மனைவியின் பொறுப்பு என்ன?
கணவனின் வீட்டைப் பாதுகாப்பதும் பிள்ளையை முறையாக வளர்ப்பதும் கணவனுக்குப் பிடித்தவாறு நடந்துகொள்வதும் மனைவியின் மீது கடமை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப் படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே.
ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (5200)
கணவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் மனைவி அனுமதிக்கலாகாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5195)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக்குல பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்ட வர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5082)
அலங்கரித்துக்கொண்டு கணவனுக்கு முன்னால் வர வேண்டும்
கணவனுக்கு முன்னால் தன்னை அலங்கரித்துக் கொண்டு வர வேண்டும். கணவன் மனைவியை பார்க்கும் போது அவனுக்கு சந்தோஷமும் ஆசையும் ஏற்படவேண்டும்.
(தபூக் போரிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த என்னிடம்) நபி (ஸல்) அவர்கள், “நீ இரவில் (மதீனாவுக்குள்) நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே! (வெளியூர் சென்ற கணவரைப்) பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தன்னை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளும் வரை,
தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலைவாரிக்கொள்ளும் வரை (பொறுமை யாயிரு!)” என்று கூறிவிட்டு, “புத்திசாலித்தனமாக நடந்து(குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : புகாரி (5245)
ஒரு ஆண் சேமித்து வைக்கும் சொத்தில் சிறந்தது நல்ல பெண்ணாகும். கணவன் அவளை காணும் போது அவனுக்கு அவள் சந்தோஷத்தை ஏற்படுத்துவாள். கட்டளையிடும் போது அவனுக்குக் கட்டுப்படுவாள். கணவன் இல்லாத போது அவன் (சொத்தைப்) பாதுகாப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவுத் (1417)
கணவன் அழைக்கும் போது மறுக்கக்கூடாது
ஒருவர் தம்முடைய மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக்கொண்டேயிருக்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5193)
கணவனுடைய ஆசையை நிவர்த்தி செய்வது மனைவியின் கடமை. நோன்பு வைத்திருக்கும் போது உடலுறவு கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே உபரியான நோன்புகளை கணவனின் அனுமதி இல்லாமல் வைக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரது அனுமதி இல்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்கக் கூடாது.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : புகாரி (5192)
தன் தேவைக்காக கணவன் மனைவியை அழைத்தால் அவள் அடுப்பில் (வேலை பார்த்துக்கொண்டு) இருந்தாலும் அவனிடத்தில் செல்லட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : தல்க் பின் அலீ (ரலி)
நூல் : திர்மிதி (1080)