மறுமையில் நபியின் பெற்றோரின் நிலை…?
நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் இறை மறுப்பாளர்கள் என்று நாமாக நமது சொந்தக் கருத்தையோ, அல்லது கற்பனைக் கதையையோ குறிப்பிடவில்லை.
தனது தாய், தந்தையர் நரகவாதிகள் என்று நபியவர்களே தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே!
(இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்? என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில் என்று பதிலளித்தார்கள்.
அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து,
என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் ( இருக்கிறார்கள் ) என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம 347
மேற்கண்ட செய்தியில் தனது தந்தையின் நிலை பற்றி ஒருவர் நபியிடம் கேட்கிறார், அவருடைய தந்தை நரகத்தில் இருப்பதாக நபியவர்கள் சொன்னவுடன் அவர் திரும்பிச் செல்கிறார் அப்போது அவரை மீண்டும் அழைத்த நபியவர்கள் என் தந்தையும் (அப்துல்லாஹ்) உன் தந்தையும் நரகத்தில் இருக்கிறார்கள் என்று தனது தந்தையும் நரகத்தில் தான் இருக்கிறார் என்ற தகவலை குறிப்பிட்ட நபரிடத்தில் தெரிவித்து ஆறுதல் படுத்தி அனுப்புகிறார்கள்.
நபியின் தந்தை நரகத்தில் தான் இருக்கிறார் என்பதற்கு நேரடியான சான்றாக மேற்கண்ட ஹதீஸ் காணப்படுகிறது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள்,
நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான்.
எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1777
நபியவர்கள் மரணித்த தன் தாய்க்காக பாவ மன்னிப்புக் கோர இறைவனிடம் அனுமதி கேட்கிறார்கள், இறைவன் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று மேற்கண்ட செய்தி சொல்கிறது.
நபியின் தாய் முஸ்லிமாக இருந்திருந்தால் இறைவன் நபியின் தாய்க்காக பாவ மன்னிப்பு கேட்பதை ஆகுமாக்கியிருப்பான்.
அவர்கள் இணைவைத்து, குப்ரிய்யத்தில் இருந்ததினால் தான் அவர்களுக்காக பாவ மண்ணிப்புக் கேட்பதற்கு இறைவன் அனுமதி கொடுக்கவில்லை. என்பது மேற்கண்ட செய்தியில் இருந்து நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
ஏன் என்றால் யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாறோ அவருக்காக நாம் பாவ மன்னிப்புக் கோர முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் தெளிவான நிலைபாடாகும்.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
[அல்குர்ஆன் 9:113]
ஏகத்துவம்