முஸ்லிம்களின் அடக்கத்தலத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமா?
ஒரு முஸ்லிம் இறந்து விட்டால் அவரை மற்ற மனிதர்கள் அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்யலாமா? அல்லது முஸ்லிம்களின் தனி அடக்கத்தலத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் தனியாகவும், இணைவைப்பாளர்கள் தனியாகவும் அடக்கம் செய்யப்பட்டு வந்தனர். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
2021 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ قَالَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ الْأَسْوَدِ بْنِ شَيْبَانَ وَكَانَ ثِقَةً عَنْ خَالِدِ بْنِ سُمَيْرٍ عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ أَنَّ بَشِيرَ ابْنَ الْخَصَاصِيَةِ قَالَ كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرَّ عَلَى قُبُورِ الْمُسْلِمِينَ فَقَالَ لَقَدْ سَبَقَ هَؤُلَاءِ شَرًّا كَثِيرًا ثُمَّ مَرَّ عَلَى قُبُورِ الْمُشْرِكِينَ فَقَالَ لَقَدْ سَبَقَ هَؤُلَاءِ خَيْرًا كَثِيرًا فَحَانَتْ مِنْهُ الْتِفَاتَةٌ فَرَأَى رَجُلًا يَمْشِي بَيْنَ الْقُبُورِ فِي نَعْلَيْهِ فَقَالَ يَا صَاحِبَ السِّبْتِيَّتَيْنِ أَلْقِهِمَا رواه النسائي
பஷீர் பின் கஸாஸிய்யா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அவர்கள் முஸ்லிம்களின் மண்ணறைகளுக்கு அருகில் வந்த போது இவர்கள் (உலகில் வாழும் போது) அதிகமான தீங்குகளை (சந்தித்து இப்போது நல்வாழ்வின் பால்) முந்திச் சென்றுவிட்டனர் என்று கூறினார்கள். பிறகு இணைவைப்பாளர்களின் மண்ணறைகளுக்கு அருகில் அவர்கள் வந்த போது இவர்கள் (உலகில் வாழும் போது) அதிகமான நன்மைகளை (அடைந்து தற்போது தீய வாழ்வின் பால்) முந்திச் சென்றுவிட்டனர் என்று கூறினார்கள்.
நூல் : நஸாயீ 2021
1392 حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ اذْهَبْ إِلَى أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقُلْ يَقْرَأُ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَلَيْكِ السَّلَامَ ثُمَّ سَلْهَا أَنْ أُدْفَنَ مَعَ صَاحِبَيَّ قَالَتْ كُنْتُ أُرِيدُهُ لِنَفْسِي فَلَأُوثِرَنَّهُ الْيَوْمَ عَلَى نَفْسِي فَلَمَّا أَقْبَلَ قَالَ لَهُ مَا لَدَيْكَ قَالَ أَذِنَتْ لَكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ مَا كَانَ شَيْءٌ أَهَمَّ إِلَيَّ مِنْ ذَلِكَ الْمَضْجَعِ فَإِذَا قُبِضْتُ فَاحْمِلُونِي ثُمَّ سَلِّمُوا ثُمَّ قُلْ يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَإِنْ أَذِنَتْ لِي فَادْفِنُونِي وَإِلَّا فَرُدُّونِي إِلَى مَقَابِرِ الْمُسْلِمِينَ رواه البخاري
அம்ர் பின் மைமூன் அல்அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் (ரலி) அவர்களை (மரணத்தறுவாயில்) பார்த்தேன். அவர்கள் தம் மகனை நோக்கி, அப்துல்லாஹ்வே! இறை நம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் போய், உமர் சலாம் கூறியதாகச் சொல்லிவிட்டு, என் தோழர்களான நபிகள் நாயகம் (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்! எனக் கூறினார்கள். அவ்வாறே கேட்கப்பட்டதும், ஆயிஷா (ரலி) அவர்கள், நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதை விட்டுக் கொடுக்கின்றேன் என்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது உமர் (ரலி) அவர்கள் என்ன பதில் கிடைத்தது? எனக் கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அனுமதியளித்து விட்டார்கள் எனக் கூறினார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (எனது உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் (மீண்டும்) எனது சலாமைக் கூறி, உமர் அனுமதி கேட்கிறார் எனக் கூறுங்கள். எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கிவிடுங்கள்.
நூல் : புகாரி 1392
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மரணிக்கும் முஸ்லிம்கள் பகீஉ என்ற மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டு வந்தனர். இந்த மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நபியவர்கள் பாவமன்னிப்புத் தேடியுள்ளார்கள். மேலும் இங்கு வந்து தொழுகை நடத்தி அவர்களின் தொழுகை மூலம் இங்குள்ள மண்ணறைகளுக்கு ஒளி ஊட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இறந்து போன இணை வைப்பாளர்களுக்கு பாவமன்னிபுத் தேடுவதை இறைவன் தடை செய்து விட்டான். எனவே பகீஉ என்ற அந்த மையவாடியில் முஸ்லிம்கள் மட்டும் அடக்கம் செய்யப்பட்டிருந்ததால் தான் அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள். அங்கு சென்று ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஜிப்ரீல் உம் இறைவன் உம்மை பகீஉ வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான் என்று (என்னிடம்) கூறினார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன் என்று சொல் என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றவர்களுக்கும், பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)
நூல் : முஸ்லிம் 1619
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த பெண் அல்லது இளைஞர் ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்து விட்டார் என மக்கள் தெரிவித்தனர். நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள் என்று கூறினார்கள்.
மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். பிறகு இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. எனது தொழுகையின் மூலம் அல்லாஹ் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 1588
நபியவர்கள் காலத்திலும் அதற்குப் பிறகும் முஸ்லிம்களுக்கு தனி மையவாடி இருந்துள்ளதை இந்தச் செய்திகள் உணர்த்துகின்றன.
இறந்துபோன முஸ்லிம்களின் மண்ணறைகளுக்கு நாம் சென்றால் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். முஸ்லிம்கள் தனியாக அடக்கம் செய்யப்பட்டால் அவர்களின் மண்ணறைகளுக்குச் சென்று இவ்வாறு நாம் பிரார்த்தனை செய்ய முடியும்.
இறந்துபோன இணை வைப்பாளர்களுக்கு நாம் பிரார்த்தனை செய்யக் கூடாது. எனவே இணை வைப்பாளர்கள் அடக்கம் செய்யப்படும் இடத்தில் ஒரு முஸ்லிமை அடக்கினால் அவருக்காக உயிருள்ளவர்கள் பிரார்த்தனை செய்ய முடியாத சூழல் ஏற்படுகின்றது.
இணைவைப்பு, இறை மறுப்புக் காரியங்களில் ஈடுபடுபவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவர்கள் என்பதால் இவர்களை முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்ய முடியாது.
எனவே இறந்துவிட்ட ஒரு முஸ்லிமை முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்படும் தனி மையவாடியில் அடக்கம் செய்ய முடிந்தால் அவ்வாறே அடக்கம் செய்ய வேண்டும். அதற்கு முடியாத பட்சத்தில் வேறு இடங்களில் அடக்கம் செய்து கொள்ளலாம்.
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]