மனைவிக்கு சொத்தில் பங்கு எவ்வளவு?

ஒரு குடும்பத்தில் இரு சகோதரர்கள். இருவரும் திருமணம் ஆனவர்கள். பிள்ளைகளும் இருக்கின்றார்கள். 4 வருடங்களுக்கு முன் தம்பி இறந்துவிட்டார். தம்பி மனைவி மறுமணம் செய்ய கொளுந்தனார் தடுக்கின்றார். தம்பியின் சொத்துக்களை தம்பி மனைவியிடம் கொடுக்கவில்லை. தம்பியின் பிள்ளைகளுக்கு மட்டும் தருவதாகச் சொல்கின்றார். இஸ்லாமிய மார்க்கத்தில் என்ன தீர்வு?

இறந்தவருக்கு மனைவி இருந்தால் இஸ்லாமிய வாரிசு உரிமைச் சட்டப்படி மனைவிக்கு பங்கு உண்டு. இறந்தவருக்கு பிள்ளைகள் இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் பிள்ளைகள் இல்லாவிட்டால் மனைவிக்கு நான்கில் ஒரு பாகம் அதாவது கால்பாகம் கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் உத்தரவிடுகின்றது.

உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்).

திருக்குர்ஆன் 4:12

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

(தொடக்கக் காலத்தில்) சொத்து பிள்ளைக்குரியதாகவும், மரண சாசனம் தாய் தந்தைக்குரியதாகவும் இருந்தது. தான் விரும்பியதை அதிலிருந்து அல்லாஹ் மாற்றி விட்டான். இரு பெண்களின் பங்குக்குச் சமமானதை ஆணுக்கு (அவனது பங்காக) நிர்ணயித்தான். தாய் தந்தையரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கை நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும், நான்கில் ஒரு பங்கையும், கணவனுக்குப் பாதியையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்.

நூல் : புகாரி 2747

எனவே நீங்கள் கூறிய பிரச்சனையில் இறந்தவருக்குப் பிள்ளைகள் இருப்பதால் அவருடைய மனைவிக்கு எட்டில் ஒருபாகம் கொடுக்கப்பட வேண்டும். இதைக் கொடுக்காமல் இருப்பதற்கும் தம்பி மனைவி மறுமணம் செய்வதை தடை செய்வதற்கும் இறந்தவரின் அண்ணணுக்கு எந்த உரிமையும் இல்லை.

யார் யாருக்கு எவ்வளவு பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை அல்லாஹ் விவரித்துவிட்டு இறுதியாக பின்வருமாறு கூறுகிறான்.

இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 4:13

கணவன் மனைவிக்கான உறவு முறிந்த பின்னர் பெண்கள் மறுமணம் செய்வதை தடுக்க்க் கூடாது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் எச்சரிக்கை செய்கிறான்.

 

பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்து அவர்கள் தமது (இத்தா) காலக்கெடுவை அடைந்து விட்டால் அவர்கள் தமக்குப் பிடித்தமான கணவர்களை மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடியவருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் (2:232)

அல்லாஹ் கூறிய பங்கீட்டு முறைக்கு கட்டுப்படாதவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் கடுமையான எச்சரிக்கையையும், மறுமணம் செய்வதை தடுக்க்க் கூடாது என்று அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையையும் நீங்கள் இறந்தவரின் அண்ணனிடத்தில் எடுத்துக்கூறி மனைவிக்குச் சேர வேண்டிய எட்டில் ஒரு பாகத்தைக் கொடுக்க வேண்டும் என்றும், தம்பி மனைவி மறுமணம் செய்வதை தடைசெய்யக்கூடாது என்றும் கூறுங்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *