நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

144- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ قَالَ : حَدَّثَنَا الزُّهْرِيُّ ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

إِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلاَ يَسْتَقْبِلِ الْقِبْلَةَ ، وَلاَ يُوَلِّهَا ظَهْرَهُ شَرِّقُوا ، أَوْ غَرِّبُوا

நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மல ஜலம் கழிக்கும்போது கிப்லா(கஅபா) திசையை முன்னோக்கவும் வேண்டாம்; அதைப் பின்னோக்கவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்.

அறி : அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி), நூல் : முஸ்லிம் 439, புகாரி-144 

இந்தச் செய்தி கிப்லாவை முன்னோக்கி, அல்லது பின்னோக்கி மலஜலம் கழிக்கக் கூடாது என்று தடை செய்கிறது. ஆனால் பின்வரும் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கிப்லாவைப் பின்னோக்கி சிறுநீர் கழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

148- حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ : حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ عَنْ عُبَيْدِ اللهِ ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ

ارْتَقَيْتُ فَوْقَ ظَهْرِ بَيْتِ حَفْصَةَ لِبَعْضِ حَاجَتِي فَرَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقْضِي حَاجَتَهُ مُسْتَدْبِرَ الْقِبْلَةِ مُسْتَقْبِلَ الشَّأْمِ

நான் என் தேவையொன்றிற்காக (என் சகோதரி) ஹப்ஸா (ரலி) அவர்களின் வீட்டுக் கூரை மீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும் (பைத்துல் மக்திஸிருக்கும்) ஷாம் (சிரியா) திசையை முன்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் (தமது வீட்டிலிருந்த கழிவறையில்) இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நான் (தற்செயலாகக்) கண்டேன்.

அறி : அப்துல்லாஹ் பின் உமர் ரலி, நூல் : புகாரி-148 

கிப்லாவைப் பின்னோக்கி மலஜலம் கழிக்கக் கூடாது என்பதும், நபிகள் நாயகமே கிப்லாவை பின்னோக்கி மலஜலம் கழித்தார்கள் என்பதும் மேலோட்டமாகப் பார்த்தால் முரண்பாடாகத் தெரியும்.

ஆனால் ஒன்று பொதுவானதாகவும் மற்றொன்று குறிப்பிட்ட இடத்திற்கானதாகவும் உள்ளது. வெட்ட வெளியில் கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ மலம் ஜலம் கழிக்கக் கூடாது. இதைத் தான் முதல் செய்தி தடுக்கிறது. வீட்டில், தடுப்புள்ள இடத்தில் எப்படி வேண்டுமானாலும் மலஜலம் கழித்துக் கொள்ளலாம். மேற்கண்ட தடை இவ்விடத்தில் பொருந்தாது.  நபிகளார் கிப்லாவைப் பின்னோக்கி சிறுநீர் கழித்தது இந்த அடிப்படையில்தான்.

காலத்தைக் கவனித்தல்

செய்யலாம் என்றும் செய்யக் கூடாது என்றும் இரு கட்டளைகளைக் காண்கிறோம். ஒன்று காலத்தால் முந்தியதாக உள்ளது; மற்றொன்று காலத்தால் பிந்தியது என்றும் ஆதாரம் கிடைக்கிறது. இப்போது முரண்பாடில்லாத விளக்கம் நமக்குக் கிடைத்து விடும்.

கூடும் கூடாது என்று ஒரே காலத்தில் சொல்லப்பட்டால்தான் முரண்பாடாகக் கருத இயலும். ஒரு காலத்தில் கூடும் என்றும் பிறிதொரு காலத்தில் கூடாது என்றும் சொல்லப்பட்டால் அதை முரண்பாடாகக் கருத முடியாது.

நோய்வாய்ப்பட்ட குழந்தை, ஐஸ்கிரீம் வாங்கிக் கேட்கும் போது சாப்பிடக் கூடாது என்று  கூறுவோம்.

