மவ்லிதும் ஷஃபாஅத்தும்
மவ்லிது ஒரு வணக்கம்! அதை ஓதினால் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் பரிந்துரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இந்த மவ்லிது ஓதுவதற்காக காசு பணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாத்தின் முக்கியக் கடமையான ஜகாத்தை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய பொருளாதாரம் என்ற நீர்வளத்தை மவ்லிது என்ற வயல்களை நோக்கிப் பாய்ச்சுகின்றனர். இதற்கென்று தனி மரியாதைகளையும், மதிப்புகளையும் வழங்கி வருகின்றனர். இத்தகைய மவ்லிது என்பது ஓர் இபாதத் கிடையாது. கடைந்தெடுக்கப்பட்ட பித்அத் ஆகும்.
இன்று ஏகத்துவச் சுடர் எங்கு பார்த்தாலும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது. மவ்லிதுகளில் அடங்கியிருக்கும் விஷக் கருத்துக்கள், ஷிர்க்கான கவிதைகள், அமல்களைப் பாழாக்கி நம்மை நரகத்தில் சேர்த்து விடும் என்று நம்முடைய ஏகத்துவ இதழ்கள், நூல்கள், ஒளி ஒலி நாடாக்கள் என விளக்கங்கள் வெள்ளங்களாகக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்குப் பிறகும் ஒருவர் மவ்லிது ஓதுவாரானால் அவர் மாபெரும் நஷ்டத்திற்கும் கைசேதத்திற்கும் உரியவராவார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதைப் பாருங்கள்.
என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம். செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல்புரிவதாக நினைக்கின்றனர். அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.
திருக்குர்ஆன் 18:102-106
அல்லாஹ் இந்த வசனங்களில் பட்டியலிடும் பண்புகளை நன்கு கூர்ந்து கவனியுங்கள்.
1. இந்த உலகில் அவர்களின் முயற்சி வீணாகுதல்
2. அவர்கள் அழகிய அமல்கள் செய்வதாக நினைத்தல்
3. இவர்கள் அல்லாஹ்வின் வசனங்களையும் அவனது சந்திப்பையும் நிராகரித்தல்.
4. அல்லாஹ்வின் வசனங்களையும் அவனது தூதர்களையும் கேலிப் பொருளாக்குதல்.
இந்த நான்கு பண்புகளுமே மவ்லிது ஓதக் கூடியவர்களிடம் பொருந்திப் போகின்றன.
1. மவ்லிது ஓதுபவர்கள் மவ்லிதுக்கு என்று பெரும் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பதை முந்தைய தலைப்பில் பார்த்தோம். அதிகமான நேரத்தையும் செலவிடுகின்றனர். அவர்கள் இந்த நேரத்தை வேறு ஏதேனும் வேலைக்காக செலவழித்திருந்தால் அதற்குரிய பலன்களையாவது கண்டிருப்பார்கள். இதற்காக பெரும் பொருளாதாரத்தை செலவிடுகின்றார்கள். இதே பொருளாதாரத்தை வேறு வகையில் முதலீடு செய்திருந்தால் அது அவர்களுக்குப் பயனளிப்பதாக அமைந்திருக்கும். இந்த வகையில் மவ்லிது ஓதக்கூடியவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் நஷ்டமடைகின்றார்கள்.
2. இதற்கென்று பத்தி, பூ, சாம்பிராணி, நேர்ச்சை, சமையல், மேற்கட்டி, சந்தனம் தெளித்தல், இல்லறத்தைத் துறத்தல், மீன் சாப்பிடாமல் இருத்தல் என்று பெரும் உழைப்புகளைச் செய்கின்றார்கள். மாற்று மதத்தவர்கள், அலகு குத்தல், காவடி எடுத்தல் போன்ற உழைப்புகளை எப்படிச் செய்கின்றார்களோ அதே போல் இவர்களும் உழைப்புகளைச் செய்கின்றார்கள்.
