மதுவை ஒழிப்போம்!
இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் நோய்களில் மதுவும் ஒன்று. மது அருந்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது என்பதை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக இளைஞர்களிடம் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
விழாக்காலங்களிலும் விஷேச நிகழ்ச்சிகளில் மது முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றது. தற்போது முடிந்த தீபாவளி வியாபரம் நம்மை அதிர வைக்கிறது. 220 கோடி ரூபாய்க்கு இந்த வருட தீபாவளியில் மது விற்பனையாகியுள்ளது. போன வருடம் 100 கோடிக்கு விற்ற மதுக்கள், இந்த வருடம் 100 சதவீதத்தையும் எட்டியது குடிமக்களின் எண்ணிக்கையின் அபார வளர்ச்சி காட்டுகிறது.
தமிழகத்தில் போன (2009) வருடம் மட்டும் 6700 டாஸ்மாக் கடைகள் இருந்தன. அதை இந்த வருடம் மேலும் 732 டாஸ்மாக் கடைகளாக உருவாக்கி 7432 என டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. ஆண்டுதோறும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் மட்டும் அரசுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது.
இந்த 10 ஆயிரம் கோடி வருமானத்திற்காகத்தான் தமிழக அரசு மதுவை ஒழிக்காமல் மதுக்கடைகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று ஒவ்வொரு மதுக்கடைகளில் எழுதி வைக்கச் சொல்லும் அரசு அந்த வாசகத்தின் பொருள் என்வென்று விளங்க மறுக்கிறது.
இந்த மதுவால் குடும்பங்கள் அழியும் நாடும் உருப்படாமல் போய் விடும் என்ற அழகிய கருத்தை பொதிந்துள்ள இந்த வாசகத்தின் உண்மை பொருளை எப்போது இந்திய அரசும் தமிழக அரசும் புரிந்து கொள்ள போகிறதோ தெரியவில்லை.
இவர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும், இஸ்லாம் முஸ்லிம்களாகிய நமக்கு, மது சம்பந்தமாக பல அறிவுரைகளை வழங்குகிறது. எச்சரிக்கைகளையும் விடுக்கிறது.
மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயல்
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(அல்குர்ஆன் 5:90-91)
மறுமையில் புகட்டப்படும் பானம்
“போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கபால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கபால்” என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : முஸ்லிம்.1568
போதை தரும் அனைத்துமே மது தான்
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : முஸ்லிம் 1563
வெவ்வேறு பெயர்களில் புழங்கும்
‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’
அறிவிப்பவர் : அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி),
நூல் : இப்னுமாஜா 1254
இவ்வளவு கடுமையாக எச்சரிக்கப்பட்ட மதுவை, அது எந்த வடிவில் வந்தாலும் விட்டு விலகும் மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!