மவுன விரதம் உண்டா?
அன்றைய சமுதாயத்தில் மவுனவிரதம் கடைப்பிடிப்பதும் ஒரு வகை நோன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தது. அதைத்தான் மரியம் (அலை) அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்று இவ்வசனம் (19:26) கூறுகிறது.
இதை ஆதாரமாகக் கொண்டு மவுன விரதம் இருக்க இஸ்லாத்தில் அனுமதி உள்ளது என்று கருதக் கூடாது. அடிப்படைக் கொள்கையைப் பொருத்த வரை ஆரம்பம் முதல் நபிகள் நாயகம் (ஸல்) காலம் வரை ஒரே கொள்கை தான் இருந்து வருகிறது. ஆனால் அடிப்படைக் கொள்கை அல்லாத சட்டதிட்டங்களைப் பொருத்த வரை ஒரே சட்டமே எல்லா சமுதாயத்துக்கும் வழங்கப்படுவதில்லை.
முந்தைய சமுதாயத்துக்கு ஒரு சட்டம் அருளப்பட்டு அதற்கு மாற்றமான சட்டம் திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ காணப்பட்டால் முந்தைய சமுதாயத்துக்கு வழங்கப்பட்ட அந்தச் சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டத்தில், மவுனம் அனுஷ்டித்தல் ஒரு வணக்கமல்ல என்பதற்கு ஆதாரம் உள்ளதால் இந்தச் சமுதாயத்தில் மவுனவிரதம் இல்லை.
ஒரு நபித்தோழர், நான் யாருடனும் பேச மாட்டேன் என்று நேர்ச்சை செய்ததை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டித்து இதுபோல் செய்யலாகாது என்று தடுத்து விட்டார்கள். எனவே யாருடனும் பேசமாட்டேன் என்று நேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டு விட்டது.
(பார்க்க: புகாரி 6704)