முன் பின் சுன்னத்கள் யாவை?
தொழுகையின் முன், பின் சுன்னத் தொழுகையின் அவசியம் மற்றும் ஒவ்வொரு தொழுகையிலும் எத்தனை ரக்கத் சுன்னதாகத் தொழ வேண்டும்.
பஜ்ருடைய சுன்னத்
பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபரியான தொழுகையில் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போல் வேறு எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 1163, முஸ்லிம் 1191
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன்ன சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
அறிவிப்பவர் : கைஸ் (ரலி)
நூல் : இப்னுஹிப்பான் 2471
சுப்ஹுத் தொழுகைக்குப் பின் சுன்னத் தொழுகை இல்லை. சுப்ஹுத் தொழுது விட்டால் சூரியன் உதிக்கும் வரை எந்த உபரியான தொழுகைகளையும் தொழக் கூடாது.
சுபுஹ் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும், அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி 581, முஸ்லிம் 1367
லுஹருடைய சுன்னத்
லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழலாம். இது போல லுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்கள் : புகாரீ 937, முஸ்லிம் 1200
லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும், சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1182, நஸயீ 1736, அபூதாவூத் 1062, அஹ்மத் 23204
பலவீனமான ஹதீஸ்
அஸருடைய முன்சுன்னத்
அஸருடைய முன் சுன்னத் நான்கு ரக்அத்களாகும்.
நபி (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மூஃமின்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை (இரண்டிரண்டாக) பிரிப்பார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: திர்மிதீ 394
இது பலவீனமான செய்தி..
இதன் அறிவிப்பாளர் தொடரில் ஆஸிம் பின் லமுரா என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.
و قال ابن عدي بتليينه فقال عاصم بن ضمرة لم أذكر له حديث لكثرة ما يروي عن علي مما لا يتابعه الناس عليه والذي يرويه عن عاصم قوم ثقات البلية من عاصم وليس ممن يروون عنه، و هو وسط.
و وذكره ابن حبان في المجروحين وقال: كان رديئ الحفظ فاحش الخطأ، يرفع عن علي، فلما فحش ذلك في روايته استحق الترك على أنه أحسن حالا من الحارث.
இப்னு ஹிப்பான், இப்னு அதீ, இப்னுல் ஜவ்சி போன்ற அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என விமர்சித்துள்ளனர். இவர் மனனத் தன்மையில் மோசமானவர். மிகக் கடுமையாக மூளை குழம்பியவர். அலீ (ரலி) அவர்கள் வழியாக நபி சொன்னதாக தவறாக பல செய்திகளை அறிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட செய்தியும் இவர் வழியாகத்தான் வந்துள்ளது. எனவே இது பலவீனமானது..
மஃரிபுடைய சுன்னத்
மஃரிப் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள், பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.
மஃரிபிற்கு முன்னர் தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு மூன்றாவது முறை விரும்பியவர் தொழட்டும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)
நூல்: புகாரீ 1183, அபூதாவூத் 1089,அஹ்மத் 19643
அபூதாவுதின் (1089) அறிவிப்பில் மஃரிபிற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுங்கள் என்று இடம் பெற்றுள்ளது.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.” (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரீ 937
இஷாவுடைய சுன்னத்
இஷாத் தொழுகைக்கு முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் அல்லது நான்கு ரக்அத்கள் ஆகும். இஷாவுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்கள் ஆகும்.
ஒவ்வொரு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று மூன்று முறை கூறினார்கள். (மூன்றாம் முறை) விரும்பியவர்கள் தொழலாம்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி
நூல்கள் : புகாரீ 624, முஸ்லிம் 1384
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு என்று கூறியுள்ளார்கள். ஆனால் எத்தனை ரக்அத்கள் என்று தெளிவுபடுத்தவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தான தொழுகைகளைக் கவனித்தால் இரண்டும், நான்கும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இதன் அடிப்படையில் நாம் இஷாவுடைய சுன்னத்தை இரண்டாக அல்லது நான்காகத் தொழுது கொள்ளலாம்.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்கள்.” (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 937
சுன்னத் தொழுகையின் சிறப்பு
ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வமூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரைப் பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும்.
எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன்.
அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன்.
முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 6502
உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் ஏற்படலாம். இந்தக் குறைபாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கி விடக் கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர் : தமீமுத் தாரி (ரலி)
நூல் : தாரமீ 1321
கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி விடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன.
யார் இரவிலும், பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி)
நூல் : முஸ்லிம் 1198