முகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே
அதிகமான முஸ்லிம்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வசனங்களில் இவ்வசனமும் (33:53) ஒன்றாகும். இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு பெண்கள் முகத்தை மறைப்பது அவசியம் என அவர்கள் வாதிடுகின்றனர்.
இது குறித்து விபரமாக அறிந்து கொள்வோம்.
பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்பதை 472வது குறிப்பில் நாம் விளக்கியுள்ளோம். அதற்கான ஆதாரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்காமல் இருந்துள்ளனர் என்பதற்கு நாம் எவ்வளவு ஆதாரங்களை முன்வைத்தாலும் அவற்றுக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் அளிக்கும் ஒரே பதில் இது தான்:
ஹிஜாப் குறித்து பேசும் இவ்வசனத்தில் பெண்கள் முழுமையாக அன்னிய ஆண்களிடமிருந்து தம்மை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுவதால் பெண்கள் முகத்தை மறைக்காமல் இருந்ததாக அறிவிக்கப்படும் எல்லா சம்பவங்களும் இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னர் நடந்தது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஹிஜாபுடைய வசனம் என்று சொல்லப்படும் இவ்வசனம் (33:53) கூறுவதென்ன?
நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.
திருக்குர்ஆன் 33 : 53
திரைக்கு அப்பால் இருந்தே கேட்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுவதால் பெண்கள் முகத்தை மறைத்தே ஆக வேண்டும் என்பது இவர்களின் வாதம்.
இவ்வசனம் பொதுவாக எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் உரிய சட்டமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியருக்கு மட்டுமே உள்ள சிறப்புச் சட்டம் என்பதை இவ்வசனமே தெளிவாகச் சொல்கிறது.
இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள
நபியின் வீடுகளில் என்ற வாசகமும்,
(நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள் என்ற வாசகமும்,
அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது என்ற வாசகமும்,
அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கக் கூடாது என்ற வாசகமும்
இது நபியின் மனைவியருக்கான கூடுதல் கட்டுப்பாடு என்பதைத் தெளிவாகச் சொல்கின்றன.
இவ்வசனத்தில் நபியின் மரணத்துக்குப் பின் அவர்களின் மனைவியரை யாரும் திருமணம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் கட்டுப்பாடு நபியின் மனைவியருக்கு மட்டும் உரியது என்பதைச் சரியாகப் புரிந்து கொள்கின்றனர். இதே வசனத்தில் கூறப்படும் மற்றொரு கட்டுப்பாடு அனைவருக்கும் உரியது என்று கூறி இவ்வசனத்தின் கருத்தை வளைக்கின்றனர்.
ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய விஷயங்களில் நபியின் மனைவியருக்கு கூடுதல் கட்டுப்பாடு உள்ளது என்பதை இதே அத்தியாயத்தில் உள்ள பின்வரும் 30 முதல் 33 வரை உள்ள வசனங்களில் இருந்தும் அறியலாம்.
30. நபியின் மனைவியரே! உங்களில் யாரேனும் தெளிவான வெட்கக்கேடானதைச் செய்தால் அவருக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும். அது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே இருக்கிறது.
31. (நபியின் மனைவியரான) உங்களில் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நல்லறம் செய்பவருக்கு அவரது கூலியை இரண்டு தடவை வழங்குவோம். அவருக்கு மதிப்புமிக்க உணவையும் தயாரித்துள்ளோம்.
32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
33. உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
இவ்வசனங்கள் ஒவ்வொன்றும் நபியின் மனைவியருக்கு கூடுதல் கட்டுப்பாடு உள்ளது என்பதற்குத் தெளிவான சான்றுகளாக உள்ளன.
30வது வசனத்தில் நபியின் மனைவியரே! உங்களில் யாரேனும் தெளிவான வெட்கக்கேடானதைச் செய்தால் அவருக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற பெண்களை விட நபியின் மனைவியர் செய்யும் ஒழுக்கம் சம்மந்தமான குற்றத்துக்கு மற்றவர்களை விட இரு மடங்கு வேதனை உண்டு என்பது இதில் இருந்து தெரிகிறது.
