மாற்று மதத்தவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா?
மாற்று மதத்தவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா?
மாற்று மத நண்பர்கள் இருவர் நோன்பு வைத்தும், தொழுதும் வந்தார்கள். அதை நமது சகோதரர் ஒருவர் நீங்கள் நோன்பு நோற்பதும், தொழுவதும் பாவம். அதனால் இனி நோன்பு வைக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அவர்களிடம் நீங்கள் சுன்னத் செய்யவில்லை. கலிமா சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா? அவர்களுக்கும் நன்மை கிடைக்குமா?
இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. நாம் இத்தகையோரைத் தடுக்கலாமா? என்பது முதல் விஷயம்.
இதனால் அவருக்குப் பயன் ஏற்படுமா? என்பது இரண்டாவது விஷயம்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாத்தை ஏற்காத சிலர் முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழுகையிலும், இன்ன பிற வணக்கங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இன்னும் சொல்லப் போனால் போர்க் களத்திற்குக் கூட நபிகள் நாயகத்துடன் சென்றனர்.
இவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. சுயநலனுக்காகவும், உலக ஆதாயம் கருதியும் இப்படிச் சிலர் நடிக்கிறார்கள் என்று குர்ஆன் மூலம் நபிகள் நாயகத்திற்கு அறிவிக்கப் பட்டது. அவர்கள் யார் என்பதும் தெரிவிக்கப்பட்டது.
ஆயினும் அவர்களில் ஒருவரையும் நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டாம் என்று தடுக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசிக் காலம் வரையிலும் இத்தகையோர் இருந்தனர்.
நீங்கள் சுட்டிக் காட்டுவோர் அவ்வாறு நடிக்கின்ற சந்தர்ப்பவாதிகள் அல்லர். இஸ்லாத்தில் சில காரியங்கள் அவர்களுக்கு உண்மையாகவே பிடித்துள்ளன. அதில் கவரப்பட்டு அதைக் கடைப் பிடிக்கும் போது இன்னும் பல அம்சங்களை அவர்கள் உள்ளூர விரும்பலாம்.
முஸ்லிமுக்குப் பிறந்து விட்டு சமாதிகளை வணங்கு வோரை விட இவர்கள் மேலானவர்கள் எனலாம்.
வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கும், சுன்னத் செய்வதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சுன்னத் செய்வது என்பது விரும்பத்தக்க நன்மை பயக்கும் ஒரு காரியமாகத் தான் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. கட்டாயக் கடமையாக கூறப்படவில்லை. சுன்னத் என்ற சொல்லுக்கு கட்டாயக் கடமையில்லாத நிலையில் விரும்பத்தக்க நபி வழி’ என்பதே பொருள்.
இஸ்லாமியக் கொள்கை முழக்கமான ‘வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்’ என்பதை நம்பிக்கை கொண்டு வாயால் மொழிவது அவசியம் தான்.
அவர் நம்பிக்கை கொண்டவரா? இல்லையா? என்பதற்கு நாம் யாரும் சான்றிதழ் கொடுக்க முடியாது. ஆனால் தொழுகை, நோன்பு மூலம் நம்பிக்கை இருப்பதை வெளிப்படுத்துகிறார்.
யார் நமது தொழுகையைத் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுத்ததை உண்கிறாரோ அவர் முஸ்லிம். முஸ்லிமுக்கு உரிய எல்லா உரிமையும் அவ ருக்கு உண்டு என்பது நபி மொழி.
(நூல்: புகாரி 378)
எனவே இத்தகையோரைத் தடுக்கக் கூடாது. தடுப்பது தான் பாவம்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெகு வேகமாக இஸ்லாம் பரவுவதைக் கேள்விப்பட்டு பூரிப்படைகிறோம்.
பெரும்பாலும் எவ்வாறு பரவுகிறது?
பள்ளிவாசலுக்கு வந்து ஓரிரு நாட்கள் முஸ்லிம்களின் தொழுகை முறையைப் பார்ப்பார்கள். பிறகு அவர்களும் முஸ்லிம்கள் செய்வதைப் போல் உளூச் செய்து சேர்ந்து தொழுவார்கள். அதில் கிடைக்கும் மன நிறைவால் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறார்கள். வேறு வகையிலும் இஸ்லாம் பரவினாலும் இப்படித் தான் அதிக அளவில் பரவுகிறது.
எனவே, இத்தகையோரை விரட்டியடிக்காது ஒழுங்குகளைச் சொல்லிக் கொடுத்தால் நமக்கே அறிவுரை கூறும் அளவுக்கு உயர்வார்கள்.
இது தடுப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.
தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைச் சிரமப் பட்டு நிறைவேற்றும் அந்தச் சகோதரர்கள் மறுமையில் அதற்கான பலனை அடைய வேண்டுமானால் வேறு கடவுள் வழிபாடுகளை அவர்கள் விட்டு விட வேண்டும். பல கடவுள் நம்பிக்கையும், ஒரு கடவுள் நம்பிக்கையும் ஒரு உள்ளத்தில் இருக்கக் கூடாது என்பது இறைவன் கவனிக்கும் முதல் விஷயமாகும்.
இவ்வணக்கங்களுக்கு முன்னர் ஒரே ஒரு கடவுள் தான் உலகிற்கு இருக்க முடியும். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவனது தூதர் என்பதையும் நம்புவார் களானால் இந்தச் செயல் அர்த்தமுள்ளதாக அமையும்.