*மோசடி*
—————-
ஒரு மனிதன் தனது மரணத்திற்கு முன்பாக தவிர்ந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் குறிப்பிடும் *மூன்று பண்புகளில் இரண்டாவது பண்பு மோசடியாகும்.*
இன்றைய உலகமே மோசடிகளால் நிரம்பி வழிகின்றது. எதில் தான் மோசடி செய்ய வேண்டும் என்ற வரையறையே இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் மோசடி வியாபித்திருக்கின்றது. ஆலமரம் போல ஆங்காங்கே தனது கிளைகளை அது பரப்பி விட்டிருக்கின்றது.
மனிதன் உண்ணும் உணவுகளான அரிசி, காய்கறி, பழங்கள் துவங்கி குழந்தைகளின் பசி போக்கும் பால், நோயாளிகள் உட்கொள்ளும் மருந்துகள் என எல்லாவற்றிலும் மோசடி நிரம்பியுள்ளது.
கடல் உணவான மீன்களைத் தான் ஓரளவு நம்பத் தகுந்ததாக மக்கள் கருதினர். இப்போது கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அந்தக் கடல் உணவுகளிலும் ரசாயன மருந்துகளை ஏற்றி விற்கின்றனர் என்ற செய்தி மோசடியின் நவீன வடிவத்தைப் படம் பிடித்துப் காட்டுகின்றது.
இப்படிப் பல வகைகளில் மோசடி செய்யும் மக்கள் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என நபிகளார் முன்னரே கூறியுள்ளார்கள்.
*உங்களுக்குப் பிறகு ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கின்றார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன்வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரி (2651)
இத்தகைய மோசடிக் குணம் ஒரு முஸ்லிமின் குணமல்ல! மாறாக, நயவஞ்சகனின் குணம் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
*பேசினால் பொய் பேசுவான், வாக்குக் கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் ஆகிய மூன்றும் நயவஞ்கனின் அடையாளமாகும்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (33), முஸ்லிம் (107)
மோசடிக் குணம் கொண்ட ஒருவன் தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் அது நயவஞ்சகனின் குணமே என்று நபிமொழி எச்சரிக்கின்றது.
*நயவஞ்கனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் நோன்பு நோற்றாலும் தொழுதாலும் தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் சரியே!* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (109)
பிற மக்களை ஏமாற்றுவது அவனை முஸ்லிம் சமுதாயத்திலிருந்தே வெளியேற்றிவிடும் மகா மோசமான, நாச காரியமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதில் தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. *உணவுக்குச் சொந்தக்காரரே! இது என்ன?* என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், *அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்துவிட்டது* என்று கூறினார். அதற்கு அவர்கள், *மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!* என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (164)
அதுமட்டுமல்ல! ஈமானைப் பறிக்கும் மாபாதகக் காரியம் இந்த மோசடிக் குணம். இவ்வாறு தான் நபிகளார் எச்சரிக்கின்றார்கள்.
*மோசடி செய்பவன் மோசடி செய்யும் போது அவன் இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி மோசடி செய்வதில்லை. உங்களை நான் எச்சரிக்கிறேன்; உங்களை நான் எச்சரிக்கிறேன்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம்(103)
*ஈமானைப் பறிக்கின்ற, முஸ்லிம் சமுதாயத்தை விட்டும் வெளியேற்றுகின்ற, சுவனம் செல்வதைத் தடுக்கின்ற, நயவஞ்சகனின் பண்பான மோசடிக்குணத்தை அது எந்த வடிவில் இருந்தாலும் நமது வாழ்விலிருந்து அகற்றி, விட்டொழிக்க வேண்டும். அதுவே நரகிலிருந்து மீட்சி பெற உரிய வழி என்பதை இனியும் தாமதியாமல் உணர வேண்டும்*.
————————
*ஏகத்துவம்*