மனிதர்களில் சிறந்தவர்கள்-ஏக இறைவனை நம்பியவர்கள்
காரணமில்லாமல் காரியமில்லை என்று சொல்வார்கள். எந்தவொரு செயலுக்குப் பின்னாலும் ஏதாவதொரு காரணம் கண்டிப்பாக இருக்கும். மிகப் பிரமாண்டமாக இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அதன் சீரான இயக்கத்திற்குப் பின்னாலும் காரணகர்த்தாவாக ஒரேயொரு இறைவன் இருக்கிறான். இத்தகைய இறைவன் ஒருவன் இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் மக்கள், ஏராளமாக இருக்கிறார்கள். அவன் கொடுத்திருக்கும் பகுத்தறிவைச் சரியாக முறையாகப் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். ஆகையால், அவனுடைய இடத்தில் படைப்பினங்களை வைத்து அவனுக்கு இணைக் கற்பிக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் சிலர், ஏக இறைவன் ஒருவன் இருக்கிறான் என்றும், அவன் மட்டுமே அனைத்து ஆற்றல்களையும் அதிகாரங்களையும் கொண்டவன் என்றும் நம்பிக்கைக் கொண்டு வாழ்கிறார்கள். இத்தகைய மக்கள், இவ்வாறு இல்லாத மற்ற மக்களைக் காட்டிலும் சிறந்தவர்கள்; உயர்ந்தவர்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இதைப் பின்வரும் வேதவரிகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளைவிட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவுதான் கவர்ந்தாலும் அவனைவிட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ், தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
(திருக்குர்ஆன் 2:221)