மனிதர்களில் சிறந்தவர்கள்–குழப்பங்களைத் தவிர்ப்பவர்கள்
குழப்பம் விளைவிப்பது கொலையைவிடக் கொடியது என்பது குர்ஆனின் போதனை. இதன் மூலம் குழப்பத்தின் கோரமுகத்தை, அதன் விஷத்தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. குழப்பம் என்பது குடும்பம், நாடு, சமுதாயம் என்று எந்த இடத்தில் இருந்தாலும் அதை அடியோடு பாழ்படுத்திவிடும். இதையறிந்தும், தங்களது ஆதாயங்களுக்காக மக்களுக்கு மத்தியில் பிரச்சனைகளை, பிணக்குகளை கிளப்பிவிடுபவர்கள் இருக்கிறார்கள். தங்களது சுயநலத்துக்காக குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் அல்லது இருக்கும் குழப்பத்தை வளர்த்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, நம்பிக்கையாளர்கள் ஒருபோதும் இருந்துவிடக் கூடாது. குழப்பமான தருணங்களின்போது அதைத் தீர்ப்பதற்கு, நீக்குவதற்கு முடிந்தளவு முயல வேண்டும். இல்லாவிடின், அதை வளர்த்து விடாமல் அதைவிட்டும் விலகிக் கொள்ள வேண்டும். இது மார்க்கம் காட்டும் சிறப்பான வழிமுறை ஆகும்.
விரைவில் நிறையக் குழப்பங்கள் தோன்றும். (அந்த நேரத்தில்) அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான்.
அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனை விடச் சிறந்தவன் ஆவான்.
அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான்.
எவர் அதை அடைகின்றாரோ அது அவரை வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது எவர் புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகின்றாரோ அவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெற்றுக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-3601
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி-2786 , 3836