இந்த உழைப்பை உலகத்தில் சம்பாதிப்பதற்காக செய்திருந்தால் பணமாவது கிடைத்திருக்கும். ஆனால் இவர்களோ இரண்டும் கெட்டான் நிலையில் ஆகி விடுகின்றனர். இந்த உழைப்பை எல்லாம் இவர்கள் செய்யும் ஒரே நோக்கம் இது ஒரு நல்லமல் என்று தான். இப்படி நல்லமல் என்று நினைத்து ஒரு காரியத்தைச் செய்து அதற்கான கூலியைப் பெறாமல் ஆகி விடுகின்றார்கள். இவர்களைத் தான் மாபெரும் நஷ்டத்திற்குரியவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
3. இத்தகையவர் அல்லாஹ்வுடைய சான்றுகளையும் அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள் ஆகின்றனர். மவ்லிது ஓதக் கூடியவர்கள், அல்லாஹ்வின் சான்றுகளை மறுக்கவா செய்கின்றார்கள் என்று கேட்கலாம்.
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 18:110
இந்த வசனத்தில் அல்லாஹ் என்னுடைய சந்திப்பை ஆதரவு வைப்போர் எனக்கு யாரையும் இணையாக்கக் கூடாது என்று என்று தெரிவித்த பின்பும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய விஷயங்களை, மவ்லிதின் கதாநாயகர்களான நபி (ஸல்) அவர்கள், அப்துல்காதிர் ஜீலானி போன்றவர்களிடம் கேட்பதன் மூலம் இணை வைக்கின்றார்கள். இதன் பொருள் என்ன? யா அல்லாஹ் உனது சந்திப்பு எனக்குத் தேவையில்லை என்று தானே பொருள்.
இதே காரியத்தைத் தான் இஸ்லாத்திற்கு வெளியே உள்ள இணை வைப்பாளர்கள் செய்கின்றனர். இதை இஸ்லாத்தில் இருந்து கொண்டு செய்தாலும் இதே விளைவு தான் ஏற்படும். அதைத் தான் மேற்கண்ட வசனம் தெரிவிக்கின்றது. இந்த அடிப்படையில் அல்லாஹ் கூறும் இந்த மூன்றாவது பண்பிலும் மவ்லிது ஓதக் கூடியவர்கள் முழுக்க முழுக்க ஒத்துப் போகின்றார்கள்.
4. அல்லாஹ்வை மறுத்து அவனது வசனங்களையும், தூதர்களையும் கேலியாக்குதல்.
கேலியாக்குதல் என்று சொன்ன மாத்திரத்தில் நாங்களா கிண்டல் செய்கிறோம் என்று ஆச்சரியமாகத் தான் கேட்பார்கள். ஆம்! உண்மையில் நன்கு தெரிந்து கொண்டே தான் கிண்டல் செய்கின்றார்கள். அது எப்படி?
இணை வைப்பதால் மறுமையில் நிரந்தர நரகம் என்று சொல்லும் போது அதை ஒத்துக் கொள்ள மறுப்பது அல்லாஹ்வை மறுப்பதற்குச் சமம்! இந்த வகையில் அல்லாஹ்வை மறுக்கின்றார்கள்.
ஒருவன் நமக்கு முன்னால் பீடி புகைக்கின்றான். அவனைப் பார்த்து நீ பீடி புகைக்காதே! என்று சொல்லும் போது அந்த இடத்திலேயே அவன் பீடியை அணைத்து விட்டான் என்றால் நம்முடைய அந்தச் சொல்லுக்கு மரியாதை இருக்கின்றது என்று விளங்கிக் கொள்ளலாம். அவ்வாறன்றி நமக்கு முன்னே மீண்டும் பீடி புகைக்கின்றான் என்றால் அவன் நம்மைக் கேலிப் பொருளாக்கி விட்டான் என்று தான் அர்த்தம்!
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!)
திருக்குர்ஆன் 2:186
இந்த வசனத்தின் அடிப்படையில் நீங்கள் அல்லாஹ்விடமே கேளுங்கள் என்று சொன்னால், நான் நபி (ஸல்) அவர்களிடம் தான் என் தேவைகளைக் கேட்பேன் என்று மீண்டும் மீண்டும் ஷிர்க்கான வரிகள் இடம் பெறும் மவ்லிதுகளை ஓதுவதன் அர்த்தம் என்ன? அல்லாஹ்வுடைய கட்டளையைக் கிண்டல் செய்வதைத் தவிர்த்து இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்?
