மறைவிடங்களில் 40 நாட்களுக்கு ஒருமுறை முடிகளை அகற்ற வேண்டுமா?
மீசை, நகம், அக்குள் மற்றும் மறைவிடத்தில் வளரும் முடிகள் ஆகியவற்றை நாற்பது நாட்களுக்குள் அகற்றிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவு இட்டுள்ளார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றை நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.
நூல் : முஸ்லிம் 379
மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகிய காரியங்களை நாற்பது நாட்களுக்கு மேல் செய்யாமல் இருக்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கால வரம்பு விதித்தார்கள்.
நூல் : நஸாயீ 14
எனவே மீசை, நகம், மற்றும் அந்தரங்கப் பகுதியில் வளரும் முடிகள் ஆகியவற்றை அதிகபட்சமாக நாற்பது நாட்களுக்குள் அகற்றிவிட வேண்டும்