மவ்லிதுகள் யூதர்களின் கைவரிசையே!
மவ்லிதுகளில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக் காட்டுவதென்றால் அதற்கு இந்த இதழின் பக்கங்கள் இடம் கொடாது. அதற்கென்று தனியாக பல நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த அபத்தங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் சுப்ஹான மவ்லிது, யாகுத்பா போன்ற நூல்களை வாங்கிப் பார்வையிடுக!
மவ்லிதுகள் இஸ்லாமிய அடிப்படையைக் குழி தோண்டிப் புதைக்கக் கூடியவை என்பதையும், இது யூதர்களால் உருவாக்கப்பட்டு இஸ்லாத்தில் பரப்பி விடப்பட்டவை என்பதையும் இப்போது பார்ப்போம்.
ஜிப்ரீலை மட்டம் தட்டும் மவ்லிது
எல்லாம் வல்ல அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு மாபெரும் கண்ணியத்தையும், மகத்துவத்தையும் அளித்திருக்கின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளும் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் சிறப்பித்துக் கூறுகின்றான்.
இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும். வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதிபெற்றவர். வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.
திருக்குர்ஆன் 81:19-21
அஷ்ஷுஅரா அத்தியாயத்தின் 193 வது வசனத்தில் ஜிப்ரீல் நம்பிக்கைக்குரிய உயிர் என்று நற்சான்று வழங்குகின்றான்.
அல்லாஹ் தன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை விண்ணுலகப் பயணத்திற்கு அழைத்த போது, அவர்களுக்குத் தன்னுடைய அற்புதங்களைக் காட்டினான். அந்த வரிசையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்திக்கும் காட்சியை வெகுவாக சிறப்பித்துக் கூறுகின்றான்.
அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.
திருக்குர்ஆன் 53:5-14
இப்படி அல்லாஹ்வால் மிகவும் புகழ்ந்து பாராட்டப்படும் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றி மவ்லிது என்ன சொல்கின்றது என்று பாருங்கள்.
என்னை அச்சுறுத்தும் அளவுக்கு அநீதி இழைக்கப்பட்டால், தலைவர்களுக்கெல்லாம் தலைவரே! என் ஊன்றுகோலே! என்று நான் உங்களை அழைப்பேன். என் குற்றங்களுக்காக ரஹ்மானிடம் பரிந்துரைப்பவராக நீங்கள் ஆகி விடுங்கள். என் கற்பனையிலும் தோன்றாத உதவிகளை எனக்குச் செய்யுங்கள். என்றென்றும் நிரந்தரமான திருப்தியான பார்வையுடன் என்னைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் அருளால் எனது குறைகளைக் காலா காலம் மறைத்து விடுங்கள்.
(சுப்ஹான மவ்லிது)
இவ்வாறு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி பாடியதாக சுப்ஹான மவ்லிதில் கூறபட்டுள்ளது.
மலக்குகளின் தலைவர், வலிமை மிக்கவர் என்று அல்லாஹ்வால் புகழ்ந்து பாராட்டப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களையே அச்சுறுத்தி அநீதி இழைத்திட மற்றவர்களால் முடியும் என்று இந்த மவ்லிது வரிகள் கூறுகின்றன.
மேலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறிழைக்கக் கூடியவர் என்றும், குறைகள் உடையவர் என்றும் இந்த வரிகள் கூறுகின்றன. ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறிழைப்பார்கள் என்று கூறினால் அவர்கள் கொண்டு வந்த வஹீயிலும் தவறிழைத்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி விடாதா?
இந்தத் தவறுகளையெல்லாம் விட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பாதுகாப்பு தேடுவதாகக் கூறுவது தான் இதில் வேதனையான விஷயம்.
மனிதர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் கூட நபி (ஸல்) அவர்களை அழைத்துப் பிரார்த்திக்குமாறு அல்லாஹ் கூறவில்லை. தன்னிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!)
திருக்குர்ஆன் 2:186
அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் மூலமாக இந்த வசனத்தில் மக்களுக்கு அறிவிக்கச் சொல்கின்றான். மனிதர்கள் கூட நபி (ஸல்) அவர்கள் உள்ளிட்ட யாரிடமும் உதவி தேடக் கூடாது. அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் எனும் போது, இந்தச் செய்தியைக் கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) ‘அவர்களிடம் உதவி தேட வேண்டிய அவசியம் என்ன?
