மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன?
இவ்வசனத்தில் (38:69) மேலான கூட்டத்தார் விவாதம் செய்தபோது நீர் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து விரிவுரையாளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆயினும் அடுத்தடுத்த வசனங்களைக் கவனித்தால் இவ்வசனம் கூறுவது என்ன என்பதை விரிவுரை ஏதும் தேவையில்லாமலேயே விளங்கிக் கொள்ளலாம்.
மேலான கூட்டத்தார் என்பது வானவர்களைக் குறிக்கும். வானவர்கள் ஏதும் விவாதம் செய்துள்ளார்களா? என்று நாம் தேடிப்பார்த்தால் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் விவாதம் செய்தது பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. மனிதனைப் படைக்க இறைவன் நாடியபோது மேலான கூட்டத்தினரான வானவர்கள் மற்றுக் கருத்து கூறினார்கள். 2:30 வசனத்திலும், மேலான கூட்டத்தார் பற்றி பேசும் இவ்வசனத்துக்கு அடுத்த வசனங்களிலும் அது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
அதைத்தான் இங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கூறுமாறு இறைவன் பணிக்கிறான்.
“வானவர்கள் விவாதம் செய்தபோது நான் அங்கே இருக்கவில்லை. எனக்கு அது தெரியவும் வழியில்லை. எனவே எனக்கு இறைவன் புறத்திலிருந்து அறிவிக்கப்படுவதையே நான் கூறுகிறேன்’ என்பதுதான் இதன் கருத்து