போதும் என்ற மனம்
நபியவர்கள் ஒரு நாள் மிம்பரில் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். ‘எனக்குப் பின்னால் உலக வளங்களும் அதன் அலங்காரமும் உங்களுக்குத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் பயப்படுகின்றேன்’ என்று நபியவர்கள் கூறினார்கள்.
ஒருவர் ‘அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையைத் தருமா?’ எனக் கேட்டதும் நபியவர்கள் மௌனமாகி விட்டார்கள்.
உடனே ‘என்ன ஆனது உனது நிலைமை? நீ ரஸூல் (ஸல்) அவர்களிடம் பேசுகிறாய்! ஆனால் நபியவர்களோ உன்னிடம் பேசாமல் இருக்கிறார்களே!’
என்று அவரிடம் கேட்கப்பட்டது.அந்நேரத்தில் நாங்கள் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படுவதாக நினைத்துக் கொண்டோம்.
ரஸூல் (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்து விட்டு, ‘கேட்டவர் எங்கே?’ என்று அவரைப் புகழ்வதைப் போல கேட்டார்கள்
‘நன்மை தீமையை உருவாக்காது.
நீர் நிலைகளின் கரையோரங்களில் விளைகின்ற செடிகள் கால்நடைகளைக் கொன்று விடுகின்றன. அல்லது மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றன.
பசுமையான (நல்ல வகை) செடிகளை தின்பவைகளைத் தவிர!
கால்நடைகள் அந்தச் செடிகளை வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்கி, சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே) இந்த உலகம் பசுமையானது இனிப்பானது.
ஒரு முஸ்ஸிம் தனது செல்வதிலிருந்து ஏழைக்கும் அனாதைக்கும் வழிப்போக்கருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்கு நல்ல தோழனாக இருக்கும்.
யார் அதனை முறையின்றி எடுத்துக் கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று!
மறுமையில் அந்தச் செல்வம் அவருக்கெதிராகச் சாட்சி சொல்லும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1465
உலகச் செல்வங்களை போதுமென்ற மனம் இல்லாமல் அனுபவிப்பவர்கள் சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று கூறியுள்ளார்கள்.ஒருவன் தேவையான அளவு சாப்பிடும் போது வயிறு நிறைய வேண்டும். ஆனால் வயிறு நிறையவில்லை என்று கூறினால் அவனது நிலை எப்படியோ அதைப் போன்று தான், இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியடையாமல் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று அலைபவன்.
நபியவர்கள் மனிதனின் பேராசையின் உச்சக் கட்டத்தைக் கூறும் போது,
மனிதனுக்கு ஒரு ஓடை நிறைய தங்கம் வழங்கப்பட்டால், அதனுடன் இரண்டாவதை விரும்புவான். இரண்டாவது வழங்கப்பட்டாலும் மூன்றாவதை அவன் விரும்புகிறான் மண் தான் அவன் வயிறை நிரப்பும். இதிலிருந்து பாவ மன்னிப்புத் தேடியவரை அல்லாஹ் மன்னிப்பான்.
அறிவிப்பவர்: இப்னு ஸுபைர் (ரலி)
நூல்: புகாரி 6438
நபிகளார் கூறுகிறார்கள்: மனிதன் பெரியவனாகும் போது அவனுடன் இரண்டு விஷயங்கள் வளர்கின்றன. அவை:
1. செல்வத்தில் மீதுள்ள ஆசை,
2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்: புகாரி 6421
வயது முதிர்ந்து, வேறு உலகத்திற்குச் செல்லத் தயாராக வேண்டிய வேளையில் கூட செல்வத்தைச் சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நபர்களையும் காண்கிறோம். இவ்வாறு நாம் செல்வத்தின் மீது பேராசை கொள்வது அல்லாஹ்வின் நினைவை விட்டும் தடுமாறச் செய்து விடும்.
அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் எனற பேராசையில் தன்னிடத்திலுள்ள பணத்தை விட அதிகமாகக் கடனை வாங்கி வியாபாரம் செய்கின்றனர். அதில் நஷ்டம் ஏற்பட்டால் அந்தக் கடனை அடைப்பதற்கு அல்லாஹ்வை மறந்து வட்டிக்குக் கடன் வாங்கும் அவல நிலையை நம்முடைய சமுதாயத்தில் காண்கிறோம். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.