அதே குழந்தை வளர்ந்து, ஆரோக்கியமாகி விட்ட போது ஐஸ்கிரீம் கேட்டால் வாங்கிக் கொடுப்போம்.

அப்போது ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது என்றீர்கள், இப்போது சாப்பிடலாம் என்கிறீர்கள். முரண்பாடாகப் பேசுகிறீர்களே என்று யாரும் கேட்க மாட்டோம்.

சாப்பிடக் கூடாது என்று சொன்னதும் சாப்பிடலாம் என்றதும் ஒரே காலத்தில் அல்ல.

சாப்பிடக் கூடாது என்று சொன்னது நோய் வாய்ப்பட்ட காலத்திலாகும்.

சாப்பிடலாம் என்று சொன்னது ஆரோக்கியமாக இருந்த போதாகும்.

எனவே முரண்பாடு என்று தீர்ப்பளிக்கும் முன் முரணாகக் கருதப்படும் இரு செய்திகள் காலத்தால் வேறுபட்டதாக இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِىْ سَبِيْلٍ حَتّٰى تَغْتَسِلُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا‏

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும்போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! 

(அல்குர்ஆன் 4:43)

ஆனால் 5:90 வசனத்தில் மதுபானம் அருந்துவதில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறி மதுபானங்கள் முற்றாகத் தடுக்கப்பட்டு விட்டன.

மது அருந்தினாலும் தொழுகையின் போது போதை இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்ற கட்டளையும், அறவே மதுபானங்களை அருந்தக் கூடாது என்ற கட்டளையும் நேர்முரணாக இருந்தாலும் இது இரு வேறு காலகட்டங்களில் சொல்லப்பட்டதாகும்.

ஆரம்ப காலத்தில் தொழுகை நேரத்தில் மட்டும் போதையாக இருக்க வேண்டாம் என்று கட்டளை போடப்பட்டது. பின்னர் முற்றாக தடை செய்யப்பட்டுவிட்டது. முந்திய சட்டம் மாற்றப்பட்டு விட்டது. இப்படி புரிந்து கொள்ளும் போது முரண்பாடு நீங்கிவிடும்.

தெளிவான முரண்பாடு

அதே போன்று எந்தச் செய்தியை முரண்படுகிறது எனக் கூறுகிறோமோ அது தெளிவான முரண்பாடாக அமைந்திடல் அவசியமாகும்.

ஒரே விஷயத்தை ஆம் என்றும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தால் தான் அது முரண்பாடாகும்.

அது அல்லாமல் ஒரு விஷயத்தை ஆம் என்றும் இன்னொரு விஷயத்தை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது முரண்பாட்டில் சேராது.

வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் அப்துல் காதர் சிக்கன் சாப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் அப்துல் காதர் மட்டன் சாப்பிட்டார்.

இப்போது அவர் சிக்கன் சாப்பிட்டாரா? அல்லது மட்டன் சாப்பிட்டாரா? என்று குழப்பமாவதால் இது முரண்பாடு என்று தீர்ப்பளித்து விடக் கூடாது.

ஏனெனில் இதில் முரண்பாடு இருப்பது போல் மயக்கம் ஏற்பட்டாலும் இதில் முரண்பாடு இல்லை. ஒரு நாளில் ஒரு இடத்தில் சிக்கனும் மட்டனும் சாப்பிடுவது சாத்தியமானதுதான்.

குறித்த நாளில், குறித்த இடத்தில் அப்துல் காதர் சிக்கன் சாப்பிட்டார் என்றும் அதே நாளில், அதே இடத்தில் அப்துல் காதர் சிக்கன் சாப்பிடவில்லை என்றும் வந்திருந்தால் தான் தெளிவான முரண்பாடாகக் கருத முடியும்.