ஆக, ஜிப்ரீல் (அலை) அவர்களை பலவீனராகவும், தவறிழைக்கக் கூடியவராகவும் சித்தரித்து, அவர்கள் இறைவனுக்கு மாறு செய்ததாகக் காட்டுவது தான் இந்த மவ்லிதுகளின் நோக்கம் என்பது தெளிவாகின்றது. மவ்லிதை இயற்றியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மீதுள்ள வெறுப்பு இங்கு அம்பலமாகின்றது.
ஜிப்ரீல் (அலை) அவர்களை முஃமின்கள் யாரும் வெறுக்க முடியாது. அப்படி வெறுப்பவர் உண்மை முஃமினாக இருக்க முடியாது. யூதர்கள் தான் ஜிப்ரீல் (அலை) அவர்களை வெறுப்பார்கள். இதைப் புகாரியின் 4480வது ஹதீஸில் காணலாம். இதனால் தான் ஜிப்ரீலின் எதிரி தனக்கும் எதிரி என்று அல்லாஹ் தன் திருமறையில் பிரகடனம் செய்கின்றான்.
அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 2:98
அல்லாஹ்வினால் அந்தஸ்தும், மரியாதையும் வழங்கப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களை மவ்லிதுகள் எவ்வளவு மட்டரகமாக நடத்துகின்றன என்பதைப் பார்க்கும் போது, இந்த மவ்லிதுகள் யூதர்களின் கைவரிசையில் உருவான கைச்சரக்கு தான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டும் மவ்லிதுகள்
இறைவனின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! இந்த அடிப்படைக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் மவ்லிது வரிகள் யாகுத்பா என்ற மவ்லிதில் இடம் பெற்றுள்ளன.
முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானியைப் புகழ்ந்து பாடும் யாகுத்பா என்ற (மவ்லிது) கவிதை மாலையில் அப்துல் காதிர் ஜீலானிக்கு வஹீ வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
(அல்லாஹ்வுக்கும் உங்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடலை) நீங்கள் செவியுற்றுக் கொண்டிருக்கும் போதே காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான இரட்சகரே! (என்னை) நெருங்கி (என்னுடன்) ஒன்றியவராகி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீபாவாக இருக்கின்றீர் என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது. முஹ்யித்தீனே! (இறைவனாலேயே) மகத்தான இரட்சகரே! என்று அழைக்கப்பட்டதன் மூலம் நீங்கள் மகத்துவம் மிக்க திருநாமம் ஒன்றைத் தான் சூட்டப் பட்டு விட்டீர்கள். (யாகுத்பா)
இந்த வரிகளில் இந்த மவ்லிதை இயற்றிய கவிஞன் சொல்ல வரும் விஷயங்கள் இவைதான்.
அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் நேரடியாகப் பேசினான். அதுவும் அவர் காதால் கேட்கும் அளவுக்குப் பேசினான்.
கவ்சுல் அஃலம் – மகத்தான இரட்சகர் என்ற பட்டத்தை மனிதர்களாகச் சூட்டவில்லை. அல்லாஹ்வே அவர்களுக்கு இதை வழங்கினான்.
அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வுக்கு கலீபாவாக இருக்கிறார்.
இவை அனைத்தையும் அல்லாஹ்வே அவர்களை நோக்கிக் கூறினான்.
இவ்வளவு கருத்துக்களையும் இந்தக் கவிதை வரிகள் மறைமுகமாக அல்ல! நேரடியாகவே தெரிவிக்கின்றன.
இதில் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியவையாக உள்ளன. அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் பேசினான் என்ற கருத்தை சராசரி முஸ்லிமும் நம்பத் துணிய மாட்டான்.
நபிமார்களின் தொடரை நபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ் நிறைவுபடுத்தி, ஹஜ்ஜத்துல் வதாவின் போது, இந்த மார்க்கத்தை நிறைவு படுத்திவிட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
திருக்குர்ஆன் 5:3
நபி (ஸல்) அவர்களுடன் இந்த மார்க்கம் முழுமை பெற்ற பின் வேறு எவருடன் அல்லாஹ் பேச வேண்டும்? எதற்காகப் பேச வேண்டும்? அப்படிப் பேசுவதாக இருந்தால் இந்த உம்மத்திலேயே மிக உயர்ந்த இடத்தில் இருந்த, நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்த அந்தஸ்திலுள்ள அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அல்லாஹ் பேசியிருப்பான். ஆனால் அவ்வாறு பேசியதாக இந்த மவ்லிதை ஓதுபவர்கள் கூட ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் பேசினான் என்று நா கூசாமல் மவ்லிதுகளில் ஓதி வருகின்றனர். எனவே இது அல்லாஹ்வின் மீது சொல்லப்படும் அவதூறும் அபாண்டமும் ஆகும்.
