மனைவி பீடி சுற்றுவதை கணவன் விரும்பவில்லை. இதை அன்பாகவும், கடுமையாகவும் தெரிவித்தும் அதை அவர் விடுவதாக இல்லை. அவ்வாறு கணவன் பேச்சை மீறி மனைவி பீடி சுற்றலாமா?
மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களைத் தாயாரிப்பதையும், அது தொடர்பான வேலைகளைச் செய்வதையும் மார்க்கம் தடை செய்துள்ளது.
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
திருக்குர்ஆன் 2:195
மதுவை இஸ்லாம் தடைசெய்துள்ளது. இதைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் அனைவரும் குற்றவாளிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மதுவையும், அதைப் பருகக்கூடியவனையும், அதைப் பரிமாறக்கூடியவனையும், அதை விற்பவனையும், வாங்குபவனையும் அதைத் தயாரிப்பவனையும், தயாரிக்குமாறு கோருபவனையும், அதைச் சுமந்து செல்பவனையும், யாரிடம் அது கொண்டுசெல்லப்படுமோ அவனையும் அல்லாஹ் சபிக்கின்றான்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவூத் 3674
மார்க்கத்திற்கு முரணில்லாமல் கணவன் இடும் கட்டளைகளுக்கு மனைவி அவசியம் கட்டுப்பட வேண்டும்.
இதை மீறினால் மார்க்க வரம்பை மீறிய குற்றமும், கணவனுக்குக் கட்டுப்பட மறுத்த குற்றமும் ஏற்படும். நல்ல பெண்மணி இப்படிப்பட்ட காரியத்தைச் செய்ய மாட்டார். பின்வரும் செய்திகள் மனைவி கணவனுக்குக் கட்டுப்படுவதின் அவசியத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
ஒரு மனிதன் சேமிக்கும் சொத்துக்களில் சிறந்ததை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடத்தில் கேட்டு விட்டு, (அது) நற்குணமுள்ள பெண்மணியாகும். கணவன் அவளைக் காணும் போது கணவனுக்கு மகிழ்ச்சியூட்டுவாள். கணவன் உத்தரவிட்டால் கட்டுப்படுவாள். கணவன் இல்லாத போது அவனுக்காக பாதுகாப்பாள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவூத் 1417
ஹுசைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு தேவைக்காக வந்திருந்தார். தேவையை முடித்துக்கொண்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடத்தில் உனக்குக் கணவன் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடத்தில் நீ எவ்வாறு நடந்து கொள்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்னால் இயலாமல் போனாலே தவிர அவருக்கு நன்மை செய்வதில் நான் குறைவு வைக்க மாட்டேன் என்று கூறினார். நீ எவ்வாறு அவரிடத்தில் நடந்து கொள்கிறாய் என்பதில் கவனமாக இருந்து கொள். ஏனென்றால் அவர் தான் உனது சொர்க்கமாவார். உனது நரகமுமாவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹுஸைன் பின் மிஹ்ஸன் (ரலி)
நூல் : அஹ்மத் 19025