*அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…*
எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. சாந்தியும் சமாதானமும் நமது இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!
முதலில் இறையச்சத்தை (தக்வா) எனக்கும், உங்களுக்கும் நினைவூட்டிக் கொள்கிறேன். அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதே இம்மைக்கும் மறுமைக்கும் வெற்றியைத் தரும்.
இன்று நாம் சிந்திக்கவிருக்கும் தலைப்பு, நாம் அடிக்கடி மறக்கின்ற, ஆனால் நம்மைத் தேடி வருவது மிக உறுதியான ஒன்றைப் பற்றியது. அதுதான் *மரணம்*.
அல்லாஹ் தனது திருமறையில் மிகத் தெளிவாகக் கூறுகிறான்:
> “ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும்.” (3:185)
நாம் இந்த உலக வாழ்க்கையில் வீடுகளையும், சொத்துக்களையும் பாதுகாப்பதில் காட்டும் அக்கறையில் ஒரு சிறு பகுதியைக்கூட, மரணத்தைச் சந்திப்பதற்குத் தயாராவதில் காட்டுவதில்லை. நாம் எதைக்கண்டு பயந்து ஓடுகிறோமோ, அது நம்மை நிச்சயம் சந்திக்கும். அல்லாஹ் கூறுகிறான்:
> “நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது.” (62:8)
சிலர் நினைக்கலாம், நாம் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம், சிறந்த மருத்துவ வசதிகள் நம்மிடம் உள்ளன என்று. ஆனால் அல்லாஹ் சொல்கிறான்:
> “நீங்கள் எங்கே இருந்தபோதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.” (4:78)
*சகோதரர்களே!*
மரணத்திற்கு ஒரு நேரம் குறிக்கப்பட்டுவிட்டது. அந்த நேரம் வரும்போது ஒரு நொடி கூட தாமதிக்கப்படாது. அல்லாஹ் எச்சரிக்கிறான்:
> “உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள் ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள்” (34:30)
அந்த இறுதித் தருணத்தில், மனிதன் அல்லாஹ்விடம் கெஞ்சுவான், “யா அல்லாஹ்! எனக்குச் சிறிது அவகாசம் கொடு, நான் நல்ல அமல்கள் செய்கிறேன்” என்று. ஆனால் பதில் என்ன வரும் தெரியுமா?
> “எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான்.” (63:11)
எனவே, அந்தத் தருணம் வருவதற்கு முன்பே விழித்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகிறான்:
> “உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்!” (63:10)
நபி (ஸல்) அவர்கள் நமக்கு மண்ணறையின் பயங்கரத்தை நினைவூட்டினார்கள். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது,
“அடக்கவிடத்தில் (கப்றில்) மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறி விட்டார்கள்” என அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அறிவிக்கிறார்கள் (நூல்: புகாரி 1373).
*இறை நம்பிக்கையாளர்களே!*
இந்த உலகம் ஒரு நிரந்தரமான தங்குமிடம் அல்ல. இதை நபி (ஸல்) அவர்கள் மிக அழகாக நமக்கு உணர்த்தியுள்ளார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் கூறியதை நாம் ஒவ்வொருவரும் நெஞ்சில் நிறுத்த வேண்டும்:
> “இந்த உலகத்தில் நீ ஒரு பயனியைப் போன்று வாழ். அல்லது வழிப்போக்கனைப் போல் வாழ். மண்ணறைக்குள் சென்று விட்டவர்களில் ஒருவனாக உன்னை நீ கருதிக்கொள்.” (நூல்: முஃஜம் இப்னில் அஃராபி)
நாம் மறுமையை நோக்கிப் பயணிக்கும் வழிப்போக்கர்கள். நம்முடைய உண்மையான வீடு மறுமைதான். உலக ஆசைகள் நம்மைத் திசை திருப்பும்போது, மரண சிந்தனையைக் கொண்டு அதைத் தகர்த்தெறியுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
> “(தவறான) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்.” (நூல்: திர்மிதி)
மேலும், மண்ணறைகளைச் சந்திப்பது நமக்கு மறுமையை நினைவூட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (நூல்: திர்மிதி).
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மைவாடிக்கு சென்று வாருங்கள், அது நம் உள்ளத்தை மென்மையாக்கும்.
ஆகவே, கப்ரு வாழ்க்கையை நினைத்து இப்போதே அமல்களைச் சீர்திருத்திக் கொள்வோமாக.
அல்லாஹ் நம் அனைவருக்கும் பாவமன்னிப்பையும், நல்ல முடிவையும் தந்தருள்வானாக!