(அல் குர்ஆன் 102:1, 2)
நம்முடைய பார்வையில் செல்வம் என்றால் வீடு, பங்களா, சொத்து கை நிறைய பணம் இவை தான் என்று நினைக்கிறோம். ஆனால் நபியவர்களின் பார்வையில் உண்மையான செல்வம் என்பது போதுமென்ற மனம் தான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பது செல்வம் கிடையாது. போதுமென்ற மனம் தான் செல்வமாகும்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6446
நபியவர்களின் உபதேசத்தைக் கேட்டு விட்டு அன்றிலிருந்து யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்க மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, தான் மரணிக்கும் வரை தனக்கு அரசாங்கத்தில் கிடைக்கவிருந்த மானியத்தையும் கூட வேண்டாம் என்று ஒதுக்கித் தன்மானத்தை நிலைநாட்டிய நபித்தோழரை இதற்கு உதாரணமாகக் கூறாலாம்.
நான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் தர்மம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.
பிறகு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.
மீண்டும் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.
பிறகு ‘இந்தச் செல்வம் பசுமையானதும் இனிப்பானதுமாகும்.
யார் இதனைத் தூய மனதுடன் பெறுகிறாரோ, அவருக்கு பரகத் வழங்கப்படும்.
யார் இதனைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு பரகத் வழங்கப்படாது.
அவர் சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று. கொடுக்கும் கை வாங்கும் கையை விடச் சிறந்தது’ என்று நபியவர்கள் கூறினார்கள்.
அப்போது ஹகீம் (ரலி), ‘அல்லாஹ் வின் தூதரே! உங்களை சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் எவரிடத்திலும் எதையும் நான் தர்மமாகக் கேட்க மாட்டேன்’ என்று கூறினார். இதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸகாத்தைக் கொடுக்க அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பிறகு உமர் (ரலி) அவர்கள் தம் ஆட்சிக் காலத்தில் அவருக்கு தர்மம் கொடுப்பதற்காக அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘முஸ்லிம் சமுதாயமே! நான் ஹகீமை கனீமத் பொருட்களில் அவருக்குள்ள பங்கைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கிறேன். அவரோ அதை மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ என்று கூறினார்.
அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி)
நூல்: புகாரி 1472
‘ஹகீம் நபியவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவே இல்லை’ என ஸயீத் இப்னு முஸய்யப் (என்ற தாபியி) கூறுகிறார்.
பணம் கிடைத்தாலே போதும் என்று சுய மரியாதையை இழந்து திரிபவர்கள் திருந்த வேண்டும் என்பதற்கு இந்த நபித்தோழர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
இதற்குக் காரணம் இந்த உலக வாழ்வு மட்டுமே நிரந்தரம் என்ற எண்ணம் தான். ஆனால் நபியவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்!
நபியவர்கள் ஒரு ஈச்ச மரப் பாயின் மீது படுத்திருந்தார்கள். அந்த பாய்க்கும் அவர்களுக்குமிடையே (விரிப்பு) எதுவும் இல்லாமல் இருந்தது. அவர்களின் தலைக்குக் கீழ் ஈச்ச நார் நிரப்பப்பட்ட தோல் தலையணை இருந்தது. அவர்களின் கால்களுக் கீழ் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன.
அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்க விடப்பட்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் அச்சு பதிந்திருப்பதைக் கண்டு அழுதேன். நபியவர்கள், ‘ஏன் அழுகிறீர்!’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ரா, கைஸர் (பாரசீக மன்னர்கள்) சுக போகத்தில் திளைக்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் அல்லவா? நீங்கள் இந்த நிலையில் இருப்பதா?’ என்று கேட்டேன். அப்போது நபியவர்கள், ‘ அவர்களுக்கு இந்த உலகமும் நமக்கு மறுமையும் இருப்பதை நீ விரும்பவில்லையா?’ என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 4913
நபியவர்கள் இந்த உலக சுக போகங்களை அனுபவிப்பதற்கு வாய்ப்பும் முழுத் தகுதியும் இருந்தும் அதனைத் தூக்கியெறிந்து விட்டு, மறுமையில் இதற்கான கூலியை அல்லாஹ் தருவான் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்துள்ளார்கள். இது போன்று நாமும் இருப்பதைப் போதுமாக்கி வாழ்ந்தோமென்றால் ஈருலகிலும் நமக்குக் கூலி கிடைப்பது நிச்சயம்.