் ஃபஜர் தொழுகையில் குனூத் ஓதினார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னருமை மகனே! இது புதிதாக உருவாக்கப்பட்டதாகும் (அவர்கள் இவ்வாறு ஓதவில்லை) என்று பதிலளித்தார்கள்.
நூல் : இப்னு மாஜா 1231
வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
வித்ருடைய குனூத்தில் நான் ஓதுவதற்காக சில வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.
(அந்த வார்த்தைகளாவன)
அல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த.
வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்க ரப்பனா வதஆலைத்த.
நூல் : அஹ்மத் 1625
வித்ர் குனூத்தை இமாம் உட்பட பின்பற்றித் தொழுபவர்கள் அனைவரும் சப்தமின்றி அமைதியாகவே ஓத வேண்டும். வித்ர் குனூத்தில் இமாம் சப்தமிட்டு ஓத மற்றவர்கள் ஆமீன் சொல்லும் வழிமுறையை நபியவர்கள் கற்றுத் தரவில்லை.
இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் எந்த ஆதாரமும் இல்லை.
—————-
ஏகத்துவம்