மார்க்க சபைகளில் பங்கேர்ப்பதின் முக்கியத்துவம்
மார்க்கத்தை அறியவும், அதன்படி வாழவும், அடுத்தவருக்கு அறிவிக்கவும் தேவைப்படும் வழிமுறைகள் அல்லாஹ்வின் தூதருடைய வாழ்வில் இருக்கின்றன. இவ்வகையில், இறைத்தூதரிடம் வந்து மக்கள் மார்க்கம் கற்றுக் கொண்ட சம்பவங்கள் உள்ளன. பல்வேறு தருணங்களில் நபிகளாரே மக்கள் கூடியிருக்கும் இடங்களுக்குச் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள்ளார்கள்; மக்களை ஒன்றுதிரளச் செய்தும் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். இவற்றின் மூலம் மார்க்கம் அறியும் வாய்ப்பு அன்றைய மக்களுக்கு கிடைத்தது. இதைப் பின்வரும் சம்பவங்கள் வாயிலாக விளங்கலாம்.
நானும் அன்சாரிகளில் ஒருவரான என் அண்டை வீட்டுக்காரரும் பனூஉமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்தோம். -அது மதீனாவின் மேடான கிராமப் பகுதிகளில் ஒன்றாகும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அன்னாரின் அவைக்கு) நாங்கள் (இருவரும்) முறைவைத்துச் சென்று கொண்டிருந்தோம். அவர் ஒருநாள் செல்வார்; நான் ஒருநாள் செல்வேன். நான் சென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும்போதும் அவ்வாறே செய்வார்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி (89)
நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே மிம்பரில் எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குச் செய்தி அறிவித்தார்கள். (படைப்பின் தொடக்கம் முதல் மறுமையில்) சொர்க்கவாசிகள் தமது தங்குமிடங்களில் புகும் வரையும் நரகவாசிகள் தமது தங்குமிடங்களில் புகும் வரையும் அறிவித்தார்கள். அதை நினைவில் வைத்தவர் நினைவில் வைத்துக் கொண்டார்; அதை மறந்தவர் மறந்துவிட்டார்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி (3192)
இப்படி, நாம் ஒன்றுகூடி மார்க்கம் தெரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதலும், ஆர்வமூட்டலும் குர்ஆன் ஹதீஸில் அதிகம் உள்ளது. ஜும்ஆத் தொழுகை, பெருநாள் தொழுகை போன்ற வணக்கங்களில் உரை நிகழ்த்துவதற்கு முக்கியத்துவம் தந்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
ஆயினும், அநேக மக்கள் மார்க்க அவைகளில் கலந்து கொள்ளாமல் கவனக் குறைவாக இருக்கிறார்கள்; ஈடுபாடின்றி ஒதுங்கி விடுகிறார்கள். அதனால் கிடைக்கும் நன்மைகளை அறியாததும் குறுகிய கண்ணோட்டமும் இதற்கு முக்கியக் காரணம் எனலாம். இது குறித்து சில செய்திகளை இப்போது இந்த உரையில் நாம் பார்போம்.
அல்லாஹ் நம்மை நினைவு கூறுவான்
வீடு, அலுவலகம், கடை என்று எங்காவது தனியாக அமர்ந்து தீன் பற்றி அறிந்து கொள்வதற்கும் நன்மை உண்டு என்றாலும், மக்களோடு மக்களாக இருந்து மார்க்கம் குறித்துப் பேசும்போது, அல்லாஹ்வும் அவ்வாறே நம்மை நினைவு கூர்வான். பரிசுத்தமான அடியார்களான வானவர்களிடம் நம்மைப் பற்றிப் பெருமையாகப் பேசுவான்.
என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன்.
அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (7405)
வல்லவனிடம் நற்பெயரும் நற்சான்றும் பெறும் இடம்
பள்ளிவாசலில் வட்டமாக அமர்ந்திருந்த ஒரு குழுவினரிடம் முஆவியா (ரலி) அவர்கள் புறப்பட்டுவந்து, “நீங்கள் இங்கு அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், “அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்துள்ளோம்‘’ என்று கூறினர். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்‘’ என்று கூறினர்.
முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்கள் மீது சந்தேகப்பட்டு நான் உங்களைச் சத்தியமிடச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் எவரும் என்னைவிடக் குறைவான ஹதீஸ்களை அவர்களிடமிருந்து அறிவிக்கவில்லை. (நானே மிகக் குறைவான ஹதீஸ்களை அறிவித்தவன்.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வட்டமாக அமர்ந்திருந்த தம் தோழர்களில் சிலரிடம் வந்து, “நீங்கள் அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், “அல்லாஹ் எங்களுக்கு இஸ்லாத்திற்கு நேர்வழி காட்டியதற்காகவும், எங்களுக்கு அருட்கொடைகள் புரிந்ததற்காகவும் அவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்திருக்கிறோம்‘’ என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?’’ என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்‘’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அறிந்துகொள்ளுங்கள்! உங்கள்மீது சந்தேகம் கொண்டுச் சத்தியமிட்டு உங்களிடம் நான் கேட்கவில்லை. மாறாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களைப் பற்றி வானவர்களிடம் பெருமையுடன் பேசிக் கொள்கிறான்’’ என்று தெரிவித்தார் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (5233)
தங்களைப் பற்றி பிறர் நல்ல முறையில் நினைக்க வேண்டும்; நம்மீது நல்லெண்ணம் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்கள், அண்ட சராசரங்கள் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லவனிடம் நற்பெயரும் நற்சான்றும் பெறும் விஷயத்தில் ஆர்வமின்றி இருக்கிறார்கள். இனியாவது தங்களை மாற்றிக் கொள்ள முன்வருவார்களா?
இறக்கைகளால் சூழ்ந்து கொள்ளும் வானவர்கள்
அல்லாஹ்விடம் கூடுதல் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர். அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன் அவ்வானவர்களும் அமர்ந்து கொள்கின்றனர். அவர்களில் சிலர் வேறு சிலரைத் தம் இறக்கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல் வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர். (இறைவனை நினைவுகூரும்) அம்மக்கள் கலைந்து சென்றதும் அ(ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களிடம் – அவர்களை நன்கறிந்திருந்தும் – “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்று கேட்கிறான். அதற்கு வானவர்கள், “பூமியிலுள்ள உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னை ஏகன் என்று கூறிக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும், உன்னிடத்தில் வேண்டிக் கொண்டும் இருக்கின்றனர்’’ என்று கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றனர்?’’ என்று (தனக்குத் தெரியாதது போலக்) கேட்கிறான். வானவர்கள், “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை வேண்டுகின்றனர்’’ என்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் என் சொர்க்கத்தைப் பார்த்ததுண்டா?’’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை, இறைவா!’’ என்று பதிலளிப்பார்கள்.
அதற்கு இறைவன், “அவ்வாறாயின், என் சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’’ என்று கூறுவான். மேலும், “உன்னிடம் அவர்கள் பாதுகாப்புக் கோருகின்றனர்’’ என்றும் வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் எதிலிருந்து (காக்குமாறு) பாதுகாப்புக் கோருகின்றனர்?’’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “உன் நரகத்திலிருந்து, இறைவா!’’ என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், “அவர்கள் எனது நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?’’ என்று கேட்பான். வானவர்கள், “இல்லை’’ என்பார்கள். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் என் நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’’ என்று கூறுவான். மேலும், “அவர்கள் உன்னிடம் பாவ மன்னிப்புக் கோருகிறார்கள்’’ என்றும் வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன், “அவர்களுடைய பாவங்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் வேண்டியதையும் அவர்களுக்கு நான் வழங்கி விட்டேன். அவர்கள் எதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்களோ அதிலிருந்து அவர்களை நான் காப்பாற்றி விட்டேன்’’ என்று கூறுவான்.
