முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாமா?
இரண்டு நபர்களுக்கு மத்தியில் யார் பொய்யர் என்ற பிரச்சினை வரும்போது இரு நபர்களும் தத்தமது மனைவி மக்களுடன் ஒரு இடத்தில் கூட வேண்டும். ‘இறைவா இதில் நான் சொல்வதே உண்மை. நான் பொய் சொல்லி இருந்தால் என் மீதும், என் மனைவி மக்கள் மீதும் உன் சாபம் உண்டாகட்டும்’ என்று இருவரும் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். இதுதான் இஸ்லாத்தில் முபாஹலா எனப்படுகிறது.
வேதக்காரர்களை முபாஹலாவுக்கு அழைக்கச் சொல்லி இவ்வசனத்தில் (3:61) அல்லாஹ் கட்டளை இடுகிறான்
இவ்வசனம் வேதக்காரர்களைக் குறித்து அருளப்பட்டாலும் யார் பொய்யர் என்ற பிரச்சினை ஏற்படும்போது இது அனைவருக்கும் உரியதுதான்.
குர்ஆன் வசனங்களில் பெரும்பாலானவை ஏதாவது ஒரு பிரிவினர் பற்றியும், தனி நபர் பற்றியும் தான் அருளப்பட்டிருக்கும். ஆனால் அது அவர்களுக்கு மட்டும் உரியது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அந்தத் தன்மையில் உள்ள அனைவருக்கும் உரியது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
லூத் நபி சமுதாயத்தின் ஓரினச் சேர்க்கையை அல்லாஹ் கண்டித்ததால் அது லூத் நபி சமுதாயத்துக்கு உரியது; நமக்கு அல்ல என்று புரிந்து கொள்ளக் கூடாது.
ஒருவர் உண்மை சொல்கிறாரா? பொய் சொல்கிறாரா என்பது ஒரு பிரச்சினை. இந்தப் பிரச்சினையில் எந்த முடிவும் எட்டப்படாவிட்டால் அதற்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும். அந்தத் தீர்வு அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடும் முபாஹலாவாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத வேதக்காரர்களைத் தான் முபாஹலாவுக்கு அழைத்தார்கள். முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு எதிராக எப்படி சாபத்தை வேண்டுவது எனவும் அவர்கள் கேட்கின்றனர்.
முஸ்லிமான கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் அவதூறுக் குற்றச்சாட்டின்போது ஒருவருக்கு எதிராக மற்றவர் சாபத்தை வேண்டக்கூடிய லிஆன் என்ற சட்டத்தை இவர்கள் அறியாததால் இப்படி வாதிடுகின்றனர். இது 24:6-9 வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
நபித்தோழர்களான கணவன் மனைவிக்கிடையே லிஆன் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததை புகாரி 4745, 5310, 5314, 5315, 5316, 6748, 6856 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.
இது குறித்து 454 வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.
யார் பொய்யர் என்பதைக் கண்டுபிடிக்கும் அவசியம் ஏற்பட்டால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கேட்கலாம் என்பதற்கான முக்கியமான சான்றாக இது உள்ளது.
மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை நாம் கண்டுபிடிக்க முடியாதபோது அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிட்டு பிரச்சினையை முடிப்பதைத் தவிர மனிதனுக்கு வேறு வழி இல்லை.
முஸ்லிமுக்கு மத்தியில் யார் பொய்யர்கள் என்பதில் தீர்வு காணும் அவசியம் ஏற்பட்டால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை வேண்டக் கூடாது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாம் என்று நல்லறிஞர்கள் யாரும் சொல்லவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.
அறிஞர் இப்னு தைமியா அவர்கள் அத்வைதக் கொள்கை உடைய முஸ்லிம் பெயர் தாங்கிகளிடம் முபாஹலா செய்துள்ளார்கள். மற்றொரு அறிஞரான ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் இப்னு அரபியின் சீடர்களுடன் முபாஹலா செய்துள்ளார்கள்.
