அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்
——————————————-
மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.
வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.
மரண அவஸ்தை உண்மையாகவே வந்து விட்டது. எதை விட்டு ஓடிக் கொண்டிருந்தாயோ அது இதுவே. ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள்.
ஒவ்வொருவரும் இழுத்துச் செல்பவருடனும், சாட்சியுடனும் வருவர். இதில் தான் நீ அலட்சியமாக இருந்தாய். உன்னை விட்டும் உனது திரையை நீக்கி விட்டோம். இன்று உனது பார்வை கூர்மையாகவுள்ளது.
(எழுதும் வானவராகிய) அவரது கூட்டாளி “இதோ என்னிடம் எழுதப்பட்ட ஏடு இருக்கிறது“ என்பார். பிடிவாதமாக (ஏக இறைவனை) மறுத்து, நல்லதைத் தடுத்து, வரம்பு மீறி, சந்தேகம் கொண்டு, அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒவ்வொருவரையும் நீங்களிருவரும் நரகில் போடுங்கள்!
இவனை நீங்கள் இருவரும் கடுமையான வேதனையில் போடுங்கள்! (என்று அவ்விரு வானவர்களுக்கும் கூறப்படும்).
“எங்கள் இறைவா! நான் இவனை வழிகெடுக்கவில்லை. இவனே தொலைவான வழிகேட்டில் இருந்தான்“ என்று அவனது கூட்டாளி(யான ஷைத்தான்) கூறுவான்.
“என்னிடம் தர்க்கம் செய்யாதீர்கள்! உங்களிடம் முன்னரே எச்சரிக்கை செய்து விட்டேன். என்னிடம் பேச்சு மாற்றப்படாது. நான் அடியார்களுக்கு அநீதி இழைப்பவனாகவும் இல்லை“ என்று (இறைவன்) கூறுவான்.
“நீ நிரம்பி விட்டாயா?” என்று நரகத்திடம் நாம் கேட்கும் நாளில் “இன்னும் அதிகமாகவுள்ளதா?” என்று அது கூறும்.
(இறைவனை) அஞ்சியோருக்கு சொர்க்கம் தொலைவின்றி நெருக்கத்தில் கொண்டு வரப்படும்.
திருந்தி, பேணி நடந்து, மறைவில் அளவற்ற அருளாளனுக்கு அஞ்சி, தூய உள்ளத்துடன் வந்த ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டது இதுவே.
“நிம்மதியுடன் இதில் நுழையுங்கள்! இதுவே நிரந்தரமான நாள்!” என்று கூறப்படும்.
அதில் அவர்கள் விரும்புவது அவர்களுக்கு உண்டு. அதிகமானதும் நம்மிடம் உண்டு.
📕அல்குர்ஆன்: [50:16-35]