யாசகம் கேட்பவர்களின் நிலை என்ன ❓
குறித்த நேரத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும்; மற்றவரிடம் கைநீட்டி சம்பளம் வாங்க வேண்டும் என்பதற்குச் சோம்பல்படும் சிலர், பிறரிம் யாசகம் கேட்பதையே தொழிலாகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆரோக்கியமான கை கால்கள் இருந்தும் உழைக்காமல் யாசகம் கேட்டு ஊரெங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி மற்றவர்களுக்கு மத்தியில் சுயமரியாதை இழந்து குறுக்கு வழியில் கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பிச்சையெடுப்பவர்கள், மறுமையில் மிகவும் மோசமான நிலையைச் சந்திப்பார்கள். நல்ல விதமாக இருந்தும் பிச்சையெடுக்கிறோமே? நாலுபேர் நம்மை ஏளனமாகப் பார்ப்பார்களே? என்ற நாணமில்லாதவர்கள், மறுமையில் முகத்தில் சிறிதளவும் சதையின்றி அருவருப்பான தோற்றத்தில் மக்களுக்கு மத்தியில் இருப்பார்கள். உடலெங்கும் சதை இருந்து, முகத்தில் மட்டும் கொஞ்சம் கூட சதையில்லாமல் வெறும் எலும்பாக இருந்தால் எந்தளவிற்கு சகிக்க முடியாத தோற்றமாக இருக்கும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி (1474, 1475)
யாசகம் கேட்பதை விட சிறந்த செயல்
‘பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விறகச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.’
இதை அபூ ஹுரைரா(ரலி) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) இருவரும் அறிவித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புஹாரி 2075
உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது
நான் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன்; வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ‘ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது’ எனக் கூறினார்கள்.
நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.
அபூபக்கர் (ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி), ‘முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!’ எனக் கூறினார். ஹகீம், நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புஹாரி 1472
‘ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.’
என மிக்தாம்(ரலி)
அறிவித்தார். அறிவிப்பவர் : மிக்தாம் (ரலி),
நூல் : புஹாரி 2072
Mashallah