மாப்பிள்ளை & பெண் வீடு இணைந்து விருந்து தரலாமா

எனது மகனுக்கு திருமணம் செய்ய உள்ளேன். வரதட்சனை, பித்அத் எதுவும் இல்லை.

மாப்பிள்ளை வீடாகிய நாங்களும், பெண் வீட்டாரும் இணைந்து திருமண விருந்து செலவை பங்கிட்டு செய்யலாமா

பெண் வீட்டார் நாங்களும் செலவு செய்ய விரும்புகிறோம். இது தவறில்லையே என்கிறன்றனர். என்ன செய்வது

வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும்.

ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது.

பெண்ணிடமிருந்து எதையும் வாங்கக் கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது.

இதே போன்று திருமணத்துக்கென்று வலீமா என்ற விருந்தை ஆண் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது.

பெண் வீட்டு விருந்து கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது. இணைந்து கொடுப்பதும் கூடாது.

திருமணத்தில் பெண் வீட்டார் மீது எந்தச் செலவையும் இஸ்லாம் சுமத்தவில்லை.

பெண்வீட்டார் தங்களுடைய கடமைகளாக எண்ணிக் கொண்டு செய்து வருகின்றனர். இவற்றைச் செய்யாவிட்டால் சமுதாயத்தில் அது அவமானம் என்றோ மாப்பிள்ளை வீட்டார் கோபப்படுவார்கள் என்றோ கருதி சிரமத்துடன் செய்பவர்களும் இருக்கின்றார்கள்.

பெண்வீட்டு விருந்து என்பது இந்தச் சுமைகளில் ஒன்றாகும்.

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை விருந்தளிக்குமாறு நிர்பந்திக்காவிட்டாலும் பெண்வீட்டார் தாங்களாக விரும்பி விருந்தளிப்பதும் கூடாது.

திருமணத்துக்காக பெண் வீட்டார் செலவு செய்வது நடைமுறையில் கட்டாயமாகி விட்டதால் தான் இவர்கள் இவ்விருந்தை விரும்பியோ விரும்பாமலோ நடத்துகிறார்கள்.

பொதுவாக எந்தப் பெண்வீட்டாரும் விரும்பி விருந்தளிக்க முன்வருவதில்லை. இது போன்று கொடுக்காவிட்டால் தங்களது பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டில் உரிய மரியாதை கிடைக்காமல் போய்விடுமோ என்ற உள்ளச்சமே இவர்களைக் கொடுப்பதற்குத் தூண்டுகின்றது. இதில் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.

இது போன்று விதிவிலக்காக ஒரு சிலர் விரும்பிக் கொடுப்பது பல தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிப்பதாகக் கூறிக் கொண்டு, இது போன்று தானே வரும் பெண்வீட்டு விருந்தை எண்ணத்தில் வைத்து, வசதியான பெண்களை மட்டுமே மணம் முடிக்கும் அவல நிலை உள்ளது. சில ஊர்களில் வீடு, வாகனங்கள் என மறைமுக வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது.

வசதி படைத்த பெண் வீட்டார் விரும்பிக் கொடுப்பதாகக் கூறி, டி.வி., பிரிட்ஜ், பைக் திருமண விருந்து என்று அள்ளி வழங்கி விடுகின்றார்கள். இது வசதியில்லாத பெண்களுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்துவதையும் மறுக்க முடியாது.

உதாரணமாக ஒரே வீட்டில் ஒரு வசதியான பெண்ணும் ஏழைப் பெண்ணும் மணமுடிக்கப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். வசதியான பெண் சீர் வரிசைகளைக் கொடுக்கும் போது ஏழைப்பெண்ணுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றது. அவளும் தன் வீட்டாரை நிர்பந்தித்து வட்டிக்கு வாங்கி சீர் வரிசைகளைச் செய்கிறாள்.

இது ஏதோ கற்பனையாகக் கூறப்பட்டதல்ல. பல இடங்களில் இந்த நிலை இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இது போன்ற பல சங்கடங்கள் ஏற்படுவதால் பெண் வீட்டார் விரும்பி சீர் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

பெண்வீட்டு விருந்து என்ற தீய கலாச்சாரம் சமுதாயத்தில் நுழைந்து விட்டதால் இவ்விஷயத்தில் சுயவிருப்பத்தை பார்க்காமல் இந்த அநாச்சாரத்தை ஒழிப்பதற்காக இதைப் பெண்வீட்டார் கைவிட வேண்டும்.

இதை பொருட்படுத்தாமல் பெண் வீட்டு விருந்தை ஏற்படுத்தினால் சமுதாயத்தில் நுழைந்துவிட்ட இந்த பாவத்துக்கு உடந்தையான குற்றம் ஏற்படும்.

இதே வாதத்தை வைத்து வரதட்சணையையும் நியாயப்படுத்ட முடியும். மாமனார் விரும்பி தருகிறார் என்ற காரணத்தைக் சொல்லித் தான் வரதட்சனையை இன்றும் சிலர் நியாயப்படுத்தி வருகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்ப நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)

பெண் வீட்டார் இத்தீமையைச் செய்யும் போது அதைக் கண்டித்து தடுத்து நிறுத்துவது மாப்பிள்ளையின் கடமையாகும். இதை அவர் கண்டிக்கத் தவறினால் அத்தீமையில் அவருக்கும் பங்குள்ளது என்ற அடிப்படையில் அத்திருமணத்தை நாம் புறக்கணித்தே ஆக வேண்டும்.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா( நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 70

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *