போலி இறைத்தூதர்கள் பற்றிய எச்சரிக்கை (முன்னறிவிப்பு)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று தம்மை அறிமுகம் செய்தார்கள். அதற்கான சான்றுகளையும் முன் வைத்தார்கள்.
இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செல்வாக்கு அதிகரித்து மாபெரும் தலைவராக உருவெடுத்தார்கள். இதைக் கண்ட போலிகள் சிலர் தம்மையும் இறைத்தூதர்கள் என்று அறிவித்துக் கொண்டனர். இதனால் நபிகள் நாயகத்தைப் போலவே தாங்களும் தனிப் பெரும் தலைவர்களாக உருவெடுக்கலாம் என்று எண்ணத் தலைப்பட்டனர்.
இதில் முக்கியமானவன் முஸைலாமா என்பவன். யமாமா என்ற பகுதியைச் சேர்ந்த இவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மதீனா வந்து நபிகள் நாயகத்தைச் சந்தித்தான். ‘உங்களுக்குப் பின் நான் ஒரு நபி என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களை நபி என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று நபிகள் நாயகத்திடம் பேரம் பேசினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவனை எச்சரித்து அனுப்பினார்கள்.
நூல் : புகாரி 3620
இவனைப் போலவே அஸ்வத் அல் அன்ஸீ’ என்பவனும் தன்னை நபியெனப் பிரகடனப்படுத்தி யமன் மக்களை வழி கெடுத்தான். இவ்விரு போ நபிகளின் பிரச்சினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியது. மக்களை வழி கெடுக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனாலும் இவர்கள் தோல்வியடைவார்கள் என்று இறைவன் அறிவித்துக் கொடுத்தான். அதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அறிவிப்புச் செய்தார்கள்.
‘நான் தூங்கிக் கொண்டிருந்த போது என் கைகளில் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை எனக்குப் பாரமாக இருந்தன. அதை ஊதி விடுவீராக’ என்று எனக்குக் கூறப்பட்டது. நான் ஊதியவுடன் அவை பறந்து விட்டன. இந்தக் கனவு அஸ்வத் மற்றும் யமாமாவின் முஸைலமா ஆகிய போலி நபிகள் பற்றியது என்று விளங்கிக் கொண்டேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : புகாரி 3621, 4374, 4375, 4379
இவ்விருவரும் வெளித் தோற்றத்தில் வலிமை மிக்கவர்களாகக் காட்சி தந்தாலும் உண்மையில் அவர்களின் வாதம் அழிந்து போகும் என்று இறைவன் புறத்திலிருந்து நபிகள் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வாறே இவ்விருவரின் கதையும் முடிந்தது.
யமாமாவில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த முஸைலமாவை ஒழிக்க படை ஒன்றை அபூபக்கர் (ரலி) அவர்கள் அவர்கள் தமது ஆட்சியின் போது அனுப்பினார்கள்.
இப்போரில் முஸைலமா கொல்லப்பட்டான். உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்ற வஹ்ஷி அவர்கள் தான் அவர்கள் தான் இவனைக் கொன்றார்கள்.
பிற்காலத்தில் இது பற்றி வஹ்ஷி (ரலி) அவர்கள் கூறும் போது ‘மனிதர்களில் மிகவும் சிறந்தவரை (ஹம்ஸாவை) நான் தான் கொன்றேன். மிக மோசமான மனிதனையும் (முஸைலமாவை) நான் தான் கொன்றேன்’ என்று குறிப்பிட்டார்கள். இது போலவே யமன் நாட்டில் தன்னை நபியென வாதிட்டு மக்களை வழி கெடுத்த அஸ்வத் அல் அன்ஸியும் பைரோஸ் என்பவரால் கொல்லப்பட்டான்.
இவ்விருவராலும் போலியான இரண்டு மதங்கள் தோன்றி நிலைத்து விடுமோ என்று ஆரம்பத்தில் நபிகள் நாயகம் அஞ்சினாலும் பின்னர் இறைவனின் அறிவிப்பால் அந்த அச்சம் விலகியது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின் எந்த இறைத்தூதரும் வரமுடியாது. வருவதற்கான எந்த அவசியமும் இல்லை என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
அவர்களுக்கு அருளப்பட்ட இஸ்லாம் முழுமையாக்கப்பட்டதாகவும் பாதுகாக்கப்பட்டதாகவும் உள்ளதால் எந்தத் தூதரும் வரவேண்டிய தேவை இல்லை.
தனக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் அறிவித்துள்ளனர். திருக்குர்ஆனிலும் இதற்கு ஏரளமான சான்றுகள் உள்ளன.
ஆனாலும் இறைத்தூதர் என்று ஒருவரை மக்கள் நம்பினால் எவ்விதக் கேள்வியும் ஆதாரமும் கேட்காமல் மக்கள் அவரைப் பின்பற்றுவார்கள் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் பலர் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டார்கள். இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அறிவித்தார்கள்.
எனக்குப் பின் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை நபியெனக் கூறிக் கொள்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 7121
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது போலவே தலீஹா, முக்தார் சில ஆண்டுகளுக்கு முன் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் உள்ளிட்ட பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பொய்யர்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள்.