அப்போது வானவர்கள், “இறைவா! (அந்த) சபையோரிடையே அதிகப் பாவங்கள் புரியும் இன்ன மனிதன் இருந்தான். அவன் அவ்வழியே கடந்து சென்றபோது அவர்களுடன் அமர்ந்து கொண்டான்’’ என்று கூறுகின்றனர். அதற்கு இறைவன், “அவனையும் நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் ஒரு கூட்டத்தார் ஆவர். அவர்களுடன் அமர்ந்திருந்தவர் அவர்களால் (பாக்கியம் பெறுவாரே தவிர) பாக்கியமற்றவராக ஆகமாட்டார்’’ என (அல்லாஹ்) கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (5218)
சத்தியத்தை அறியும் நோக்கம் சிறிதும் இல்லாமல் ஏதோ கடந்து போகும் போது அமர்ந்து கொள்ளும் பாவிக்கே பெரும் பாக்கியம் கிடைக்கும்போது, அல்லாஹ்வின் அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து ஆவலோடு கலந்து கொள்ளும் மக்களை அவன் வெறுமனே விட்டுவிடுவானா? வாழ்க்கையில் எல்லோரும் எப்போதும் எதிர்பார்க்கும் நிம்மதியை அமைதியை அவர்களுக்கு அல்லாஹ் அளிப்பான்; அளவற்ற அருளை அள்ளித் தந்து வளமான வாழ்வை வழங்குவான்.
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் ஓர் இறையில்லத்தில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக் கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். அறச்செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (5231)
சிலர் தங்கள் பகுதியில் மார்க்க நிகழ்ச்சிகள் நடக்கும் போதுகூட அதில் கலந்து கொள்ள முன்வருவதில்லை; துளியளவும் முனைப்பு காட்டுவது இல்லை. நவீன சாதனங்கள் மற்றும் ஊடகங்களின் பயன்பாடு இருப்பதால் அதன் மூலம் மார்க்கத்தை தெரிந்து கொண்டால் போதும் எனும் மனப்போக்கு மிகைத்து விட்டது.
ஆனால், அந்த முயற்சியிலும் இறங்காமல் இறுதியில் முடங்கி விடுகிறார்கள். இவ்வகையில், எண்ணற்ற புத்தகங்கள் சீடிக்கள் வீட்டில் இருந்தும்கூட வாரத்திற்கு ஒருமுறை கூட தொட்டுப் பார்க்காத நபர்கள் பெருமளவு இருக்கிறார்கள். இப்படி ஷைத்தான் நம்மிடம் தவறான மனநிலையை அலட்சியப் போக்கை உருவாக்கி நன்மையை விட்டும் தடுத்து விடுகிறான். இதை மக்கள் உணர மறுக்கிறார்கள்.
பயான்களில் கலந்து கொள்வதற்குரிய வாய்ப்புகளும் வசதிகளும் இருந்தால் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன்; ஒருபோதும் தட்டிக் கழிக்க மாட்டேன் என்று இனியாவது இவர்கள் முடிவெடுக்கட்டும். நேர்வழியை அறிய முக்கியத்துவம் கொடுக்கட்டும்.
அவையுடையோரை அரவணைத்துக் கொள்ளும் இறைவன்
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்று பேர் வந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். மற்றொருவர் (கண்டு கொள்ளாமல்) சென்றுவிட்டார். (உள்ளே வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவைக்கு) முன்னால் வந்து நின்றார்கள். அவர்களில் ஒருவர் வட்டமான அந்த அவையில் இடைவெளி இருப்பதைக் கண்டு அதில் அமர்ந்து கொண்டார்.
