பேராசை வேண்டாம் & கிடைப்பதில் திருப்தி அடைவோம் !
பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 6435
ஒரு ஆட்டு மந்தையினுள் அனுப்பி வைக்கப்பட்ட பசியோடு உள்ள இரண்டு ஓநாய்கள் அதனை நாசமாக்குவதை விட ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப் பற்றை நாசாமாக்கி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி)
நூல் : திர்மிதி 2298
முதியவரின் மனம்கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்து வரும்.
1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம்.
2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 6420, 6421
மற்றவர்களை விட நமக்குச் செல்வம் குறைவாக இருந்தால் அல்லது அவ்வாறு கருதினால் அதன் காரணமாக நம்முடைய நிம்மதி பறிபோய் விடுகிறது. மன உளைச்சலுக்கு நாம் ஆளாகிறோம்.
இது போன்ற நிலை ஏற்படாமல் நாம் தவிர்ப்பதற்கும் இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது.
இறைவன் நமக்கு எதைக் கொடுத்திருக்கிறானோ அதில் திருப்தி அடைய வேண்டும் என்பதுதான் அந்த வழி.
நம்மைப் படைத்த இறைவன் நமது தேவைகளையும், நமது நிலைகளையும் நம்மை விட நன்கு அறிந்தவன். அவன் நமக்குக் குறைவாகக் கொடுத்தாலும் அதில் நமது தேவையை நிறைவு செய்வான். அல்லது நமக்குச் சிரமத்தைக் கொடுத்துச் சோதித்துப் பார்ப்பதற்காக நமக்கு அளவோடு தந்திருப்பான் என்று நாம் கருதிக் கொண்டால் நமக்குக் கிடைத்திருப்பதில் திருப்தி ஏற்பட்டுவிடும். திருப்தி ஏற்பட்டு விட்டால் நம்முடைய நிம்மதிக்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.
வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 1898
இருப்பதை வைத்து திருப்தி அடையாதவன் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறான். அவருக்கு நான் சளைத்தவன் அல்ல என்று காட்டிக் கொள்ளும் விதமாக கடன் வாங்கி பெருமை அடிக்கிறான்.
வசதி படைத்தவர்கள் வீடு கட்டுவதையும், கார் வாங்குவதையும், இன்ன பிற ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிப்பதையும் பார்த்து வசதியற்றவர்களும் ஆசைப்படுவதற்கு போதுமென்ற மனமில்லாததே காரணம்.
கடன் வாங்கிவிட்டு அதைக் கட்ட முடியாமல் திணறுவதற்கும், கடன் கொடுத்தவன் முன்னால் கூனிக் குறுகி நிற்பதற்கும், வாங்கிய கடனை வாரிசுகள் தலையில் சுமத்தி விட்டுச் செல்வதற்கும் இதுவே காரணம்.
யார் இஸ்லாத்தை ஏற்று போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்று விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : முஸ்லிம் 1903
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு உலகத்தில் நீ வெளியூர்வாசியைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி 6416
எனவே பேராசை எனும் பெருநஷ்டத்திலிருந்து விடுப்பட்டு இருப்பதை கொண்டு திருப்தியான வாழ்கையை வாழ்வோமாக..!