அதுவல்லாமல் சிக்கன் சாப்பிட்டார்-  மட்டன் சாப்பிட்டார் என்று வந்திருந்தால் இரண்டையும் சாப்பிட்டிருக்கிறார் என்றே கருத இயலும்.  ஏனெனில் ஒரே விஷயத்தை ஆம் என்றும் இல்லை என்று குறிப்பிடப்படவில்லை.

எனவே ஒரே விஷயத்தை ஆம் – இல்லை என்று மறுக்கும் வகையில் இருந்தால் தான் அது தெளிவான முரண்பாடாகக் கருத முடியும்.

நாம் முன்பு குறிப்பிட்ட பல ஹதீஸ்கள் இதற்குரிய உதாரணமாக பொருந்தக் கூடியதே.

ஓரளவு முரண்பாட்டின் வரையறைகளைப் பார்த்து விட்டோம். இனி அடுத்தடுத்து முரண்படும்படியான ஹதீஸ்களையும் அவற்றிற்கான விளக்கத்தையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

ஹதீஸ் 1

குர்ஆனில் கல்லெறி தண்டனை உண்டா?

என்னென்ன காரணங்களால் போலியான முரண்பாடுகள் தோன்றுகிறது என்பதை இதுவரை பார்த்தோம்.

ஒரு சிலர் முரண்பாடாகக் கருதும் ஹதீஸ்களையும் அதற்கான விளக்கத்தையும் இனி காண்போம்.

விபச்சாரம் செய்தோருக்கு நூறு கசையடிகள் வழங்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ‌وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ‏

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். 

(அல்குர்ஆன் 24:2)

அதே வேளை திருமணம் செய்தவர்கள் விபச்சார குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

கல்லெறி தண்டனை தொடர்பாக குர்ஆனில் எதுவும் கூறப்படவில்லை.

கல்லெறி தண்டனை தொடர்பாக நபிகளார் கூறும் பின்வரும் ஹதீஸை சிலர் குர்ஆனுக்கு முரணாக உள்ளதாகக் கருதுகின்றனர்.

இவர்கள் பிரச்சனைக்குரியதாக கருதும் வாசகத்தை பெரிதுபடுத்திருக்கிறோம். நன்கு கவனிக்கவும்.

2695 و2696- حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ الله عَنْ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالاَ

جَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللهِ اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللهِ فَقَامَ خَصْمُهُ فَقَالَ صَدَقَ اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللهِ فَقَالَ الأَعْرَابِيُّ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا فَزَنَى بِامْرَأَتِهِ فَقَالُوا لِي عَلَى ابْنِكَ الرَّجْمُ فَفَدَيْتُ ابْنِي مِنْهُ بِمِئَةٍ مِنَ الْغَنَمِ وَوَلِيدَةٍ ثُمَّ سَأَلْتُ أَهْلَ الْعِلْمِ فَقَالُوا إِنَّمَا عَلَى ابْنِكَ جَلْدُ مِئَةٍ وَتَغْرِيبُ عَامٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللهِ أَمَّا الْوَلِيدَةُ وَالْغَنَمُ فَرَدٌّ عَلَيْكَ ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِئَةٍ وَتَغْرِيبُ عَامٍ وَأَمَّا أَنْتَ يَا أُنَيْسُ – لِرَجُلٍ – فَاغْدُ عَلَى امْرَأَةِ هَذَا فَارْجُمْهَا فَغَدَا عَلَيْهَا أُنَيْسٌ فَرَجَمَهَ

(ஒரு முறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, “உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியை சுட்டிக் காட்டி), “என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், “உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்’ என்று கூறினர். 

நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், “உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும்தான் கொடுக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்புக் கூறினார்கள்” என்று சொன்னார். 

நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, “உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக” என்று கூறினார்கள்.

அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார்.

அறி : அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி), நூல் : புகாரி-2696 

நாம் பெரிதுபடுத்தியிருக்கும் வாசகத்தின் அரபி மூலத்தில் பி கிதாபில்லாஹி என்று உள்ளது.

கிதாப் என்றால் வேதம். பி கிதாபில்லாஹி என்றால் அல்லாஹ்வின் வேதப்படி என்று அர்த்தமாகும்.

விபச்சாரம் குறித்து அல்லாஹ்வின் வேதப்படி தீர்ப்பளிக்குமாறு இருவரும் நபிகளாரிடம் முறையிடுகின்றனர்.

நபிகள் நாயகம் அவர்களும் நான் அல்லாஹ்வின் வேதப்படி தீர்ப்பளிக்கின்றேன் என்று கூறுகிறார்கள்.

அதன் பிறகு விபச்சார குற்றத்தில் ஈடுபட்ட அவர்களில் திருமணமான பெண்ணுக்கு கல்லெறி தண்டனை என்றும் திருமணமாகாத இளைஞனுக்கு கசையடி என்றும் தீர்ப்பளிக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் வேதப்படி தீர்ப்பளிக்கின்றேன் என்று சொல்லி இரு தண்டனைகளைக் குறிப்பிடுகிறார்கள். அதில் கசையடி பற்றி மட்டுமே குர்ஆனில் உள்ளது.

கல்லெறி தண்டனை பற்றி குர்ஆனில் எதுவும் இல்லை. அப்படியிருக்க இந்தத் தீர்ப்பை அல்லாஹ்வின் வேதப்படியிலான தீர்ப்பு என்று எப்படிச் சொல்லலாம்?

கல்லெறி தண்டனை பற்றி குர்ஆனில் இருக்கிறது எனும் கருத்தை இந்த ஹதீஸ் தோற்றுவிக்கிறது. ஆனால் அப்படி ஒரு சட்டம் குர்ஆனில் இல்லை. எனவே இது குர்ஆனுக்கு முரண் என ஒரு சிலர் கருதுகின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது முரண்பாடு போல் தோன்றினாலும் உண்மையில் இதில் எந்த முரண்பாடும் இல்லை.

அல்லாஹ்வின் வேதப்படி என்று இவர்கள் மொழிபெயர்க்கும் இடங்களில் பி கிதாபில்லாஹ் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கிதாப் என்பதற்கு வேதம், குர்ஆன் எனும் அர்த்தம் இருப்பதைப் போலவே சட்டம் எனும் அர்த்தமும் உண்டு.

இதற்கு பின்வரும் வசனத்தை உதாரணமாகக் காணலாம்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர்.

حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاٰخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ‏

وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ۚ كِتٰبَ اللّٰهِ عَلَيْكُمْ‌ۚ وَاُحِلَّ لَـكُمْ مَّا وَرَآءَ ذٰ لِكُمْ اَنْ تَبْتَـغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ‌ ؕ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِيْضَةً‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا تَرٰضَيْـتُمْ بِهٖ مِنْۢ بَعْدِ الْـفَرِيْضَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا‏

நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம்.

(அல்குர்ஆன் 4:23,24)

இந்த வசனத்தில் யார்? யார்? திருமணம் முடிக்க தடை செய்யப்பட்டவர்கள் என்பதை இறைவன் பட்டியலிடுகிறான். இறுதியில் கிதாபல்லாஹ் – (இது) அல்லாஹ்வின் சட்டம் என்று கூறுகிறான்.

உங்கள் மீது இறைவன் விதித்த சட்டப்படி இவர்கள் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்கள் என்பது இவ்வசனத்தின் கருத்தாகும். இங்கே கிதாப் என்பது சட்டம் எனும் பொருளில் பயன்படுத்தப்படுவதை அறியலாம். அதே போல குதிப எனும் சொல்லும் கிதாப் எனும் சொல்லின் வகையைச் சார்ந்ததுதான். குதிப என்பது கடமை, சட்டம் எனும் பொருளில் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்க குதிப எனும் சொல்லே குர்ஆனில் வந்துள்ளது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ [البقرة : 183]

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 2 183)

பழி வாங்குதல் கடமை என்பதை குறிக்கவும் இதே குதிப எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ [البقرة : 178]

நம்பிக்கை கொண்டோரே! (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், (கொல்லப்பட்ட) அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 2 178)

வஸிய்யத் கடமை என்பதை அல்லாஹ் சொல்லும் போதும் குதிப எனும் சொல்லை பயன்படுத்தியுள்ளான்.

كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ إِنْ تَرَكَ خَيْرًا الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ [البقرة : 180]

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும்போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 2 180)

மேலும் பார்க்க 2 216, 2 246, 4 127 இப்படி நிறைய சான்றுகளைக் குறிப்பிட இயலும்.

எனவே கிதாப் என்ற சொல்லிற்கு குர்ஆன் எனும் பொருள் இருப்பதைப் போல சட்டம் – கடமை எனும் பொருள் உண்டு என்பது தெளிவாகிறது. இதன்படி குர்ஆனுக்கு முரணானதாக சிலர் கருதும் மேற்கண்ட ஹதீஸில் பி கிதாபில்லாஹி என்பதற்கு அல்லாஹ்வின் வேதப்படி என்று பொருள் அல்ல. அல்லாஹ்வின் சட்டப்படி என்று அர்த்தம் ஆகும்.

அல்லாஹ்வின் வேதப்படி என்பதற்கும் அல்லாஹ்வின் சட்டப்படி என்பதற்கும் இடையில் சற்று வித்தியாசம் உள்ளது. அல்லாஹ்வின் வேதம் குர்ஆனாகும். அல்லாஹ்வின் வேதப்படி என்பது குர்ஆனில் உள்ளபடி என்ற கருத்து வரும். அல்லாஹ்வின் வேதத்தின் படி என்று எதைச் சொன்னாலும் அது குர்ஆனில் இருந்தாக வேண்டும்.

அதே வேளை அல்லாஹ்வின் சட்டத்தின் படி என்றால் அல்லாஹ் அருளிய சட்டப்பிரகாரம் என்பதாகும்.

அல்லாஹ் அருளிய சட்டம் என்பது குர்ஆனை மட்டும் குறிக்காது. நபிகள் நாயகம் சொல்லும் சட்டமும் அல்லாஹ் அருளிய சட்டமே. நபிகள் நாயகம் சொல்லும் விளக்கங்கள், சட்டங்கள் யாவும் இறைவனின் புறத்திலிருந்தே வருகிறது என்று திருக்குர்ஆனின் பல வசனங்கள் சான்றளிக்கின்றன.

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰىؕ‏

اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ‏

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன் 53:3,4)

قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ‌‌ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ‏

“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக! 

(அல்குர்ஆன் 3 :32)

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَـكُمْ‏

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! 

(அல்குர்ஆன் 47:33)

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا‏

உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள். 

(அல்குர்ஆன் 4:65)

நபிகள் நாயகம் தம் புறத்திலிருந்து சட்டம் இயற்ற இயலாது. அவர்கள் ஒரு சட்டம் சொன்னால் அது அல்லாஹ் சொன்ன – அருளிய சட்டமே. எனவே மேற்கண்ட ஹதீஸில் திருமணமாகிய நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடுவோருக்கு கல்லெறி தண்டனை என்று நபிகள் நாயகம் தீர்ப்பளிக்கின்றார்கள் எனில் இது அல்லாஹ் அருளிய சட்டமேயாகும்.

இதன்படி கல்லெறி தண்டனை தீர்ப்பை அல்லாஹ்வின் சட்டத்தின் படி உள்ள தீர்ப்பு என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. குர்ஆனோடு முரண்படவும் இல்லை.

வேறு பார்வை

ஹதீஸில் இடம் பெறும் பி கிதாபில்லாஹ் எனும் வார்த்தையை வைத்துக் கொண்டு குர்ஆனுக்கு முரண் எனக் கூறுவோருக்கான பதிலைத்தான் மேலே கண்டோம்.

