*யார் அந்த நஷ்டவாளி?*
இஸ்லாம் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதை மிக உயர்வாகக் கருதுகிறது.
அதனை வலியுறுத்தும் விதமாக, நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு பிரபலமான ஹதீஸில், *மூக்கு மண்ணைக் கவ்வட்டும்* என்று மூன்று முறை குறிப்பிட்டார்கள்.
இதன் பொருள் என்னவென்பதை நாம் ஆழமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
\\*மூக்கு மண்ணைக் கவ்வட்டும்*\\
*மூக்கு மண்ணைக் கவ்வட்டும்* என்பது ஒரு அரபிப் பயன்பாட்டுச் சொல்லாகும். இதன் நேரடிப் பொருள் *அவமானத்தால் ஒருவரது மூக்கு தரையில் படட்டும்* என்பதாகும்.
ஆனால், ஹதீஸில் இது ஒருவனின் *இழப்பையும், அவன் அடையும் இழிவையும், அவன் ஒரு பெரும் நஷ்டவாளி* என்பதையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் யாரிடம் இது கூறப்பட்டது என்று விளக்கும்போது, *தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ முதுமையில் அடைந்தும், அவர்களுக்குப் பணிவிடை செய்து சொர்க்கம் செல்லத் தவறியவரே அவர்* என்றார்கள். (ஹதீஸின் சுருக்கம் -முஸ்லிம் 4987)
\\*தவறவிடப்பட்ட பொன்னான வாய்ப்பு*\\
*முதுமையில் பெற்றோர்கள் பிள்ளைகளின் கவனிப்பையும், அன்பையும், உதவியையும் அதிகம் எதிர்பார்த்திருப்பார்கள்*.
அந்த நேரத்தில் அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சேவை செய்வது பிள்ளைகளின் மீதுள்ள தலையாய கடமையாகும்.
இந்தக் கடமையைச் சரியாகச் செய்வதன் மூலம் ஒரு பிள்ளையால் மிக எளிதாக இறைவனின் திருப்பொருத்தத்தையும், அதன் விளைவாக *சொர்க்கத்தையும் அடைய முடியும்.*
பெற்றோராகிய அந்த சொர்க்கத்தின் வாசல் அருகிலேயே இருந்தும், அதை ஒருவன் பயன்படுத்தத் தவறினால், *அவனை விட பெரிய துரதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது.*
அத்தகைய *பெரும் பாக்கியத்தை இழந்தவன் இழிவடையட்டும், நஷ்டமடையட்டும்* என்பதையே நபி (ஸல்) அவர்கள் *மூக்கு மண்ணைக் கவ்வட்டும்* என்ற வார்த்தைகள் மூலம் மூன்று முறை அழுத்தி கூறி எச்சரிக்கின்றார்கள்
\\*இந்த ஹதீஸ் மூலம் நாம் பெரும் படிப்பினை* \\
வயோதிகப் பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்வது ஒரு கடமை மட்டுமல்ல, அது *சொர்க்கத்தை நாம் வென்றெடுப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த வாய்ப்பை நழுவ விடுபவர்கள் மறுமையில் கைசேதப்பட்டு நிற்பார்கள்* என்பதே இதன் தெளிவான செய்தியாகும்.
*الله اعلم*