மாதவிடாச் சட்டங்கள்
மாதவிடாய் என்பது அல்லாஹ் பெண்களுக்கு ஏற்படுத்திய ஒரு தொல்லையான நிலையாகும். அந்நிலையில் சில விஷயங்களை இஸ்லாம் கடைபிடிக்கச் சொல்கிறது. அவற்றைக் காண்போம்.
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் நான்கு காரியங்களை செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த நான்கு காரியங்களை மாதவிடாயிலிருந்து தூய்மையானப் பிறகே அவர்கள் செய்ய வேண்டும்.
தொழுகையை விட்டுவிட வேண்டும்
மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுது கொள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (228)
“மார்க்த்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று பெண்கள் கேட்டார்கள்.
“பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க,
அப்பெண்கள், “ஆம் (பாதியளவுதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுதான் அவளது அறிவின் குறைபாடாகும்:” என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்க,
மீண்டும் அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (304)
மாதவிடாயின் போது விட்டத் தொழுகைகளை
திரும்பத் தொழ வேண்டியதில்லை.
எங்களுக்கு அது (மாதவிடாய்) ஏற்பட்டது. அப்போது விடுபட்ட நோன்பை (மாதவிடாய் நின்ற பிறகு) மீண்டும் நோற்குமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். விடுபட்டத் தொழுகைகளை தொழுமாறு கட்டளையிடப்படவில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (508)