இன்னொரு சாரார் இதை குர்ஆனுக்கு முரண் என்பதில் வேறொரு பார்வையை முன்வைக்கின்றனர்.

திருக்குர்ஆன் விபச்சாரம் எனும் குற்றத்திற்கு பொத்தாம் பொதுவாக கசையடி தண்டனையை உறுதிப்படுத்தி விட்டது.

ஆனால் மேற்கண்டோ ஹதீஸோ விபச்சாரத்திற்கு கசையடி – கல்லெறி தண்டனைகள் என இரு வகையான தண்டனைகளை வகைப்படுத்துகிறது.

குர்ஆன் விபச்சாரத்திற்கு ஒரு தண்டனையை நிர்ணயித்திருக்க நபிமொழி இரு தண்டனைகளை வகுப்பது குர்ஆனுக்கு முரணாகும் என்பது இவர்கள் முன் வைக்கும் மற்றொரு கோணமாகும்.

முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆனில் இல்லாத, அதில் உள்ளதை விட அதிகமானதை நபி சொல்கிறார் எனில் அதை குர்ஆனுக்கு முரணாகப் பார்க்கப் கூடாது.

ஏனெனில் குர்ஆனை விளக்கவே நபிகள் நாயகம் அனுப்பப் பட்டிருக்கிறார்கள்.

குர்ஆனில் உள்ள தகவலை விட அதிகமானதை நபி சொல்கிறார்கள் எனில் அவையாவும் குர்ஆனுக்கு நபிகள் நாயகம் அளிக்கும் விளக்கங்களாகும்.

குர்ஆனுக்கு நபிகள் நாயகம் அளிக்கும் விளக்கமும் இறைச்செய்தி எனவும் அவற்றை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இறைவன் கட்டளையிட்டுள்ளான். திருக்குர்ஆன் இவ்வாறே போதிக்கின்றது.

எனவே குர்ஆனில் இல்லாத, குர்ஆனில் உள்ளதை விட அதிகமான தகவலை குர்ஆனுக்கு முரண் என்று கருதுவது அறிவீனமாகும்.

இது பற்றி முந்தைய தொடரிலேயே விளக்கியுள்ளோம்.

அறிஞர் பி.ஜே அவர்கள் தனது தர்ஜுமா மொழிபெயர்ப்பில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

ஆண்களோ, பெண்களோ விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு நூறு கசையடிகளைத் தண்டனையாக வழங்க வேண்டும் என்று இவ்வசனம் (24:2) கூறுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை இரு வகைகளாகப் பிரித்துள்ளனர்.

2649- حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم 

أَنَّهُ أَمَرَ فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصِنْ بِجَلْدِ مِئَةٍ وَتَغْرِيبِ عَام

திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு மரண தண்டனையும், திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி என்ற தண்டனையும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

பார்க்க : புகாரி-2649 , 2696, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260, 2315, 5270, 5272, 6812, 6815, 6820, 6824, 6826, 6829

குர்ஆனில் விபச்சாரத்தின் தண்டனையாக நூறு கசையடிகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளதால் விபச்சாரக் குற்றத்துக்கு மரண தண்டனை கிடையாது எனச் சிலர் வாதிடுகின்றனர். விபச்சாரத்திற்கான தண்டனையை இரண்டு வகைகளாக ஹதீஸ்களில் பிரித்திருப்பது குர்ஆனுக்கு முரணானது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

“விபச்சாரம் செய்த ஆணுக்கும், பெண்ணுக்கும் நூறு கசையடிகள் தான் தண்டனை என்று அல்லாஹ் தெளிவாகக் கூறி விட்டான். திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் என்று அல்லாஹ் வேறுபடுத்திடவில்லை. எனவே விபச்சாரம் செய்வோர் திருமணம் ஆனவர்களோ, திருமணம் ஆகாதவர்களோ அவர்களுக்கு நூறு கசையடிகள் தான் தண்டனை; மரண தண்டனை கிடையாது” என்பது இவர்களின் வாதம்.