மவ்லிது ஓதக் கூடாது என்பதற்கும், இது பித்அத் என்பதற்கும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இந்த ஹதீஸ்களைச் சொல்லி மவ்லிது ஓத வேண்டாம் என்று சொன்னால், நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது? நான் எப்போதும் மவ்லிது ஓதத் தான் செய்வேன் என்று கூறினால் அதன் பொருள் என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கிண்டல் செய்வது தான்.
இந்தக் காரியத்தையும் மவ்லிது ஓதும் இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். எனவே இவர்கள் இறை நிராகரிப்பாளர்களைப் போன்று இம்மை மறுமை ஆகிய இரண்டையுமே இழந்து இரண்டும் கெட்டான்களாகி விடுகின்றார்கள். இந்த வகையில் இது மாபெரும் நஷ்டமாகும். இந்த பண்புகள் இருந்தால் அவர்களுக்கு நரகமே தண்டனை என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். எனவே இந்தப் பெரும் பாவத்திலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.
பாடல்களைப் பாடி வழிபடுதல்
பாடல்களைப் பாடி அதன் மூலம் கடவுளை எழுப்பி வழிபடுவதென்பது இந்து மத நம்பிக்கையாகும். அதுபோல் கிறித்தவர்களும் பாட்டுப் பாடி தான் கடவுளை வழி படுவர். இதுபோன்று பாட்டுப் பாடி வழிபடல், வணங்குதல் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஆனால் இந்த மவ்லிதுவாதிகளோ மவ்லிது என்ற பெயரில் புதுப்புது மெட்டுக்களில் பாட்டுப் பாடி அதை வணக்கம் என்று நினைக்கின்றனர். இதன் மூலம் மாற்று மத கலாச்சாரத்தைப் பின்பற்றியவர்களாகி விடுகின்றனர்.
யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாகி விடுகின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது போன்று
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத் 3512
மவ்லிது ஓதுவதன் மூலம் பிற மதத்தினருக்கு ஒப்பாகி விடுகின்றனர். மேலும் இஸ்லாத்தில் ஒரு புது வணக்கத்தைப் புகுத்தியவர்களாக, அதாவது பித்அத்தைச் செய்தவர்களாக ஆகின்றனர்.
பித்அத்தும் பறிக்கப்படும் ஷஃபாஅத்தும்
மவ்லிது ஓதினால் மாநபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் (பரிந்துரை) கிடைக்கும் என்று மக்கள் பெருமளவில் நம்புகின்றார்கள். அவர்கள் இந்த நம்பிக்கையைப் புரிந்து கொண்டு மவ்லவிமார்களும் மவ்லிது ஓதினால் மறுமையில் ஷஃபாஅத் கிடைக்கும் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றார்கள்.
ஆனால் உண்மையில் மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் கிடைக்காது. நபி (ஸல்) அவர்களுக்குப் பின் மார்க்கத்தில் பித்அத்துகளைப் புகுத்தி, மாற்றங்களைச் செய்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் சாபம் தான் கிடைக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் அடக்கத்தலத்திற்கு வந்து, “இறை நம்பிக்கை கொண்ட கூட்டத்தின் இல்லத்தாரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் வந்து சேர்ந்து விடுவோம் (என்று கூறி) நிச்சயமாக நான் நம்முடைய சகோதரர்களை உலகிலேயே கண்டு கொள்ள விரும்புகிறேன்” என்று சொன்னார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் கிடையாதா” என்று நபித் தோழர்கள் கேட்டனர். “இன்னும் (உலகில்) உருவாகவில்லையே அவர்கள் தான் நம்முடைய சகோதரர்கள் என்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். உங்களுடைய சமுதாயத்தில் இன்னும் உருவாகாதவர்களை (மறுமையில்) நீங்கள் எப்படித் தெரிந்து கொள்வீர்கள் என்று நபித் தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கன்னங்கருத்த குதிரைகளுக்கிடையில் முகத்திலும், கால்களிலும் வெள்ளை நிறத்தைக் கொண்ட குதிரை ஒருவருக்கு இருந்தால் அவர் அக்குதிரையை தெரிந்து கொள்ள மாட்டாரா?” என்று திருப்பிக் கேட்டார்கள்.
