தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?

வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா? அல்லது இஷா தொழ வேண்டுமா? அல்லது இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப் தொழலாமா?

உங்கள் கேள்விக்கான விடையைக் கீழ்க்காணும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி) அவர்கள் குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே!” என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அஸர் தொழவில்லை” என்று கூறினார்கள். நாங்கள் பத்ஹான் என்ற பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின் மக்ரிப் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 596

மக்ரிப் தொழுகையின் நேரம் வந்து விட்டாலும் அஸர் தொழுகையை அதற்கான நேரத்தில் தொழமுடியாமல் போனதால் அஸரை முதலில் தொழுத பின்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுதார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

இதை வைத்து தொழுகையைக் களாச் செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இதன் சரியான பொருளைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

எதிரிகளான இணைகற்பிப்போர் அகழ்ப்போரின் போது சூரியன் மறையும் வரை லுஹர் தொழமுடியாமல் செய்துவிட்டனர். போர் விஷயத்தில் மூமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன் என்ற 33:25 வசனம் அருளப்படுவதற்கு முன் இது நடந்ததாகும். லுஹர் தொழுகைக்காக இமாமத் சொல்லுமாறு பிலாலுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். லுஹர் நேரத்தில் எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவாவார்களோ அதுபோல் லுஹர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் அஸர் தொழுகைக்கு இகாமத் சொல்லி அஸர் நேரத்தில் தொழுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸர் தொழுதார்கள். பின்னர் மக்ரிபுக்கு இகாமத் சொல்லி அதன் உரிய நேரத்தில் தொழுவது போல் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி)

நூல் : நஸயீ 661

போர்க்களத்திலும் உரிய நேரத்தில் தொழவேண்டும் என்ற கட்டளை (4:102 வசனம்) அருளப்படுவதற்கு முன்னர் இது நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட பின் போர்க்களத்திலும் நேரம் தவறித் தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது.

தூக்கம், மறதி ஆகிய காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்கு அனுமதியில்லை. மேலும் பயணத்தில் லுஹர் தொழுகையை அஸருடனும், மக்ரிப் தொழுகையை இஷாவுடனும் சேர்த்து தொழுவதற்கு அனுமதியுள்ளது. சில நேரங்களில் பயணத்தில் இல்லாமல் உள்ளூரில் இருக்கும் போது இப்படி ஜம்வு செய்வதற்கும் அனுமதி உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்துகளாகவும், லுஹர் அஸரை எட்டு ரக்அத்துகளாகவும் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 543

மதீனாவில் பயமோ, மழையோ இல்லாத போது லுஹரையும் அஸரையும் ஒரு நேரத்திலும், மக்ரிபையும் இஷாவையும் ஒரு நேரத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுததாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். இதற்குக் காரணம் என்ன என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. தனது சமுதாயத்துக்குச் சிரமம் தரக்கூடாது என்பதுதான் காரணம் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் ஜுபைர் (ரலி)

நூல் : திர்மிதீ 172

மார்க்கம் அனுமதித்துள்ள காரணத்துக்காக தொழுகையை உரிய நேரத்தில் தொழமுடியாமல் போனால் அத்தொழுகைகளை வரிசைக்கிரமமாகவே தொழவேண்டும்.

அகழ்ப்போர் குறித்த புகாரி 596வது ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

தூக்கம் போன்ற காரணத்தால் மக்ரிப் நேரம் முடிந்து இஷா நேரம் ஆரம்பமாகி விட்டது என்றால் மக்ரிபை முடித்து விட்டுத்தான் இஷா தொழ வேண்டும்.

வேண்டுமென்றே மக்ரிபை ஒருவர் தொழாமல் போனால் அவர் அதை வேறு நேரத்தில் தொழ முடியாது. அத்தொழுகையை விட்டதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டுவிட்டு இஷா தொழுகையை தொழலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed