மக்காவை நபிகள் நாயகம் (ஸல்) வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மை இறைத்துதர் என்று அறிவித்தது முதல் பதிமூன்று ஆண்டு காலம் சொந்த ஊரான மக்காவில் பலவிதமான எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். சமூகப் புறக்கணிப்பு உள்ளிட்ட கொடுமைகளைத் தாங்கினார்கள்.
அவர்களையும், அவர்களை ஏற்றுக் கொண்ட தோழர்களையும் அவர்களின் எதிரிகள் சொல்லொண்ணாத இன்னல்களுக்கு உட்படுத்தினார்கள்.
சொந்த ஊரில் இனிமேல் வாழவே முடியாது என்ற அளவுக்குக் கொடுமைகள் எல்லை மீறிய போது தமது தோழர்களில் ஒரு பகுதியினரை அபீஸீனியா நாட்டுக்கு அகதிகளாக அனுப்பி வைத்தார்கள்.
தாமும், தமது நெருக்கமான தோழர்கள் சிலரும் சொந்த ஊரில் இருந்து கொண்டு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்தனர்.
நபிகள் நாயகத்தையே கொன்று விட எதிரிகள் திட்டம் தீட்டிய போது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இரவோடு இரவாக மதீனாவுக்குச் சென்றார்கள்.
இந்த ஊரில் இனி மேல் வாழவே முடியாது என்ற நிலையில் ஊரை விட்டுப் புறப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்வரும் உறுதி மொழியை இறைவன் வழங்கினான். (முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். ‘நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்’ என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 28:85
இதன் பொருள் என்ன? எந்த ஊரிருந்து விரட்டியடித்தார்களோ அதே ஊருக்குள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைவார்கள் என்பது தான் இதன் பொருள்.
ஒரு மனிதன் தோல்வியடையும் போது ‘இறுதி வெற்றி எனக்குத் தான்’ என்று கூறுவதைப் பார்க்கிறோம். தோல்வியடையும் நாட்டின் தலைவன் ‘மீண்டும் வெல்வேன்’ என்று கூறுவது சகஜமான ஒன்று தான்.
ஊரை விட்டு விரட்டப்பட்ட எத்தனையோ பேர் இதே ஊருக்கு மீண்டும் வருவேன் என்று கூறியிருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதில் என்ன ஆச்சரியம் உள்ளது? என்று சிலருக்குத் தோன்றலாம்.
தோற்றவர்கள் கூறுவது போல் சில வேளை நடக்கலாம். சில வேளை நடக்காமலும் போகலாம். அவர்கள் கூறியவாறு நடந்தால் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அவர்கள் கூறியவாறு நடக்காவிட்டால் ‘நான் மனிதன் தானே? ஏதோ ஒரு நம்பிக்கையில் அப்படிக் கூறி விட்டேன்’ எனக் கூறிச் சமாளிப்பார்கள். இதை மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நான் மீண்டும் மக்கா வருவேன்’ என்று கூறவில்லை. மாறாக ‘உம்மை உமது இறைவன் மீண்டும் மக்காவுக்குக் கொண்டு வந்து சேர்ப்பான்’ என்று இறைவனே தன்னிடம் கூறினான் என்பது தான் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு. அதாவது என்னை மக்காவுக்குள் மீண்டும் கொண்டு வருவதாக இறைவன் எனக்கு உத்தரவாதம் தந்துள்ளான் என்ற பொருள்படும் வகையில் அவர்களின் முன்னறிவிப்பு அமைந்துள்ளது.
இறைவனே இவ்வாறு கூறியதாக அறிவிப்பதென்றால் அது நிச்சயம் நிறைவேற வேண்டும். அவ்வாறு நிறைவேறாவிட்டால் அது இறைவன் கூறியதல்ல; முஹம்மது கற்பனை செய்து கூறியது என்று ஆகிவிடும். இதனால் முஹம்மது இறைத் துதர் அல்ல என்பதும் வெளிச்சமாகிவிடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்த மார்க்கமே பொய் என்று ஆகி விடும்.
ஆம் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு ஆறு ஆண்டுகளில் எவ்வித எதிர்ப்புமின்றி கத்தியின்றி இரத்தமின்றி மக்காவுக்குள் வெற்றி வீரராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அளித்த உத்தரவாதம் முழுமையாக நிறைவேறியது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதும் நிருபணமாகிறது