இப்னு அப்பாஸ், சுஃப்யான் ஸவ்ரீ, அவ்ஸாயீ, இப்னுல் கையும் உள்ளிட்ட எண்ணற்ற அறிஞர்கள் தவறான கொள்கை உடையவர்களிடம் முபாஹலா செய்துள்ளனர்; செய்யலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளனர் என்பதால் இந்த வாதமும் தவறாகும்.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு எதிராக இன்னொருவர் ஒரு பழியைச் சுமத்துகிறார். இப்படி பழி சுமத்தும்போது பழி சுமத்தப்பட்டவர் முபாஹலாவுக்கு அழைக்கலாம். அதில் நியாயம் உள்ளது. அல்லது அவர் அதை அலட்சியம் செய்து விடலாம்.
ஆனால் பழிசுமத்தியவர் முபாஹலாவுக்கு அழைத்து தப்பித்துக் கொள்ள இஸ்லாத்தில் இடமில்லை. ஒருவர் இன்னொருவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தினால் குற்றம் சுமத்தியவரின் ஒரே கடமை அந்தக் குற்றத்தை சான்றுடன் நிரூபிப்பது தான்.
நான் சான்றுடன் நிரூபிக்க மாட்டேன்; முபாஹலாவுக்கு வருகிறாயா? என்று கேட்டு அவதூறுக்கான தண்டனையில் இருந்து அவன் தப்பிக்க முடியாது. என் கருத்து சரியா உன் கருத்து சரியா? என் கொள்கை சரியா? உன் கொள்கை சரியா? என்பது போன்ற பிரச்சினைகளில் தான் இருவரில் யாரும் முபாஹலாவுக்கு அழைக்கலாம்.
கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட மனிதர் மீது ஒருவர் பொய்க்குற்றம் சாட்டினால் குற்றம் சாட்டப்பட்டவர் முபாஹலாவுக்கு அழைக்கலாம். ஏனெனில் எதையும் நிரூபிக்கும் கடமை குற்றம் சாட்டப்பட்டவர் மீது இல்லை. குற்றம் சாட்டியவர் மீது தான் இந்தக் கடமை உள்ளது. சான்றுடன் நிரூபிப்பது தான் அவருக்குள்ள ஒரே கடமையாகும்.
எந்தச் சான்றும் இல்லாமல் குற்றம் சாட்டி விட்டு நிரூபிக்க முன்வராமல் முபாஹலாவுக்குத் தயாரா என்று கேட்டு ஓட்டம் பிடிக்க முபாஹலாவைக் கருவியாக்க கூடாது.
குற்றம் சுமத்தியவன் மீது நிரூபிக்கும் கடமை மட்டுமே மார்க்கத்தில் உள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால் அவனுக்கு அவதூறுக்கான தண்டனை வழங்கப்படும். குற்றம் சுமத்தியவன் அதை நிரூபிக்க மறுத்தால் அவன் சுமத்திய குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபணமாகி விட்டதால் குற்றம் சுமத்தப்பட்டவன் அதை அத்துடன் விட்டு விடலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மற்றவர் மீது குற்றம் சுமத்தியவர்கள் அதை நிரூபிக்காதபோது தண்டிக்கப்பட்டார்கள்.
குற்றச்சாட்டைச் சுமத்தி விட்டு முபாஹலாவுக்கு அழைத்து குற்றச்சாட்டை நிரூபிக்காமல் தப்பித்துக் கொள்ள யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எப்போது குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லையோ அதுவே பொய்யன் என்பதைக் காட்டிவிட்ட பிறகு முபாஹலா மூலம் நான் நிரூபிப்பேன் என்று ஒருவன் கூறுவது மார்க்கத்தின் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்குவதாகும்.
அவதூறு பரப்புவோர் முதலில் மார்க்க அடிப்படையில் செய்ய வேண்டிய நிரூபிக்கும் கடமையைச் செய்ய வேண்டும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்தக் கடமையும் இல்லை. எனவே அவர் முபாஹலாவுக்கு அழைப்பு கொடுக்கலாம் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.