விபச்சாரக் குற்றத்துக்கு இரண்டு வகையான தண்டனை கிடையாது என்ற தங்களின் வாதத்தை வலுப்படுத்திட மற்றொரு சான்றையும் முன் வைக்கின்றனர்.

திருமணமான அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்தால் திருமணம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியளவு அப்பெண்களுக்கு விதிக்கப்படும் என்று 4:25 வசனத்தில் கூறப்படுகிறது.

நூறு கசையடிகள் அவர்களுக்குரிய தண்டனை என்று வைத்துக் கொண்டால் ஐம்பது கசையடியை அதில் பாதி என்று கூறலாம். அவர்களுக்குரிய தண்டனை மரண தண்டனை என்று வைத்துக் கொண்டால் அதில் பாதி என்பது என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்களை ஏற்க முடியாது என்பது சரியான நிலைப்பாடுதான். ஆனால் விபச்சாரத்துக்கு மரண தண்டனை என்பது குர்ஆனுக்கு முரணானது அல்ல என்பதால் இந்த வாதத்தை நாம் ஏற்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கு இரு வகையான தண்டனைகள் எனக் கூறியதும், நடைமுறைப்படுத்தியதும் குர்ஆனுக்கு எதிரானதா? இவர்களின் இந்தக் கேள்விகள் அர்த்தமுள்ளவை தாமா? என்றால் இவர்களின் வாதம் முற்றிலும் தவறாகும்.

 وَمَنْ لَّمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ يَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ مِّنْ فَتَيٰـتِكُمُ الْمُؤْمِنٰتِ‌ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِاِيْمَانِكُمْ‌ ؕ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍ‌ ۚ فَانْكِحُوْهُنَّ بِاِذْنِ اَهْلِهِنَّ وَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ بِالْمَعْرُوْفِ مُحْصَنٰتٍ غَيْرَ مُسٰفِحٰتٍ وَّلَا مُتَّخِذٰتِ اَخْدَانٍ‌ ؕ فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ اَ تَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ‌ ؕ ذٰ لِكَ لِمَنْ خَشِىَ الْعَنَتَ مِنْكُمْ‌ ؕ وَاَنْ تَصْبِرُوْا خَيْرٌ لَّكُمْ‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

4:25 வசனத்தின் ஒரு பகுதியாகிய “விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்” என்பதுதான் இவர்களது வாதத்திற்குரிய சான்றாக இருக்கிறது. திருக்குர்ஆனில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தால் அவர்களது வாதத்தை யாரும் மறுக்க முடியாது. மொழிபெயர்ப்பாளர்கள், தவறாக மொழிபெயர்த்ததன் அடிப்படையிலேயே இவ்வாதம் எழுப்பப்பட்டுள்ளது.

4:25 வசனத்தில் “விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்களுக்கான தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு உண்டு” என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அல்முஹ்ஸனாத் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இந்தச் சொல் பல அர்த்தங்களைக் கொண்டதாகும். பயன்படுத்தும் இடத்திற்கேற்ப இதன் பொருள் மாறுபடும். ஒரு இடத்தில் செய்த அர்த்தத்தை எல்லா இடத்திலும் செய்ய முடியாது.

இதை விளங்காத காரணத்தினால், அல்லது போதுமான கவனமில்லாத காரணத்தினால் இவ்வசனத்தில் இடம் பெறும் அல்முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு விவாகம் செய்யப்பட்ட பெண்கள் என்று பலரும் தமிழாக்கம் செய்து விட்டனர். இந்தத் தமிழாக்கத்தை அடிப்படையாக வைத்து மேற்கண்ட வாதம் எழுப்பப்படுகிறது.