இதேபோல் சுப்ஹான மவ்லிதில் இடம் பெறும் பொய்யைப் பார்ப்போம்.
நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் பிறந்ததும் மலக்குகள் கெண்டியில் தண்ணீர், மாணிக்கங்கள், மரகதங்கள், முத்துக்களால் பதிக்கப் பட்ட தட்டுகளையும் தாம்பூலங்களையும் சுமந்து வந்து நபி (ஸல்) அவர்களின் பளிங்கு போன்ற இதயத்தைக் கழுவி தூதுவர் என்று முத்திரையிடுகின்றார்கள். இந்நேரத்தில் ரஹ்மான் மலக்குகளை அழைத்து அவரைத் தூக்கிக் கொண்டு, அர்ஷ் மற்றும் விரிவான சுவனபதிகளை சுற்றி வலம் வாருங்கள் என்று சொன்னான்.
இதுதான் அந்தப் பொய்.
குழந்தையாக இருந்த நபி (ஸல்) அவர்களைத் தூக்கிக் கொண்டு சுவனபதியை, அர்ஷைச் சுற்றி வாருங்கள் என்று அர்ரஹ்மான் மலக்குகளை அழைத்துக் கூறிய நிகழ்ச்சி குர்ஆனில் இடம் பிடித்திருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்கள் இந்நிகழ்ச்சியைப் பற்றி கூறி, அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூற்களில் பதியப் பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட நிகழ்ச்சி நடந்திருந்தால் அதை நாம் அறிந்து கொள்ள இந்த இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.
இது எங்கே வருகின்றது? இது அல்லாஹ்வின் மீது சொல்லப்படும் அபாண்டமல்லவா?
மிர்சா குலாம் தன்னை நபி என்று சொன்னவுடன் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, பொங்கி எழுந்து, துள்ளிக் குதிக்கும் ஆலிம்கள் இந்தக் கவிஞன் சொல்லி விட்டுச் சென்றதை வீடுவீடாக பாடி, பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பது நியாயமாகுமா?
இதற்கு வக்காலத்து வாங்குபவர்கள் மறுமையில் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்? அல்லாஹ்வின் மீது அவன் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்வதற்கு எப்படித் துணிய முடிகின்றது?
இப்படிப் பொய் சொல்பவர்களுக்கெல்லாம் மிகக் கடுமையான தண்டனையை அல்லாஹ் தயார் படுத்தி வைத்திருக்கின்றான். இப்போது, இங்கு காட்டப்பட்ட அல்லாஹ்வின் மீதான பொய்கள், அவதூறுகள், அபாண்டங்கள், அவற்றுக்கான தண்டனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிக் கூறும் வசனங்கள் இதோ :
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுபவன், எதுவுமே அவனுக்கு (இறைவனிடமிருந்து) அறிவிக்கப்படாதிருந்தும் “எனக்கு அறிவிக்கப்படுகிறது’ எனக் கூறுபவன், மற்றும் “அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்’ என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். “உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகிறீர்கள்!’ (எனக் கூறுவார்கள்).
திருக்குர்ஆன் 6:93
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். “அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள். “அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர்” என அவர்கள் கூறுவார்கள். தாம் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 7:37
இந்த இரண்டு வசனங்களையும் படிப்பவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஆம்! அல்லாஹ் தன் மீது இல்லாத பொய்களை, பொல்லாத புனைச் சுருட்டுகளைக் கட்டி விடுபவர்களை அவர்களின் கதையை முடிக்கும் தருவாயிலேயே கணக்கு தீர்க்கின்றான். மரணப் படுக்கையிலேயே மலக்குகள் மூலமாக அவர்களது நெளிசலைக் கழற்றி விடுகின்றான். அதன் பின் மறுமையில் நரகத்தில் அவர்களைச் சுருட்டி வீசி விடுகின்றான். இதுபோன்ற ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன.
இவ்வளவு பெரிய பயங்கரமான விஷயத்தைத் தான் இந்த மவ்லிதுப் பிரியர்கள் மிக எளிதாக எடுத்துக் கொள்கின்றனர். அல்லாஹ் இதுபோன்ற விஷயங்களை விட்டும் இம்மையிலும் மறுமையிலும் நம்மைக் காப்பானாக!