போருக்கு செல்ல வேண்டுமே என கண் தெரியாதவர் வருத்தப்பட்ட போது இறங்கிய வசனம்
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறை நம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் எனும் (4:95ஆவது) இறை வசனம் இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள், இன்னாரைக் கூப்பிடுங்கள் என்று சொன்னார்கள்.
(ஸைத் பின் ஸாபித்) அவர்கள், மைக்கூட்டையும் பலகையையும் அல்லது அகலமான எலும்பையும் தம்முடன் கொண்டுவந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இந்த (4:95ஆவது) வசனத்தை எழுதிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்குப் பின் புறம் இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் கண்பார்வையற்றவன் ஆயிற்றே! என்று கேட்டார்கள்.
அப்போது அதே இடத்தில் ”இறை நம்பிக்கையாளர் களில் இடையூறு உள்ளவர்கள் தவிர அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்” என்ற இவ்வசனம் (4:95 முழுமையாக) இறங்கிற்று.
(புகாரி 4594)