மறுமையை நாசமாக்கும் கடன்
————————————————
பிறரிடமிருந்து கடன் வாங்குவதற்கு இஸ்லாம் அனுமதியளித்திருக்கிறது.
நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும்.
(அல்குர்ஆன்:2:282.)
கடன் கொடுக்கல் வாங்கலுக்கு அனுமதியளிக்கும் இஸ்லாம் அந்தக் கடனை எழுதிக் கொள்ள வேண்டும் என்றும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனையிடுகிறது. இந்த நிபந்தனைகளில் இன்றைக்குக் கவனம் செலுத்துபவர்கள் மிக குறைவானவர்களே.
லட்சக்கணக்கான மதிப்புள்ள கொடுக்கல் வாங்கல் தங்களுக்கு மத்தியில் இருந்தாலும் அதை இன்றைக்கு எழுதிக் கொள்வதும் கிடையாது, சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வதும் கிடையாது. நிபந்தனையுடன் கடனுக்கு இஸ்லாம் அனுமதியளித்தாலும் கடனைப் பற்றி அதிகம் எச்சரிக்கையும் செய்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடத்தில் அதிகமாகப் பாதுகாவல் தேடியது கடனை விட்டுத்தான்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும்போது, அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்
இறைவா! மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள்.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் கடன் படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்’ என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 832
கடன் வாங்குபவன் பொய் பேசுபவனாகவும், வாக்குறுதி மோசடி செய்பவனாகவும் மாறி விடுகிற காரணத்தினால் தான் கடனிலிருந்து அதிகமாக நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். கடன் என்று ஒரு வாசலைத் திறந்துவிட்டால் அது பல பாவங்களுக்கான வழியாக அமைந்துவிடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உணவுக்கும் அத்தியாவசிய தேவைக்கும் கஷ்டப்பட்ட காலத்தில் கூட அதிகமாகக் கடனிலிருந்து பாதுகாவல் தேடியுள்ளார்கள். ஆனால் இன்றைக்குக் கடன் என்பது அத்தியாவசியத் தேவைக்கு, சிரமம் ஏற்படும் போது கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை மாறி அடுத்தவரைப் போன்று தானும் வாழ வேண்டும் என்ற பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் கடன் வாங்குகின்ற சூழ்நிலை இருக்கிறது.
கடனை வாங்குபவர்கள் அதைத் திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணமில்லாமல் மரணம் வரை அலட்சியமாக இருந்து மரணித்து விடுகின்றனர். கடன் இருக்கும் நிலையில் மரணித்துவிட்டால் அது இறைவனால் மன்னிக்கப்படாத மிகப்பெரும் பாவமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 3832
ஷஹீத் என்பது இஸ்லாத்தில் ஆகச்சிறந்த காரியமாக இருக்கிறது. அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் அந்தஸ்தைப் பெற்றுத்தரும் செயல். அவரது அனைத்து பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அத்தகையை ஷஹீத் கடன் இருக்கும் நிலையில் மரணித்துவிட்டால் அவருக்கு அதன் பாவங்கள் மன்னிக்கப்படாது என்றால் மரணத்திற்கு முன்னரே நிறைவேற்ற வேண்டிய காரியங்களில் கடன் முதன்மையானதாக இருக்கிறது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். மக்கள், யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர் என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும்.
அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்) என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்-5037
இதுபோன்று மறுமையில் மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் கடனிலிருந்து நாம் பாதுகாப்பு பெற்றுக் கொள்வோம்
———————-
ஏகத்துவம்