அல்முஹ்ஸனாத் என்ற வார்த்தை திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களை நாம் ஆராய்ந்தால் இங்கே எவ்வாறு பொருள் கொள்வது சரியானதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும். 4:25 வசனத்தில் அல்முஹ்ஸனாத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது போலவே அதற்கு முந்தைய வசனமான 4:24 வசனத்திலும் இடம் பெற்றுள்ளது.

 وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ۚ كِتٰبَ اللّٰهِ عَلَيْكُمْ‌ۚ وَاُحِلَّ لَـكُمْ مَّا وَرَآءَ ذٰ لِكُمْ اَنْ تَبْتَـغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ‌ ؕ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِيْضَةً‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا تَرٰضَيْـتُمْ بِهٖ مِنْۢ بَعْدِ الْـفَرِيْضَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا‏

4:24 வசனம், வல்முஹ்ஸனாத் என்று துவங்குகின்றது. யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று அதற்கு முந்தைய வசனத்தில் பட்டியலிட்ட இறைவன், அதன் தொடர்ச்சியாக “முஹ்ஸனாத்களும் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள்” என்று கூறுகிறான்.

கணவனுடன் வாழ்பவள் அல்லது பிறரது மனைவி என்று இந்த இடத்தில் பொருள் கொள்ளலாம். அப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும். இன்னொருவனின் மனைவியாக இருப்பவளை மணந்து கொள்ளக் கூடாது என்று இவ்வசனத்தை நாம் புரிந்து கொள்கிறோம்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு 5:5 வசனத்தைப் பாருங்கள். இந்த வசனத்திலும் அதே அல்முஹ்ஸனாத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டவைகளைப் பற்றிக் கூறும்போது அந்தத் தொடரில் “முஹ்ஸனாத்களும் மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள்” என்று இவ்வசனம் கூறுகிறது.

“முஹ்ஸனாத்களை மணந்து கொள்ளலாகாது” என்று 4:24 வசனத்தில் கூறி விட்டு “முஹ்ஸனாத்களை மணந்து கொள்ளலாம்” என்று 5:5 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

 اَلْيَوْمَ اُحِلَّ لَـكُمُ الطَّيِّبٰتُ‌ ؕ وَطَعَامُ الَّذِيْنَ اُوْتُوْا الْكِتٰبَ حِلٌّ لَّـکُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ‌ وَالْمُحْصَنٰتُ مِنَ الْمُؤْمِنٰتِ وَالْمُحْصَنٰتُ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْـكِتٰبَ مِنْ قَبْلِكُمْ اِذَاۤ اٰتَيْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ مُحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ وَلَا مُتَّخِذِىْۤ اَخْدَانٍ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِالْاِيْمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهٗوَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ

4:24 வசனத்தில் முஹ்ஸனாத் என்பதற்கு என்ன அர்த்தம் செய்தோமோ அதையே 5:5 வசனத்தில் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் பிறருடைய மனைவியை மணப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று ஆகி விடும்.

5:5 வசனத்தில் “கணவனில்லாத பெண்கள் முஹ்ஸனாத்கள்” எனப்படுகின்றனர்.

4:24 வசனத்தில் “கணவனுடன் வாழும் பெண்கள் முஹ்ஸனாத்கள்” எனப்படுகின்றனர்.

இங்கே செய்த அர்த்தத்தை அங்கே செய்வதும், அங்கே செய்த அர்த்தத்தை இங்கே செய்வதும் அறியாமையாகும்.

அனுமதிக்கப்பட்டது, தடுக்கப்பட்டது என்ற இரு வேறு வாசக அமைப்புகளை வைத்து அதற்கேற்றவாறு பொருள் கொள்கிறோம். இரண்டுமே இவ்வார்த்தைக்குரிய அர்த்தம் என்றாலும் இடத்திற்கேற்ற ஒரு அர்த்தத்தைத்தான் செய்ய முடியும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed