முதுகைத் தொட்டு ஜமாஅத்தில் சேரலாமா?
ஒருவர் தனியாகத் தொழும் போது அவருடன் இன்னொருவர் சேரலாமா? என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம்.
என் சிறிய தாயாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் நான் தங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தங்கியிருந்தார்கள்.
அவர்கள் இஷா தொழுவித்து விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரகஅத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள்.
பின்னர் எழுந்து சின்னப் பையன் தூங்கி விட்டானா? அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள்.
உடனே நான் எழுந்து (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் போய் நின்று கொண்டேன்.
உடனே (தொழுது கொண்டிருக்கும்போதே) என்னை இழுத்து தம் வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு (முதலில்) ஐந்து ரக்அத்களும் பின்னர் இரண்டு ரக்அத்களும் தொழுதுவிட்டு, அவர்களின் குறட்டைச் சப்தத்தை நான் கேட்குமளவுக்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். பிறகு (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 117, 138, 183, 697, 698, 699, 726, 728, 859, 992, 1198, 4570, 4571, 4572, 5919, 6316
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாகத் தொழும் எண்ணத்துடன் தான் நின்றார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) தம்மோடு சேர்ந்து தொழுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அப்படி இருந்தும் இப்னு அப்பாஸ் (ரலி) தன்னோடு சேர்ந்து தொழுவதை அறிந்தவுடன் அதை அங்கீகரித்துள்ளார்கள் என்பதை இதில் இருந்து அறியலாம். இமாமாக இருப்பவர் இமாம் என்ற எண்ணத்துடன் தொழுகையைத் துவக்கி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனியாகத் தொழுபவர் இன்னொருவர் வந்து சேரும் போது இமாமாக ஆகலாம் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.
ஒருவருடன் இன்னொருவர் சேர்ந்து தொழும் போது இமாமுக்கு வலது புறம் நிற்க வேண்டும். இந்த விதிக்கு முரணாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இடது புறம் நிற்கிறார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பிடித்து இழுத்து வலது புறம் திருப்பினார்கள் என்பது இந்த ஹதீஸில் இருந்து கிடைக்கும் இன்னொரு விஷயம்.
அதாவது தொழுகை முறையில் ஒருவர் ஏதாவது முறைகேடு செய்தால் தொழுது கொண்டிருக்கும் இமாம் அதைச் சரி செய்யலாம்; அதனால் தொழுகைக்குப் பாதிப்பு ஏற்படாது என்பது இதில் இருந்து தெரிகிறது. ஒருவர் மட்டும் இமாமுடன் சேர்ந்து தொழும் போது இமாமுடன் ஒட்டி வலது புறம் நிற்க வேண்டும். மேலும் ஒருவர் வந்து விட்டால் அவர்கள் இருவரும் இமாமுக்குப் பின்னால் செல்ல வேண்டும். பின்னால் செல்ல வசதி இல்லாவிட்டால் இமாம் முன்னால் செல்ல வேண்டும்.
என் பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் சிறிதைச் சாப்பிட்டு விட்டுப் பின்னர், எழுங்கள்! உங்களுக்காக நான் தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள்.
நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்துப் போயிருந்த எங்களின் பாயை எடுத்து அதில் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு திரும்பிச் சென்றார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 380, 727, 860, 874, 727, 860, 874
ஒருவர் தனியாகத் தொழும் போது இன்னொருவர் சேர்வதாக இருந்தால் அவர் முதுகில் குத்தக் கூடாது. மாறாக அவருடன் ஒட்டி அவருக்கு வலது புறம் நிற்க வேண்டும். நம்முடன் ஒருவர் சேர்ந்து தொழவுள்ளார் என்று முதலாமவர் இதை வைத்து புரிந்து கொள்ள வேண்டும். இவ்விருவரும் தொழுது கொண்டிருக்கும் போது மற்றொருவர் வந்தால் இப்போது அதற்கேற்ப வரிசையை அமைக்க வேண்டும். அதாவது இமாமுடன் ஒட்டி நிற்பவரும், இமாமும் பிரிய வேண்டும். ஒட்டி நின்றவர், மூன்றாவதாக வந்தவருடன் சேர வேண்டும்.
பின்னால் இடம் இருந்தால் மூன்றாவது வருபவர் இமாமைத் தொடாமல் அவருடன் ஒட்டி நிற்பவரைத் தொட வேண்டும். அவர் புரிந்து கொண்டு பின்னால் வந்து விடுவார். பின்னால் நகர இடமில்லை என்றால் இமாம் முன்னால் நகர வேண்டும். இது போன்ற நேரத்தில் இமாமைத் தொடலாம். அவர் புரிந்து கொண்டு முன்னால் சென்று விட வேண்டும்.
இப்படி உணர்த்தாவிட்டால் மார்க்கம் சொல்கின்ற வகையில் வரிசை அமையாது. தொழுகையில் இருக்கும் போதே வரிசையைச் சரி செய்வதற்காக காதைப் பிடித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இழுத்துள்ளதால் தொடுவது அதை விடக் குறைந்தது தான். தனியாகத் தொழுபவர் எப்போது இமாமாகி விடுகிறாரோ அவர் இமாமுக்கு உரிய கடமைகளைச் செய்தாக வேண்டும். பின்னால் உள்ளவர்களுக்குக் கேட்கும் வகையில் ஓதுதலையும், தஸ்பீஹ் போன்றவற்றையும் அமைத்துக் கொள்ள வேண்டும்