ரிஸ்கை அதிகப்படுத்த தொழுகை உண்டா?
வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற வசதிகள் வந்த பிறகு உலகம் கையடக்க அளவில் சுருங்கி விட்டது. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வு கூட சொற்ப நேரத்தில் நமது கையில் (மொபைலில்) வந்து விழுந்து விடுகிறது.
அதன் மூலம் பல நன்மைகளை அடைகிறோம் என்பது ஒருபுறமிருந்தாலும் பல நேரங்களில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையுமே அந்நிகழ்வுகள் நமக்கு அளிக்கின்றன. இணையத்தில் உலா வருகிற சில வீடியோக்களைப் பார்க்கும் போது இப்படியுமா மனிதர்கள் இருக்கிறார்கள் என்று புருவம் உயர்த்தி யோசிக்க வைக்கின்றது.
உலகியல் ரீதியிலான ஆச்சரியங்களைக் காட்டிலும் மார்க்க ரீதியிலான ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் தான் அதிகம் ஏற்படுகிறது. இப்படித்தான் சமீபத்தில் ஒரு அஜ்ரத் பயான் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பார்க்க நேர்ந்தது? அந்தக் கொடுமையை என்னவென்பது?
ஏன் இவ்வளவு அலட்டல் என்கிறீர்களா? அவர் பேசிய பேச்சு அப்படி இருந்தது.
உணவில் பரக்கத் ஏற்பட, வாடிக்கையாளர்களை அதிகம் கவர உங்களுக்கு ஒரு வழி சொல்லித் தருகின்றேன் என்று சொல்லி மக்களுக்கு பயான் செய்கிறார். அதில்…
ஒரு கிராமவாசி நபிகள் நாயகத்திடம் வந்து, ‘நாயகமே! நீங்க சொன்னீங்கன்னு அவ்வாபீன் (?) முதல் கொண்டு பல தொழுகைகள் நான் தொழுகிறேன். ஆனா ரிஸ்க் என் வீட்டைத் தேடி வரும்படி நான் தொழுவதற்கு எனக்கு மட்டும் தனியா ஒரு தொழுகையை சொல்லித் தாங்களேன்’ என்று கேட்கிறார்.
(அந்தக் கிராமவாசியின் ஆர்வத்தைப் பார்த்தீர்களா என்று ஆர்வமூட்டல் வேறு நடக்கிறது)
பெருமானார் அவரைப் பார்த்து சிரித்து விட்டு ஒவ்வொரு வியாழக்கிழமையும் லுஹருக்குப் பிறகு இரண்டு சலாமில் நான்கு ரக்அத்களைத் தொழுவீராக.
முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூரா – இன்னா அன்ஸல்னாஹூ 10 முறை – குல்ஹூவல்லாஹூ அஹத்
இரண்டாம் ரக்அத்தில் அல்ஹம்து சூரா – இதா ஜூல்ஜிலதுல் அர்ளு.. 10 முறை – குல்ஹூ வல்லாஹூ அஹத் ஓதி சலாம் கொடுத்து விட வேண்டும்.
அடுத்த முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூரா – வல்ஆதியாத் 10 முறை – குல்ஹூவல்லாஹூ அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக்
இறுதி ரக்அத்தில் அல்ஹம்து சூரா – குல் யா அய்யுஹல் காஃபிரூன் 10 முறை – குல்ஹூவல்லாஹூ அஹத், குல் அஊது பிரப்பின் நாஸ் ஓதி சலாம் கொடுத்து விட வேண்டும்.
நீ இப்படிச் செய்தால் உனக்கு ரிஸ்கை அல்லாஹ் கொட்டுவான் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அவரும் அதன்படியே தொழுது விட்டு அவரின் கடைக்குச் செல்கிறார். அங்கே மற்ற கடைகளில் எல்லாம் யாரும் இல்லை. ஆனால் அவர் கடைக்கு மட்டும் வாடிக்கையாளர் ஈ மொய்ப்பதைப் போல மொய்த்து விட்டார்கள். அல்லாஹ் ரிஸ்கை கொட்டு கொட்டுன்னு கொட்டிட்டான்.
இதுதான் அவரது மெய்மறக்கச் செய்யும் பயான்.
இந்த பயானைக் கேட்ட பிறகும் அதிர்ச்சி அடையவில்லை எனில் அது தான் ஆச்சரியம்.
அத்தனையும் அப்பட்டமான பொய்.
மழைத்தொழுகை, பெருநாள் தொழுகை, கிரகணத் தொழுகை, வித்ரு தொழுகை, என எத்தனையோ தொழுகையை நபிகளார் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
ஆனால் இந்த தஜ்ஜால் – பெரும் பொய்யன் – குறிப்பிடுவதைப் போன்று உணவில் பரக்கத் ஏற்படவென்று எந்தத் தொழுகையையும் அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தரவில்லை.
நாம் உத்தரவிடாத வணக்கத்தைச் செய்பவரின் வணக்கம் மறுக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3243
இத்தகைய தஜ்ஜால்கள் குறிப்பிடுவதை நம்பி முஸ்லிம்கள் தங்கள் வணக்கத்தை அமைத்துக் கொண்டால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாத, தண்டனைக்குரிய நிலை உண்டாகும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.
திட்டமிட்ட பொய்
இப்படித் தொழுதால் அல்லாஹ் ரிஸ்கைக் கொட்டுவான் என்றும், வாடிக்கையாளர் ஈ மொய்ப்பதைப் போன்று கடையில் மொய்ப்பார்கள் என்றும் ஒரு மலிவான வியாபாரியின் தரத்திற்கு செய்திகளைச் சொல்லி, இதை நபிகள் நாயகம் சொன்னார்கள் என்று நபியின் மீது துணிந்து துள்ளிக் குதித்துப் பொய் சொல்கிறார்.
இவர் சொல்வது எந்த நபிமொழியிலும் இல்லாதது. நபிகளாரின் மீது சொல்லப்பட்ட திட்டமிட்ட பொய். நபிமீது பொய் சொல்லாதீர்கள் என்று இந்த மத்ஹபினருக்கு எச்சரிக்கை செய்து, எச்சரிக்கை செய்து கையும் வாயும் வலித்து விட்டது.
வாய் வலித்தாலும் பிரச்சனை இல்லை; நான் நபி மீது பொய் சொல்வேன் என்று அவர்கள் சொல்லும் போது, நாமும் கை வலித்தாலும் பரவாயில்லை என்று அது குறித்த எச்சரிக்கையைப் பதிவிட வேண்டும் அல்லவா?
‘என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ (ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி-106
‘(தந்தையே! உங்களைப் போன்று நபி (ஸல்) அவர்களுடன் நட்புகொண்ட) இன்னின்னாரெல்லாம் நபி (ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல், தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் கேள்விப்பட்டதேயில்லையே! ஏன்?’ என்று என்னுடைய தந்தை ஸுபைர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘இதோ பார்! நான் (பெரும்பாலும்) நபி (ஸல்) அவர்களைப் பிரிந்திருந்ததே இல்லை. ஆயினும் ‘என் மீது இட்டுக்கட்டிச் சொல்பவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். (எனவேதான் நான் அதிகமாக அறிவிக்கவில்லை)’ என்றார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) கூறினார்.
நூல்: புகாரி-107
‘என் மீது, வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்’ என அனஸ் (ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி-108
நான் கூறாத ஒன்றை ‘கூறினார்கள்’ என்று கூறியவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை ஸலமா (ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி-109
இவர்கள் இந்த எச்சரிக்கையூட்டும் செய்திகளை எத்தனை முறை படித்தாலும் தொடர்ந்து தொய்வின்றி நபி மீது பொய்களை அனாயசமாக அள்ளி விடுவதற்கு முக்கியக் காரணம் அவர்கள் படித்த மத்ஹபு அவர்களை அப்படி வார்த்தெடுத்துள்ளது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
இறைவன் கூறிய வழி
ரிஸ்கை அதிகப்படுத்த இறைவனும், இறைத்தூதரும் பல வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றில் ஒன்றிரண்டை இங்கே நினைவு கூர்கிறோம்.
இறைவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்
உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான் என்று கூறினேன். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான்.
(திருக்குர்ஆன்:71:10,11,12.)
உறவைப் பேணுங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும்; அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல்: புகாரி-2067
இறைவனை முறையாக அஞ்சுங்கள்
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.
(திருக்குர்ஆன்:65:2,3.)
இதன் மூலம் இறைவனிடம் பரக்கத் வேண்டுவோமாக! பித்அத்களைத் தவிர்ப்போமாக! நபி மீது பொய் சொல்லத் தூண்டும் மத்ஹபை ஒழிப்போமாக!