நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து யூதர்கள் சில முறைகளில் தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது என்று கருதி வந்தனர். அவ்வாறு உறவு கொண்டால் குழந்தை மாறு கண்ணுடையதாகப் பிறக்கும் எனவும் பிரச்சாரம் செய்து வந்தனர்.
ஒருவர் தம் மனைவியிடம் பின்புறத்திலிருந்து பிறப்புறுப்பில் உடலுறவு கொண்டால் (பிறக்கும்) குழந்தை மாறுகண் கொண்டதாக இருக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே, “உங்கள் மனைவியர் உங்களுக்கு விளைநிலம் (போன்றவர்கள்). எனவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்களது விளைநிலத்திற்குச் செல்லுங்கள்” எனும் (2:223ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
நூல்: முஸ்லிம் 2826
இந்த நம்பிக்கைக்கு எதிராகத் தான் இவ்வசனம் அருளப்பட்டது. மனைவியருடன் எந்த முறையில் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்பதற்குச் சான்றாக இது அமைந்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட நாட்களில் தான் இல்லறம் நடத்த வேண்டும் என்பன போன்ற மூட நம்பிக்கைகளையும் இவ்வசனம் எதிர்க்கின்றது. “நீங்கள் விரும்பியவாறு” என்ற சொற்றொடரிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
இது தவிர இன்றைய நவீன உலகில் ஏற்பட்டுள்ள முக்கியமான பிரச்சினைக்கும் கூட இவ்வசனம் தீர்வு கூறுகின்றது.
குழந்தை பெற முடியாத நிலையில் செயற்கை முறையில் கருவூட்ட, பல வழிகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அனுமதிக்கப்பட்டது எது, தடுக்கப்பட்டது எது என்பதற்கும் இவ்வசனம் தீர்வு கூறுகின்றது.
“உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள்” என்ற சொற்றொடர் மூலம் கணவனின் உயிரணுவை எடுத்து செயற்கை முறையில் மனைவிக்குச் செலுத்தலாம் என்றும், கணவன் அல்லாத மற்றவர்களின் உயிரணுவை எடுத்து இவ்வாறு செய்வது கூடாது என்றும் விளங்கலாம்.