மன்னு, ஸல்வா
மன்னு, ஸல்வா என்பது மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறைவன் வானிலிருந்து சிறப்பாக வழங்கிய இரண்டு உணவுகளாகும். இவ்வுணவுகள் யாவை என்பது குறித்து திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ விபரம் ஏதும் கூறப்படவில்லை. ஆயினும் காளான் என்பது மன்னு என்ற உணவைச் சேர்ந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (பார்க்க புகாரி 4478, 4639, 5708)
அவ்வுணவுகள் யாவை என்பதை அறிந்து கொள்வதால் எந்த நன்மையும் இல்லை. இறைவன் தன்புறத்திலிருந்து சிறப்பாக அந்தச் சமுதாயத்திற்கு உணவளித்தான் என்ற அடிப்படையை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது. (பார்க்க திருக்குர்ஆன் 2:57, 7:160, 20:80)
மனாத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல கடவுள் நம்பிக்கை உடையவர்கள் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயரே மனாத். (பார்க்க திருக்குர்ஆன் 53:20)
மஷ்அருல் ஹராம்
மஷ்அருல் ஹராம் என்பது மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள முஸ்தலிபா எனும் திடலில் இருக்கும் ஒரு மலைக் குன்றின் பெயராகும். (பார்க்க திருக்குர்ஆன் 2:198)