மற்றொருவர் பின்வரிசையில் அமர்ந்துகொண்டார். மூன்றாமவரோ திரும்பிப் போய்க் கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம் பேசி) முடித்ததும், “இம்மூவரைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவரோ, அல்லாஹ்விடம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ (மக்களைத் தாண்டிச் செல்ல) வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் (அவரைத் தண்டிக்க) வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்தினார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாகித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் (ரலி)
நூல்: புகாரி (66) (474) (4389)
நாட்டு நடப்புகள், அரசியல் சம்பவங்கள், வீண் செய்திகள் பற்றி மணிக்கணக்காகப் பேசுகிறார்கள். அதேசமயம் மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள பத்து நிமிடங்கள், முப்பது நிமிடங்கள் கூட நேரம் ஒதுக்கத் தயங்குகிறார்கள்.
ஒருவேளை, நமக்கு எல்லாம் தெரியும் என்றோ அல்லது போதுமான அளவு தெரிந்து இருப்பதால் இனிமேல் அறியத் தேவையில்லை என்றோ அவர்கள் எண்ணினால் அது ஆபத்தின் அறிகுறி. நமக்குத் தெரிந்த செய்திகளைத்தானே சொல்லப் போகிறார்கள் எனும் பெருமித சிந்தனை வழிகேட்டில் விட்டுவிடும்.
ஏனெனில், அல்லாஹ்வைக் குறித்து அடிக்கடி நினைவு கூரும் போதுதான் நாம் எதிலும் சுதாரிப்போடு இருக்க முடியும். நம்முடைய நம்பிக்கையையும், அதற்குரிய பண்புகளையும் மெருகேற்றிக் கொள்ள இயலும். எனவேதான், குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல செய்திகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுள்ளன.
மார்க்கத்திற்கு மாற்றமான சபை
இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று சமூகத்தில் பல நிகழ்ச்சிகள் மார்க்கத்தின் பெயரால் நடக்கின்றன. ஆனால், அங்கு அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டிய வழிமுறைக்கு மாறுசெய்கிறார்கள். ஷிர்க்கான பித்அத்தான காரியங்களை ஆதரித்துப் பேசுகிறார்கள். முன்னோர்களை, இமாம்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுமாறு போதிக்கிறார்கள். இதுமாதிரியான சபைகளில் முஃமின்கள் ஒருபோதும் பங்கு கொள்ளக் கூடாது.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.
(திருக்குர்ஆன்:4:140.)
நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக் கிடப்பவர்களை நீர் காணும் போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்த பின் அநீதி இழைத்த கூட்டத்துடன் நீர் அமராதீர்!
(திருக்குர்ஆன்:6:68.)
மீலாது, மவ்லூது, கத்தம் பாத்திஹா, கந்தூரி விழா, தரீக்கா மஜ்லிஸ்கள் என்று இறைச்செய்திக்கு முரணாக நடக்கும் நிகழ்ச்சிகளை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அந்த அசத்திய கருத்துக்களை ஆமோதிக்கும் அவலம் ஏற்பட்டுவிடும். மறுமையில் குற்றவாளியாய் நிற்க வேண்டியிருக்கும்.
இது குறித்து நபிகளார் ஓர் உதாரணம் மூலம் விளக்கி இருக்கிறார்கள். மார்க்கத்தில் சரியாக நடப்போருடனும், வரம்பு மீறுவோருடனும் இருக்கும் சூழ்நிலையை அழகாகப் புரிய வைத்துள்ளார்கள்.
‘‘நல்லவருடன் இருப்பதற்கும் தீயவருடன் இருப்பதற்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: புகாரி (2101)
எனவே, மார்க்க நெறிமுறைகளை மதித்து குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். குறிப்பிட்டுச் சொல்வதாயின் நல்லொழுக்கப் பயிற்சி, குர்ஆன் வகுப்பு, தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம், இனிய மார்க்கம், எளிய மார்க்கம் என்று எண்ணற்ற நிகழ்ச்சிகள் அல்லாஹ்வின் உதவியால் நமது ஜமாஅத் மூலம் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவற்றில் குடும்பத்தோடு பங்கு பெறுங்கள். நன்மைகளை அள்ளிச் செல்லுங்கள். நாம் ஈலகிலும் வெல்ல வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.