31வது வசனத்தில் நபியின் மனைவியருக்கு இரு மடங்கு பரிசுகள் என்று சொல்லப்பட்டுள்ளது.
32வது வசனத்தில் நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒழுக்கம் சம்மந்தப்பட்ட விஷயத்தில் நபியின் மனைவிமார்கள் மற்ற பெண்களைப் போன்றவர்கள் அல்லர் என்று அல்லாஹ் தெளிவாகவே இவ்வசனத்தில் சொல்கிறான்.
33வது வசனத்தில் உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற பெண்கள் தமது தேவைகளுக்காக வெளியே செல்லலாம். ஆனால் நபியின் மனைவியர் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இவ்வசனங்களைச் சிந்திக்கும்போது முகத்தை மறைத்தலும் நபியின் மனைவியருக்கு மட்டும் உள்ள சிறப்புச் சட்டம் என்பது பளிச்சென்று தெரிகின்றது.
மேலும் இந்தச் சட்டம் நபியின் மனைவியருக்கு மட்டும் உரியது தான் என்று ஹதீஸ்களிலும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும், கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை “ஹிஜாப்” (திரையிட்டு இருக்கும்படி) கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே! என்று நான் சொன்னேன். அப்போது அல்லாஹ் “ஹிஜாப்” (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.
நூல் : புகாரி 4790, 4483
அனைத்துப் பெண்களும் தம்மை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டமியற்றுமாறு உமர் (ரலி) அவர்கள் கோரவில்லை. இறை நம்பிக்கையாளர்களின் அன்னையருக்கு அதாவது நபியின் மனைவியருக்கு இந்தக் கட்டுப்பட்டை விதிக்குமாறுதான் கோரினார்கள். அதற்காகவே இவ்வசனம் இறங்கியது.
இவ்வசனம் நபியின் குடும்பத்தார் சம்மந்தமாகவே அருளப்பட்டது என்பதற்கு பின்வரும் ஹதீசும் ஆதாரமாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்தபோது திருமண விருந்து வைத்தார்கள். அப்போது அனைவரும் விருந்து சாப்பிட்டுவிட்டு சென்ற பிறகும் ஒரு குழுவினர் நபியுடைய வீட்டிற்குள் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். இது நபியவர்களுக்கு மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
(எல்லாரும் புறப்பட்டுச் சென்ற பிறகு) மக்களில் ஒரு குழுவினர் மட்டும் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் (ஸைனப் (ரலி) அவர்கள்) தமது முகத்தைச் சுவர் பக்கம் திருப்பிக்கொண்டிருந்தார். அ(ங்கு அமர்ந்திருந்த)வர்கள் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்தனர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுத் தம்முடைய மற்றத் துணைவியரிடம் சென்று சலாம் (முகமன்) சொல்லி (நலம் விசாரித்து)விட்டுத் திரும்பி வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி வந்ததைக் கண்டபோது, அக்குழுவினர் நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்து விட்டோம் என்று எண்ணினர். ஆகவே, வீட்டு வாசலை நோக்கி விரைந்துவந்து அனைவரும் வெளியேறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து திரையைத் தொங்க விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்து கொண்டார்கள். நான் அந்த அறையில் அமர்ந்து கொண்டிருந்தேன். சிறிது நேரம்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்திருப்பார்கள். அதற்குள் வெளியேறி என்னிடம் வந்தார்கள். அப்போது (அவர்களுக்கு) இந்த (33:53ஆவது) வசனம் அருளப்பெற்றிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்து மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (அங்கு நடக்கும்) விருந்திற்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது” என்பதே அந்த வனமாகும்.
“இந்த வசனம் இறங்கிய சூழ்நிலை குறித்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியர் “ஹிஜாப்” (திரை) இட்டு மறைக்கப்பட்டது தொடர்பாகவும் மக்களிலேயே நன்கறிந்தவன் நானே ஆவேன்” என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 2803
இதே சம்பவம் வேறு வார்த்தைகளில் புகாரி 5466 வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது.
இவ்வசனம் இறங்கிய சூழ்நிலையும் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகமும் முகத்தை மறைத்தல் என்ற சட்டம் நபியின் மனைவியருக்கு மட்டும் உரியதாகும் என்பதைத் தெளிவாக கூறுகிறது.