நபித்தோழர்கள், “ஆம்! கண்டு கொள்வார்” என்று பதில் கூறினார்கள். நிச்சயமாக அந்தச் சகோதரர்கள் உளூவின் காரணமாக முகம் கைகளில் வெண்சுடர் வீச வருவர் (இதன் மூலம் அவர்களை நான் தெரிந்து கொள்வேன்) நான் உங்களுக்கு முன்னதாக நீர் தடாகத்திற்கு வந்து விடுவேன். அறிந்து கொள்ளுங்கள். வழி தடுமாறி வந்த ஒட்டகம் விரட்டப்படுவது போன்று, என்னுடைய தடாகத்தை விட்டும் மக்கள் விரட்டப்படுவர். வாருங்கள் என்று அவர்களை நான் கூப்பிடுவேன். அப்போது, “இவர்கள் உங்களுக்குப் பின்னால் மார்க்கத்தை மாற்றி விட்டார்கள்” என்று என்னிடம் தெரிவிக்கப்படும். தொலையட்டும்! தொலையட்டும்! என்று நான் கூறி விடுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 367
பாருங்கள்! மார்க்கத்தில் மவ்லிது போன்ற புதுமையைப் புகுத்தியவர்கள் வழிதடுமாறி வந்த ஒட்டகங்கள் போல் தடாகத்திலிருந்து துரத்தியடிக்கப் படுகின்றார்கள். இப்படி துரத்தியடிக்கப் படுபவர்களுக்கு எப்படி ஷஃபாஅத் கிடைக்கும்? லஃனத் – சாபம் தான் கிடைக்கும். அதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கின்றது.
செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவை தான் காரியங்களில் மிகவும் கெட்டவையாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1435
நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னால் உருவாக்கப்பட்ட காரியங்கள் தான் மிகக் கெட்ட காரியங்களாகும். இந்தக் காரியங்கள் அனைத்துமே வழிகேடுகள். அவை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கின்றது.
மவ்லிது ஓதுவது நன்மையைப் பெற்றுத் தராது என்பது ஒருபுறமிருக்க நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் மிகப் பெரும் பாவமாகவும் அமைந்துள்ளது.
மதம் மாறியவர்கள்
அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்! அவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களையே கடவுளாகச் சித்தரித்து இயற்றப்பட்ட கவிதைகள் இந்த மவ்லிதுகளில் இடம் பெற்றுள்ளன.
எப்படி ஏகத்துவத்தை நிலைநாட்டுவதற்காக அனுப்பப்பட்ட ஈஸா (அலை) அவர்கள் கடவுளாக ஆக்கப்பட்டார்களோ, அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை விட்டு எவ்வாறு அம்மக்கள் வெளியேறினார்களோ அதுபோல் முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களைப் புகழ்கின்றேன் என்ற பெயரில் மவ்லிதுகள் மூலம் நபி (ஸல்) அவர்களையும் கடவுளாக ஆக்கி இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட்டார்கள். அதாவது மதம் மாறி விட்டார்கள்.
ஈஸா (அலை) அவர்கள் தனது பாதையை விட்டும் மாறிச் சென்ற தனது சமுதாயத்திற்கு எதிராக சாட்சி சொல்வது போல் இத்தகையவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் சாட்சியமளிக்கின்றார்கள். இதன் மூலம் இடது பக்கம் இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார்கள். இதையே பின்வரும் ஹதீஸ் காட்டுகின்றது.
நீங்கள் (மறுமை நாளில்) செருப்பு அணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு, “முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்” என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள்.
மறுமை நாளில் முதன்முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் (அலை) ஆவார்கள். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், “இவர்கள் என் தோழர்கள், இவர்கள் என் தோழர்கள்” என்று கூறுவேன். அப்போது, “நீங்கள் இவர்களைப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தங்கள் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்” என்று கூறுவார்கள். அப்போது நல்லடியார் (ஈஸா நபியவர்கள்) கூறியதைப் போல், “நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” எனும் (5:117, 118) இறைவசனத்தைக் கூறுவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3349
எனவே இந்த மவ்லிது என்ற பித்அத் மூலம் ஷஃபாஅத்தை இழந்து சாபத்தை அடைவதுடன் நிரந்தர நரகத்திற்குரியவர்களான இடது பக்கவாசிகளுடன் சேர்க்கப்படும் பரிதாப நிலை ஏற்படுகின்றது. எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வழியில் மட்டும் வணங்கி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!