முடியைக் குறைப்பது என்றால், எல்லா பக்கத்திலுமா?
உம்ராவை முடிக்கும்போது சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் ஆண்களுக்கு தலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் மட்டும் சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளலாமா? தலை முழுதுமே ஏகத்துக்கும் சிறிது குறைக்க வேண்டுமா?
தலை முழுவதும் சிறிதளவு
ஹஜ் அல்லாத காலங்களில் உம்ரா செய்பவர்களும், ஹஜ் காலத்தில் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுபவர்களும் மழிப்பது தான் சிறந்தது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனக் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்” என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்….” என்றனர். நபி (ஸல்) அவர்கள் “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 1727
தமத்துஃ, கிரான் முறையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ராவை நிறைவேற்ற வேண்டும். அப்போது அவர்கள் முடியைக் குறைப்பது சுன்னத்தாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்க்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள்.
(நூல்: புகாரி 1568)
இதன் பின்னர் ஹஜ்ஜை முடித்ததும் மேற்கண்ட 1727 ஹதீஸின் அடிப்படையில் முழுமையாக மழித்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாமலும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.
அல்குர்ஆன் 48:27
முடியைக் குறைத்தல் என்று தான் திருக்குர்ஆன் வசனத்திலும், ஹதீஸிலும் சொல்லப்படுகின்றது. முடியைக் குறைத்தல் என்றால், ஆண்களைப் பொறுத்த வரை முடி வெட்டும் போது எப்படிக் குறைப்பார்களோ அதுபோன்று குறைத்துக் கொள்ளலாம்.
பெண்களுக்கு மழித்தல் கிடையாது; முடியைக் குறைத்தல் மட்டுமே உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால் சிறிதளவு கத்தரித்துக் கொள்ளுதல் போதுமானது.
தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு முடியைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் 1694