ரமலான் மாதத்தின் சிறப்புகள் 1. ரமலான் மாதத்தின் சிறப்புகள் யாவை? 1. ரமலான் மாதம்- மனித சமுதாயத்திற்கு அருட்கொடையாகவும் மாபெரும் வழிகாட்டியாகவும் அமைந்த திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம். ரமலான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, நேர்வழியைத் தெளிவாகக் எடுத்துச் சொல்லக்கூடிய, (பொய்யை விட்டும் உண்மையைப்) பிரித்துக் காட்டக்கூடிய குர்ஆன் அருளப்பட்டது. எனவே அம்மாதத்தை யார் அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185) 2. இம்மாதத்தில்தான் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலதுல் கத்ரு எனும் மகத்துவ மிக்க இரவு உள்ளது. ‘மகத்துவமி;க்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.’ (அல்குர்ஆன் 97:1-3) 3. ரமலானின் ஒவ்வொரு இரவிலும் நரகத்திலிருந்து பலரை அல்லாஹ் விடுதலை செய்கிறான். 4. இம்மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ரமலான் மாதத்தின் முதல் இரவு வந்து விட்டால் ஷைத்தான்களும் மூர்க்கத் தனமான ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டுவிடுகின்றன. அவற்றில் ஒரு வாசலும் திறக்கப்படுவதில்லை. சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் எந்த வாசலும் மூடப்படுவதில்லை . ‘நன்மையைத் தேடுபவனே முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே நிறுத்திக் கொள்!’ என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார். அல்லாஹ்வால் நரகத்திலிருந்து பலர் விடுவிக்கப்படுகின்றர். இவ்வாறு விடுவக்கப்படுவது (ரமலானின்) ஒவ்வொரு இரவிலுமாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),நூல்: திர்மிதி 682, இப்னுமாஜா 1642 5. ரமலான் மாதம் பாவங்களைப் போக்குகின்ற மாதம். ‘நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமலானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி 38, முஸ்லிம் 760 6. ரமலானில் செய்கின்ற உம்ரா ஹஜ்ஜுக்குச் நிகரானது. (புகாரி; 1782) 2. ரமலான் நோன்பு எப்போது கடமையாக்கப்பட்டது? ரமலான் நோன்பு ஹிஜ்ரி 2- ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. (பார்க்க: பத்ஹுல்பாரி ஹதீஸ் எண்: 2001) 3. நோன்பு யார் மீது கடமை? நோன்பு மட்டுமல்ல எல்லா இறைக்கடமைகளும் பருவமடைந்த, புத்தி சீர்நிலையில் உள்ள, முஸ்லிமான, ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும். ‘நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் சென்றோர் மீது (நோன்பு) கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட் டுள்ளது. நீங்கள் (இறைவனை) அஞ்ச வேண்டும் என்பதற்காக.’ (2:183) ‘மூன்று பேர்களை விட்டும் எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது. அதாவது விழிக்கும் வரை தூங்குபவனை விட்டும், பருவமடையும் வரை குழந்தையை விட்டும், புத்தி சீராகும் வரை பைத்தியக்காரனை விட்டும் எழுது கோல் உயர்த்தப்பட்டு விட்டது’ என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ(ரலி),நூல்: அபூதாவூத் 4402 4. நோன்பின் நோக்கம் என்ன? அல்லாஹ்வுக்குப் பயந்து நடப்பதற்கும், நன்மைகளைச் செய்வதற்கும், தீமைகளை விட்டும் விலகி வாழ்வ தற்கும் நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வதே நோன்பின் நோக்கமாகும். ‘நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் சென்றோர் மீது (நோன்பு) கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட் டுள்ளது. நீங்கள் (இறைவனை) அஞ்ச வேண்டும் என்பதற்காக.’ (2:183) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணாமல் பருகாமல் இருப்பது அல்லாஹ்வுக்குத் தேவையில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),நூல்: புகாரி 1903 ‘நோன்பு (நரகத்திலிருந்தும் தீமைகளிலிருந்தும் காக்கும்) கேடயமாகும். எனவே அவர் (பகல் நேரங்களில்) உடலுறவில் ஈடுபட வேண்டாம், முட்டாள் தனமாகவும் நடந்து கொள்ள வேண்டாம். யாரேனும் நோன்பாளியிடம் சண் டைக்கு வந்தால் அல்லது திட்டினால் நான் நோன்பாளி, நான் நோன்பாளி என்று அவர் கூறிவிடட்டும்‘ எனவும் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),நூல்: புகாரி 1894 5. நோன்பின் சிறப்புகள் யாவை? 1. நோன்பாளிக்கு கணக்கின்றி மகத்தான கூலி வழங்கப்படும். 2. நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள். நோன்பு திறக்கும்போதும், தம் இறைவனை சந்திக்கும் போதும். 3. நோன்பாளியின் வாயில் ஏற்படும் மாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட மணமிக்கது. நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: மனிதனின் ஒவ்வொரு நற்செயலுக்கும் பன்மடங்கு கூலி வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்கு அது போன்று பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலியாகும். ஆனால் அல்லாஹ் கூறுகிறான் நோன்பைத் தவிர! ஏனெனில் நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். நோன்பாளி தனது ஆசையையும் உணவையும் எனக்காகவே விட்டுவிடுகிறான் என்று! நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று அவர் நோன்பு துறக்கும் போது, மற்றொன்று அவருடைய இறைவனை சந்திக்கும்போது. நோன்பாளியின் வாயில் ஏற்படும் மாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விடச் சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: முஸ்லிம் 1151