யார் மீது போர் கடமை?

 

இஸ்லாத்திற்கு எதிராகச் செய்யப்படும் விமர்சனங்களில் தீவிரவாதம் குறித்த விமர்சனம் முக்கிய இடத்தை வகிக்கிறது. எதிரிகளுடன் போர் செய்யுங்கள் என்று கட்டளையிடும் வசனங்களை எடுத்துக் காட்டி முஸ்லிமல்லாத மக்களைக் கொன்று குவிக்க இஸ்லாம் கட்டளை இடுகிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

 

தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் சில முஸ்லிம்கள் போர் குறித்து அருளப்பட்ட வசனங்களை தங்கள் செயலுக்கு ஆதாரமாகக் காட்டி இந்த விமர்சனத்துக்கு வலுவூட்டுகிறார்கள்.

 

போர் குறித்து சரியான விளக்கம் இல்லாததே இதற்குக் காரணமாகும்.

 

திருக்குர்ஆனில் உள்ள பல கட்டளைகள், அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன.

 

அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.

 

திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு மரண தண்டனை அல்லது நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

போர் குறித்த வசனங்களும் இதுபோல் அரசின் மீது சுமத்தப்பட்ட கடமையே தவிர தனி நபர்கள் மீதும், குழுக்கள் மீதும் சுமத்தப்பட்டதல்ல. இவ்வாறு நாம் கூறுவதற்கு குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.

 

4:75 வசனத்தில் “பலவீனர்களுக்காக நீங்கள் ஏன் போரிடக் கூடாது?” என்று கூறப்படுகிறது.

 

பலவீனர்கள் என்பது மக்காவில் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்களைக் குறிக்கும். அவர்கள் மக்காவில் சொல்லொணாத துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். ஊரை விட்டு ஓடி உயிர் பிழைத்தால் போதும் என்ற அளவுக்கு அவர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டன.

 

ஆயினும் அவர்களை அழைத்துப் போர் செய்யுமாறு கட்டளையிடாமல், அவர்களுக்காக நீங்கள் ஏன் போர் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் அமைந்த முஸ்லிம் அரசுக்குத் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

 

பலவீனர்களும், பாதிக்கப்பட்டவர்களும் போர் நடவடிக்கையில் இறங்கலாம் என்றிருந்தால் அந்தப் பலவீனர்களுக்குத்தான் போரிடுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

அரசாங்கத்தின் மீதுதான் போர் கடமையாகும். தனி நபர்கள் மீது அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 

8:60 வசனத்தில் பலவிதமான போர்த் தளவாடங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. ஒரு நாட்டுக்குள் பலவீனமாகவும், சிறுபான்மையாகவும் உள்ள தனி நபரோ, குழுக்களோ இப்படி திரட்டிக் கொள்வது சாத்தியமாகாது. இது அரசாங்கத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.

 

இஸ்லாமிய அரசு அமைந்து, போர் செய்ய வேண்டிய காரணங்கள் அனைத்தும் இருந்து, போர் செய்வதற்கான படைபலம் இல்லாவிட்டால் அப்போது இஸ்லாமிய அரசின் மீது கூட போர் செய்வது கடமையாகாது.

 

போர் செய்யும் அவசியம் ஏற்பட்டு எதிரிகளின் படைபலத்தில் பத்தில் ஒரு பங்கு இருந்தால் போர் செய்ய வேண்டும் என முதலில் சட்டம் இருந்ததாக 8:65 வசனம் சொல்கிறது.

 

பின்னர் மக்களிடம் காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டு எதிரியின் படைபலத்தில் பாதி படைபலம் இருந்தால் மட்டுமே இஸ்லாமிய அரசின் மீது போர் கடமையாகும்; அதை விடக் குறைவாக இருந்தால் போர் செய்யாமல் அடங்கிச் செல்ல வேண்டும் என்று 8:66 வசனம் மூலம் அறிவிக்கப்பட்டது.

 

எதிரிகளின் படைபலத்தில் பாதிக்கும் குறைவாக இருந்தால் இஸ்லாமிய அரசாங்கம் கூட போரிடக் கூடாது என்றால் நாட்டில் சிறுபான்மையாக வாழும் மக்கள் மீது போர் எவ்வாறு கடமையாகும்?

 

இதனால் மிகப் பெரிய இழப்புகள் சமுதாயத்துக்கு ஏற்படும் என்பதால் தான் போரைக் கடமையாக்காமல் பொறுமையை இறைவன் கடமையாக்கியுள்ளான்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருக்க முடியாது. அந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படை திரட்டவில்லை. பொறுமையைத்தான் கடைப்பிடித்தனர். மதீனாவுக்குச் சென்று ஆட்சியும் அமைத்து போர் செய்வதற்கான காரணங்கள் ஏற்பட்டபோது தான் போர் செய்தனர்.

 

இதை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து நடந்து கொண்டால் மக்கள் இஸ்லாத்தை நோக்கித் தம் பார்வையைத் திருப்புவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *