மோசடி & பொறாமை தவிர்க்கும் அடியானுக்கு கிடைக்கும் பரிசு- சொர்க்கம்
————————————-
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது சொர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரித் தோழர் ஒருவர் தாடியில் உளுச் செய்த தண்ணீர் வடிந்து கொண்டிருக்க, இடது கையில் இரு செருப்புக்களையும் பிடித்தவராக வருகை தந்தார்.

மறுநாள் நபி (ஸல்) அவர்கள், இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போதும் அதே மனிதர் அதே தோற்றத்தில் வந்தார்.

அதற்கு அடுத்த நாளும் நபி (ஸல்) அவர்கள், இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போதும் அதே மனிதர் அதே தோற்றத்திலேயே வருகை தந்தார்.

நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றதும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அம்மனிதரை பின் தொடர்ந்து சென்று அவரிடம், எனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சினையின் காரணமாக அவரிடத்தில் மூன்று நாட்கள் தங்கமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேன்.

எனவே அந்த நாட்களில் உங்களுடன் தங்க அனுமதியளித்தால் அதனை நான் நிறைவேற்றிவிடுவேன் என்று கூறினார். அதற்கவர் சம்மதம் தெரிவித்தார். ஒரு இரவோ, அல்லது மூன்று இரவுகளோ அவருடன் தங்கி அவரைக் கவனித்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அவரைப் பற்றிக் கூறும்போது,

அவர் இரவு தொழுகையை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. ஆனால் படுக்கையில் புரண்டு படுக்கும் போதும் தூக்கத்திலிருந்து விழிக்கும் போதும் தக்பீர் மற்றும் திக்ர் செய்து கொள்வார். பிறகு ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து விடுவார். மேலும் நல்லவற்றைத் தவிர வேறு எதையும் அவர் பேச நான் கேட்கவில்லை. இவ்வாறு மூன்று இரவுகள் கழிந்த பிறகு நான் அவருடைய அமல்களை மிகவும் குறைவாக மதிப்பிடும் நிலைக்கு வந்துவிட்டேன்.

அப்போது நான் அவரிடம், அல்லாஹ்வின் அடிமையே! நிச்சயமாக எனக்கும் எனது தந்தைக்கும் மத்தியில் கோபத்தால் பிளவு ஏற்படும் அளவுக்கு எந்தப் பிரச்சினையும் நிகழவில்லை. நபி (ஸல்) அவர்கள் இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று மூன்று தடவை உங்களைப் பற்றி கூறக் கேட்டேன். அந்த மூன்று தடவைகளும் நீங்கள்தான் வருகை தந்தீர்கள்! எனவே உங்களுடன் தங்கியிருந்து உங்கள் அமல்களை பார்த்து அதனைப் பின்பற்ற விரும்பினேன்.

நான் கண்டவரை நீங்கள் பெரிய அமல் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படியிருக்க, நபி (ஸல்) அவர்கள் உங்களைப் பற்றி இவ்வாறு கூறும் அளவிற்கு உம்மை உயர்த்தியது எது? என்று அவரிடம் கேட்டேன். அதற்கவர், நீர் பார்த்தவைகளைத் தவிர வேறு எதனையும் நான் செய்யவில்லை! என்று கூறினார். இந்நிலையில் நான் அவரிடமிருந்து விடைபெற்றேன். நான் சிறிது தூரம் வந்த பிறகு அவர் என்னை அழைத்து, நீர் பார்த்தவைகளைத் தவிர வேறு எதனையும் நான் செய்யவில்லை.

அதனுடன், எந்த முஸ்லிமுக்கும் மோசடி செய்ய நினைக்கமாட்டேன். மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகள் பற்றி நான் பொறாமை கொள்ளவும் மாட்டேன் என்றார்.

அப்போது, இவைகள்தான் உம்மை அந்த அளவிற்கு உயர்த்தி விட்டது. இதனை செயல்படுத்த முடியாதவர்களாகத்தான் நாங்கள் உள்ளோம்! என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூற்கள் : அஹ்மத் 12236,
—————————————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *