ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது என்ன❓
அது குர்ஆன், ஹதீசுக்கு உடன்பட்டதா❓
சேவல் கூவினால் மலக்குமார்களை அது பார்க்கிறது என்றும், கழுதை கத்தினால் ஷைத்தானை அது பார்க்கிறது என்றும் ரியாளுஸ் ஸாலிஹீனில் படித்தேன். இது சரியான ஹதீஸா❓
ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது இமாம் நவவீ அவர்கள் தலைப்பு வாரியாகத் தொகுத்த ஒரு நூலாகும்.
புகாரி, முஸ்லிம் போன்று இது நேரடியான ஹதீஸ் நூல் அல்ல!
நேரடி ஹதீஸ் நூல் என்றால், நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர் ஒருவர் அறிவிப்பார்; அவரிடமிருந்து ஒரு தாபியீ அறிவிப்பார்; அவரிடமிருந்து ஒரு தபவுத் தாபியீ அறிவிப்பார்.
இப்படியே சங்கிலித் தொடராக வந்து நூலாசிரியரிடம் ஒரு அறிவிப்பாளர் அறிவிப்பார். அதை அந்த நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்வார். இது தான் ஹதீஸ் நூல் எனப்படுகின்றது.
ஆனால் ரியாளுஸ் ஸாலிஹீன் என்பது இவ்வாறு அறிவிப்பாளர்களிடமிருந்து நேரடியாக இமாம் நவவீ கேட்டு ஹதீஸ்களைப் பதிவு செய்த நூல் அல்ல! புகாரி, முஸ்லிம் போன்ற நேரடி ஹதீஸ் நூற்களிலிருந்து தலைப்பு வாரியாக ஹதீஸ்களைத் தொகுத்து எழுதப்பட்ட நூலாகும்.
உதாரணமாக, ரியாளுஸ் ஸாலிஹீன் நூலில், புறம் பேசுதல் என்ற தலைப்பை எடுத்துப் பார்த்தால் அதில் புகாரி, முஸ்லிம், திர்மிதீ போன்ற ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ள புறம் தொடர்பான ஹதீஸ்கள் இடம் பெற்றிருக்கும்.
இதில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இருக்கலாம்; பலவீனமான செய்திகளும் இருக்கலாம். எது சரியான ஹதீஸ், எது பலவீனமான ஹதீஸ் என்பதை அந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ள மூல நூலைப் பார்த்து, அதன் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்த பின்னரே முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு தலைப்பு வாரியாக ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டிருப்பதால் மார்க்கப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்நூல் மிக உதவியாக உள்ளது. எனவே ஆலிம்கள் இந்நூலை தமது சொற்பொழிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வர்.
குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுபவர்களாக இருந்தால் ரியாளுஸ் ஸாலிஹீனில் இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் தமது பிரச்சாரத்தில் பயன்படுத்துவர்.
பலவீனமான ஹதீஸ்களைப் போதிக்க மாட்டார்கள். ஆனால் நிகழ்ச்சி நடத்துபவர்கள் பலவீனமான ஹதீஸ்களையும் பின்பற்றுபவர்களாக இருந்தால் அவ்வாறு ஆய்வு செய்து போதிக்க மாட்டார்கள்.
சேவல் கூவினால் அவை மலக்குகளைப் பார்க்கின்றன, கழுதை கத்தினால் அது ஷைத்தானைப் பார்க்கின்றது என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான். இது புகாரியில் இடம்பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள் ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன*.
(அதனால் தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால் தான் கத்துகின்றது.)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3303
————-
ஏகத்துவம்