மூஸா நபி வாழ்வில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்!

மூஸா நபியின் சமுதாயத்துக்குத் தாகம் ஏற்பட்ட போது மூஸா நபியிடம் அவர்கள் முறையிட்டார்கள். கையில் கைத்தடி இருந்தும் தேவையான நேரத்தில் அடித்து நீரூற்றை அவர்கள் உருவாக்கவில்லை. மாறாக மக்களின் தாகத்தை அல்லாஹ்விடம் முறையிட்டு அல்லாஹ்விடம் தண்ணீரைக் கேட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளை வந்த பின்னர் தான் கைத்தடியைப் பாறையில் அடித்தார்கள். அதில் இருந்து நீரூற்றுக்கள் உருவாயின.

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டியபோது “உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!” என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன.

(திருக்குர்ஆன்:2:60)

ஈஸா நபியவர்கள் இறந்தவர்களை உயிப்பித்தல் உள்ளிட்ட பல அற்புதங்களைச் செய்தார்கள். இது பற்றி அல்லாஹ் கூறும்போது எனது அனுமதியுடன் தான் இது நடந்தது என்றும், ஈஸா நபியால் நடக்கவில்லை என்றும் சொல்லிக் காட்டுகிறான்.

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் அனுமதியின்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் அனுமதியின்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது” (என்றார்)

(திருக்குர்ஆன்:3:49)

“மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் அனுமதியின்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் அனுமதியின்படி அது பறவையாக மாறியதையும், என் அனுமதியின்படி பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக!

இறந்தவர்களை என் அனுமதியின்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறியபோது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!” என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

(திருக்குர்ஆன்:5:110)

நபிமார்களுக்கு எந்த அற்புதம் வழங்கப்பட்டதோ அந்த அற்புதத்தைக் கூட ஒவ்வொரு தடவை செய்யும் போதும் அல்லாஹ் அனுமதிக்க வேண்டும். இப்படித்தான் அல்லாஹ் அற்புதத்தை நபிமார்களுக்கு வழங்கினான். அற்புதம் வழங்கப்பட்ட நபிமார்களும் தமக்கு வழங்கப்பட்ட அற்புதத்தை இப்படித்தான் புரிந்து கொண்டனர்.

அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். அவன் நாடும் போது நபிமார்கள் மூலம் வெளிப்படுத்துகிறான் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆதாரங்கள் போதுமானவையாகும். நபிமார்களுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டதால் அவர்களுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி வந்துவிடாது; எல்லா மனிதர்களையும் போல் அவர்களும் இன்ப துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதைத் தடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கவில்லை.

அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *