மனித குல ஒருமைப்பாடு
கடவுளை மறுப்பவர்கள் உருவாகிட மற்றொரு காரணம் பிறப்பின் அடிப்படையில் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகள். கடவுளை மனிதர்கள் வழிபட வேண்டும் என்றால் அந்த உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலையைக் காண முடியாதவர்கள் கடவுளையே மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட குலத்தில் பிறந்த ஒருவன் குளித்து முழுகி புத்தாடை அணிந்து கடவுளை பூஜிப்பதற்காகச் செல்கிறான். இவன் போய் கடவுளை பூஜை செய்யும் போது இவனைப் போன்ற இன்னொருவன் தடுத்து நிறுத்துகிறான். நாங்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும். நீங்கள் எங்கள் வழியாகத் தான் பூஜை செய்ய வேண்டுமே தவிர நேரடியாகச் செய்ய முடியாது என்கிறான்.
எனக்கு மந்திரம் தெரியும் எனக் கூறினாலும், நானும் சுத்தமாகக் குளித்து விட்டுத் தான் வந்துள்ளேன் எனக் கதறினாலும் அவன் ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்ததால் தடுக்கப்படுகிறான். இப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவைதானா என்ற சிந்தனைக்கு அவன் ஆளாகிறான்.
மனிதனின் முயற்சியால் பெறக்கூடிய கல்வி, பதவி, புகழ், போன்ற காரணங்களால் உயர்வு கற்பிக்கப்படுவதையாவது ஏற்கலாம். மனித முயற்சியால் கிடைக்கப் பெறாத குலத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டால் அதைக் கடவுளும் ஏற்றுக் கொள்வாரானால் அந்தக் கடவுளை மறுப்பதில் நியாயம் இருக்கத் தான் செய்கிறது. பிறப்பின் அடிப்படையில் மனிதனைக் கூறுபோட்டு வேறுபடுத்தும் சித்தாந்தத்துக்கு எதிராக ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் சம்மட்டி அடி கொடுக்கிறது.
அவன் ஒருவன் மட்டுமே எஜமான். மற்ற அனைவரும் அடிமைகள் தான். நான் எப்படி கடவுளின் அடிமையாக இருக்கிறேனோ அது போன்று தான் நீயும் ஒரு அடிமை. அடிமைகள் என்ற விதத்தில் இருவரும் சமமானவர்கள் தான். எஜமான் முன்னிலையில் நிற்கும் எவரும் அவனது அடிமைகளாகத் தான் நிற்க வேண்டும் என்ற சிந்தனையை மனிதனுக்கு ஊட்டி குலப் பெருமைக்கு சாவு மணி அடிக்கிறது ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர்.
கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே புரோக்கரும், புரோகிதரும் இல்லை என்பதையும் இந்தச் சொற்றொடர் தாங்கி நிற்கிறது. கடவுளை நம்பும் மக்கள் அவனை ரப்புல் ஆலமீன் என்றும் நம்பி விட்டால் இது போன்ற அவமானங்களைச் சுமக்கும் நிலை ஏற்படாது. சுயமரியாதைக்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.
மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே என்பதைக் கூறும் வசனங்கள் யாவும் ரப்புல் ஆலமீன் என்பதற்கான விளக்கவுரைகளே!
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
(அல்குர்ஆன் 49:13)
அற்பமானவை தவிர பெரும்பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் யார் தவிர்த்துக் கொள்கிறாரோ உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன். உங்களைப் பூமியிலிருந்து படைத்த போதும், உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்த போதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.
(அல்குர்ஆன் 53:32)
எந்தச் சட்டங்களாலும் ஒழித்துக்கட்ட முடியாத வேற்றுமைகளையும், தீண்டாமையையும் ரப்புல் ஆலமீன் என்று கடவுளை நம்புவதன் மூலம் அடியோடு ஒழித்துக் கட்ட முடியும். இஸ்லாம் ஒழித்துக் கட்டிக் காட்டியது. இன்றும் கூட ஒழித்துக் கட்டி வருகிறது?
ரப்புல் ஆலமீன் எனும் போது மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே என்ற கருத்தும் அடங்கியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரப்புல் ஆலமீன் என்பதற்கு, அனைவரும் அவனது அடிமைகளே என்றும். கடவுள் ஒருவரே என்றும், கடவுள் தேவைகளற்றவன் என்றும், மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே என்றும், பொருள் இருப்பது போல் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் மற்றொரு கருத்தையும் உள்ளடக்கி இருக்கின்றது.
மனிதனுக்கு மனிதன் அடிமை அல்ல
மனிதன் கடவுளை மறுப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. கடவுளை இப்படி வணங்க வேண்டும். இந்த நாளில் வணங்க வேண்டும் என்றெல்லாம் ஒழுங்குகள் எல்லா மதங்களிலும் உள்ளன. இந்த ஒழுங்குகள் யாரால் உருவாக்கப்பட்டன என்று கேட்டால் அதற்குச் சரியான விடை கிடைப்பதில்லை. இன்றைக்கு மதகுருவாக இருப்பவர் கூட ஒரு வணக்கத்தை உருவாக்க முடியும்.
இதைப் பார்க்கும் ஒருவன் நம்மைப் போல் இருக்கின்ற இந்த மனிதன் இப்படித் தான் கடவுளை வணங்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம் என்று சிந்திக்கிறான். இந்த வழிபாட்டு முறை கடவுளிடமிருந்து வந்தது என்று அவர்கள் விடையளிக்க முடியாது. அப்படி விடையளித்தால் காலத்திற்கேற்ப வழிபாடுகள் மாறாது. புதுப்புது வழிபாடுகள் உருவாக முடியாது. நம்மைப் போன்ற மனிதன் கண்டு பிடித்ததை ஏற்கும் போது அவனையே நாம் கடவுளாகக் கருதும் நிலை ஏற்படும்.
ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் அந்தக் குறையையும் நிவர்த்தி செய்துவிடுகிறது.
எந்த மதகுருவும் புதிதாக ஒரு வழிபாட்டு முறையை உருவாக்க முடியாது. கடவுள் எப்படி வழிபட வேண்டும் என்று குர்ஆன் மூலம் கட்டளையிட்டானோ அல்லது அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) மூலம் வழிகாட்டினானோ, அவை மட்டும் தான் வணக்க வழிபாடுகள். அதற்குப் பிறகு எந்த வணக்கமோ எந்தச் சட்டதிட்டமோ கிடையாது. ஏனெனில் ரப்புல் ஆலமீன் தான் அடிமைகளுக்கு எந்தக் கட்டளையும் பிறப்பிக்க முடியும்.
ஒரு அடிமை இன்னொரு அடிமையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதோ, அடிமைப்படுத்த எண்ணுவதோ எவ்விதத்திலும் நியாயமானதல்ல. எஜமான் தான் அடிமைகள் மீது ஆதிக்கம் செலுத்த அருகதை உள்ளவன்.
ஒன்றை ஹலால் (அனுமதிக்கப்பட்டது) எனப் பிரகடனப்படுத்தவோ, ஹராம் என்று தடை உத்தரவு பிறப்பிக்கவோ, ஒன்றைக் கடமையாக்கவோ, சட்டங்கள் வகுக்கவோ, வணக்கங்களுக்கு உரிமை கொண்டாடவோ எஜமான் மட்டுமே அருகதை உள்ளவன். எந்த ஒரு அடிமையும் இன்னொரு அடிமைக்கு இது போன்ற கட்டளைகளை இடமுடியாது என்பதையும் ரப்புல் ஆலமீன் என்ற உயர் பண்பு மூலம் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
தனது அதிகாரத்தை இதன் மூலம் ஊர்ஜிதம் செய்து கொள்ளும் அல்லாஹ், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சட்டங்கள் இயற்றி, அடிமைப்படுத்துவதைத் தடை செய்வதன் மூலம் மனிதனது சுயமரியாதையையும் அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்.
மத குருமார்கள் மீது கொண்ட பக்தியின் காரணமாக மக்கள் மத குருமார்களின் கால்களில் விழுந்து வணங்குவதையும், அவர்களிடம் தம் தேவைகளை முறையிடுவதையும், அவர்களிடம் ஆசி பெறுவதையும், அவர்களுக்குக் காணிக்கை செலுத்துவதையும் நாம் காண்கிறோம்.
பதவிக்காகவும், பணத்துக்காகவும், இன்னும் பல ஆதாயம் கருதியும் தலைவர்களின் கால்களில் தொண்டர்கள் விழுந்து கிடப்பதையும், பாத பூஜை செய்வதையும் நாம் காண்கிறோம்.
மத குருமார்களோ, தலைவர்களோ யாராயினும் அவர்களும் மனிதர்களே! அவர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் தேவைப்படுகின்றன. மற்றவர்களைப் போல் அதை விட அதிகமாகவே அவர்களுக்கும் ஆசைகள் உள்ளன. போட்டி, பொறாமை, பழிவாங்குதல், பெருமை, ஆணவம் போன்ற எல்லா பலவீனங்களும் அவர்களிடமும் உள்ளன. மற்றவர்களைப் போலவே மலஜலத்தைச் சுமந்தவர்களாக அவர்களும் உள்ளனர்.
இதெல்லாம் தெரிந்திருந்தும் மனிதன் இத்தகையவர்களிடம் தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து விடுகிறான். படைத்த இறைவனுக்கு மட்டுமே சிரம் தாழ்த்த வேண்டும் என்பதை உணராததே இந்த அவலத்துக்குக் காரணம்.
அகில உலகுக்கும் ஒருவன் தான் எஜமான், மற்ற அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்பதை அறிந்தால் இத்தகைய இழிவை மனிதன் தன் மேல் சுமத்திக் கொள்ள மாட்டான்.
முஸ்லிம் சமுதாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தம் உயிரினும் மேலாக மதிக்கின்றது. மற்ற எந்த மதத்தவரும் தம் தலைவர்களை மதிப்பதை விட அதிமதிகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம் சமுதாயம் மதிக்கின்றது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வணங்கியதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் வந்தவர்களும் அவர்களை வணங்குவதில்லை.
நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்துக்குள் நுழைந்தார்கள். அங்கே இரு ஒட்டகங்கள் நடுங்கிக் கொண்டு மூட்டுக்களை தரையில் வைத்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தவர்கள் ஒட்டகங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று பேசிக் கொண்டார்கள்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவரும் எவருக்கும் ஸஜ்தாச் செய்வது கூடாது. ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்யலாம் என்று இருந்தால் பெண்கள் தமது கணவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிட்டிருப்பேன். ஏனெனில் மனைவியின் மீது கணவனுக்குள்ள உரிமையை அல்லாஹ் முக்கியத்துவப்படுத்தியுள்ளான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி); நூல் : இப்னுஹிப்பான் 4162
தமக்காகப் பிறர் எழுந்து நிற்பதையும் நபியவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்கள்: திர்மிதீ 2678, அஹ்மத் 11895
தாம் அடக்கம் செய்யப்பட்ட பின் தமது அடக்கத்தலம் வணக்கத்தலமாக ஆகக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: அஹ்மத் 7054
நபிமார்களின் அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கியதற்காக யூதர்களையும், கிறித்தவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816
நபியவர்களின் இந்தப் போதனைகள் யாவும் ரப்புல் ஆலமீன் என்பதன் விளக்கவுரைகளே.
ரப்புல் ஆலமீன் என்ற நம்பிக்கை எவரது உள்ளத்தில் பதிந்து விட்டதோ அவர்கள் ஒரு போதும் தன்மானத்தையும், சுயமரியாதையையும் எவர் முன்னிலையிலும் இழக்க மாட்டார். எவ்வளவு பெரிய மகானாக தலைவனாக இருந்தாலும் அவனும் தன்னைப் போன்ற ஒரு மனிதன் தான் என்பதை சரியாக உணர்ந்து கொள்வார்.
மனிதனுக்கு மனிதன் அடிமைப்படுவதிலிருந்து விடுவிக்கும் மந்திரச் சொல்லே ரப்புல் ஆலமீன்.
அனைவருக்கும் எஜமானாக, அனைவரையும் படைத்தவனாக, அனைத்தையும் பரிபாலனம் செய்பவனாக, மொழி, நிறம், இனம் என்ற பேதங்களைக் கடந்து அனைவரையும் இரட்சிப்பவனாக, போட்டியாக எந்த சக்தியும் இல்லாதவனாக, எதனையும் எப்போதும் செய்ய ஆற்றல் மிக்கவனாக, எல்லா இலாக்காக்களையும் தன் ஆதிக்கத்தில் கொண்டவனாக, திகழும் அந்த மகத்தான சர்வசக்தனைத் தவிர வேறு எவன் புகழுக்கு உரிமை கொண்டாட இயலும்?
அதனால் தான் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகில உலகத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று அல்லாஹ் பிரகடனம் செய்கின்றான்.