முன் கைகளைக் கழுவுதல்
உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும்.
… ‘நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)
நூல்: நஸயீ 147
வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல்
இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிய பின் வாயையும், மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, ‘தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரீ 160, 164
வாய் கொப்புளிப்பதற்கும், மூக்கைச் சுத்தம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு தடவை தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அதில் ஒரு பகுதியை வாயிலும், மற்றொரு பகுதியை மூக்கிலும் செலுத்திச் சுத்தம் செய்யலாம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாய்கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்…
(பின்னர்) ‘இப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ய நான் பார்த்தேன்’ எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்
நூல்: புகாரீ 140
ஒரு கைத் தண்ணீர் எடுக்கும் போது வலது கையால் எடுத்து இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ‘தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு வாய் கொப்புளித்து, மூக்கையும் சீந்தினார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரீ 160, 164
அலீ (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து வரச் செய்து, வாய்கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி, இடது கையால் சுத்தம் செய்தார்கள். பின்னர் ‘இது தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையாகும்’என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்து கைர்
நூல்கள்: நஸயீ 90, அஹ்மத் 1078, தாரமீ 696