மன்ஜில் (منزل) என்ற பெயரில் சில குறிப்பிட்ட திருக்குர்ஆன் அத்தியாயங்களை ஓத வேண்டும் என்றும் அவ்வாறு ஓதினால் அதனால் பெரும் பலன் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.
இதற்கு சான்றாக பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர். இதற்குரிய பதிலை தரவும்.
ஹஜ்ரத் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களின் அருகில் இருந்த போது ஒரு கிராமவாசி அங்கு வந்து நாயகமே எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். அவருடைய நோய் என்ன? என நபியவர்கள் வினவியதற்கு அவர் ஒரு வகையான பைத்தியம் என்றார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் சமூகத்திற்கு அவரை அழைத்து வரச் செய்து அவர் முன்னிலையில் அவுது பில்லாஹி ஓதி, சூரத்துல் பாத்திஹா, சூரத்துல் பகராவின் ஆரம்பத்திலுள்ள நான்கு ஆயத்துக்கள், வஇலாஹுகும் இலாஹுன்(வ்)வாஹிது என்ற ஆயத், ஆயத்துல் குர்ஸி, சூரத்துல் பகராவின் கடைசியில் உள்ள மூன்று ஆயத்துக்கள், ஷஹிதல்லாஹு அன்னஹு என்ற ஆயத், சூரா முஃமினீனின் இறுதியில் உள்ள
ஃபதஆலல்லாஹுல் மலிக்குல் ஹக் என்ற ஆயத், சூரா ஜின்னில் உள்ள வஅன்னஹு தஆலா ஜத்து ரப்பினா என்ற ஆயத், சூரா வஸ்ஸாப்பாத்தில் உள்ள முதல் பத்து ஆயத்துக்கள், சூரா ஹஷ்ருடைய கடைசி மூன்று ஆயத்துக்கள், சூரா குல்ஹுவல்லாஹு அஹது, சூரா குல் அஊது பிரப்பில் பலக், சூரா குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகியவற்றை ஓதினார்கள்.
உடனே அந்த மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு நோய் ஏதேனும் இருந்ததாக எண்ணுவதற்குக் கூட இடமில்லாதவாறு அவர் ஆகிவிட்டார்.
திருக்குர்ஆன் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு சில குறிப்பிட்ட வசனங்களுக்கு பல சிறப்புகள் உள்ளன என்ற ஆதாரமற்ற இட்டுகட்டப்பட்ட பல செய்திகள் மக்களிடம் பரவலாக அறியப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்டது. இந்த செய்தி ஹாகிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அரபி மூலம் இதோ:
இந்த செய்தியை பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், “அபூஜனாப் அல்கல்பீ என்பவரைத் தவிர மற்ற அனைத்து அறிவிப்பாளர்களையும் இமாம் புகாரி, முஸ்லிம் இருவரும் ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த செய்தி பாதுகாக்கப்பட்ட ஆதாரப்பூர்வமானதாகும்” என்று அந்த செய்தியின் கீழே கூறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் ஹாகிம் அவர்கள் ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று கூறுவதில் கவனகுறைவாக நடந்த கொள்பவர், இவரின் இது போன்ற கருத்துக்களை ஆய்வு செய்த பிறகே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் கருத்து.
எனவேதான் இவரின் இந்த நூலை ஆய்வு செய்த இமாம் தஹபீ அவர்கள் அவர் ஆதாரப்பூர்வமானது என்று சொன்ன ஏராளமான செய்திகளை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். இந்த செய்தியையும் ஆய்வு செய்த இமாம் தஹபீ அவர்கள் இந்த செய்தி மறுக்கப்படவேண்டியது என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இந்த செய்தியின் நான்காவது அறிவிப்பாளர் அபூ ஜனாப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதன் விவரம் இதோ:
இப்னு ஸஅத் அவர்கள் இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.
யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளார்கள் என்று அலீ பின் அல்மதீனி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று அம்ர் பின் அலீ கூறியுள்ளார்கள்.
இப்ராஹீம் அல்ஜவ்ஸஜானீ அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.
யஃகூப் பின் சுஃப்யான் அவர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.
இமாம் நஸாயீ அவர்கள் இவர் நம்பகமானவர் இல்லை என்றும் இருட்டடிப்பு செய்பவர் என்று கூறியுள்ளார்கள். இப்னு அம்மார் அவர்களும் இவரை பலவீனமானவர் என்றே கூறியுள்ளார்கள்.
(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :11, பக்கம் :177)
எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்தக்கொள்ள முடியாது. என்றாலும் சில அத்தியாயங்களுக்கும் சில வசனங்களுக்கு குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளன என்று ஆதாரப்பூர்வமான செய்திகளும் உள்ளன. குறிப்பாக பாத்திஹா அத்தியாயம், பலக், நாஸ், ஆயத்துல் குர்ஸி போன்றவற்றிக்கு சில சிறப்புகள் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளன.
ஏகத்துவம்