மன்ஜில்கள்
முப்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டது போல் ஏழு மன்ஜில்களாகவும் குர்ஆனைச் சிலர் பிரித்துள்ளனர்.
இது திருக்குர்ஆனின் ஓரங்களில் இன்றளவும் அச்சிடப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்க வேண்டும் என்பதற்காக சமஅளவிலான ஏழு பாகங்களாகக் குர்ஆனைப் பிரித்தனர். இதுவே மன்ஜில் எனப்படுகிறது.
இதுவும் நம்முடைய வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட பிரிவு தானே தவிர, அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பிரித்தது அல்ல. இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதியில் மன்ஜில் என்பது இல்லை.
வாரத்தில் ஒரு முறை திருக்குர்ஆனை ஓதி முடிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. ஆயினும் தினமும் இந்த அளவு தான் ஓத வேண்டும் என்பது அவரவர் தீர்மானம் செய்ய வேண்டியதே தவிர மற்றவர்கள் அதை அளவிட்டுக் கூறுவது ஏற்க முடியாதது. மேலும் குர்ஆன் அல்லாததை குர்ஆனில் எழுதியிருப்பதும் ஏற்க முடியாததாகும்.
ருகூவுகள்
தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வளவு தான் ஓத வேண்டும் என்று சிலர் தன்னிச்சையாக எவ்விதச் சான்றுமில்லாமல் முடிவு செய்து திருக்குர்ஆனை 558 ருகூவுகளாகவும் பிரித்தனர். இதை ஐன் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு அடையாளமாக ஓரங்களில் ‘ஐன்’ என்ற அரபு எழுத்தை அச்சிட்டுள்ளனர்.
தொழுகையைப் பொறுத்த வரை ஒவ்வொருவரும் தமக்கு இயன்ற அளவுக்கு ஓதலாம் எனத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது.
திருக்குர்ஆன் 73:20
இந்த அளவுதான் ஓத வேண்டும் என்று அளவிட்டுக் கூறுவது மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு முரணாக இருப்பதால் இந்தப் பிரிவை நமது இந்த வெளியீட்டில் அடியோடு புறக்கணித்து விட்டோம். ‘ஐன்‘ என்ற எழுத்தை அச்சிடுவதைத் தவிர்த்து விட்டோம். ஏனெனில் தொழுகை எனும் வணக்கத்தில் தலையிடுவதாக இந்தப் பிரிவு அமைந்துள்ளது. ஒரு ரக்அத்தில் இவ்வளவு தான் ஓத வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை.