பேராசையில் இருந்து எப்படி விடுபடுவது?
பேராசையில் இருந்து எப்படி விடுபடலாம்? இதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர்.
நாம் எவ்வளவுதான் பொருளாதாரத்தைத் திரட்டினாலும் அது உண்மையில் நம்முடையது அல்ல. பல கோடிகளுக்கு அதிபதியாக இருப்பவர் அனைத்தையும் சாப்பிட முடியாது. அனைத்தையும் அனுபவித்து விட முடியாது. ஒரு அந்தஸ்து இதனால் கிடைக்குமே தவிர அனைத்தையும் யாராலும் அனுபவிக்க முடியாது.
ஒரு அளவுக்கு மேல் பணத்தை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. இதை உணர்ந்து கொண்டால் பொருளாதாரத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது எளிதாகி விடும்.
மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம் என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து (மறுமைக்காக) சேமித்ததையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி)
நூல் : முஸ்லிம் 7609
இந்த உலகத்தில் நமக்கு எதுவும் சொந்தம் கிடையாது என்ற மனப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் பேராசைப் படமாட்டோம்.
என்னதான் பணத்தைத் திரட்டினாலும் மரணம் வந்து விட்டால் நாம் அப்படியே போட்டு விட்டுப் போய் விடுவோம் என்று புரிந்து கொள்வதும் பேரசையை ஒழிக்கும்.
பேராசைப்பட்டு செல்வத்தின் பின்னே நாம் அலைந்து கொண்டிருந்தால் எந்த நேரத்திலாவது போதும் என்று நாம் நினைப்போமா? ஒருக்காலும் நினைக்க மாட்டோம். ஒரு கோடி கிடைக்கும் வரை அதுவே இலட்சியமாக இருக்கும். ஒரு கோடி கிடைத்து விட்டால் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட மாட்டோம். இரண்டு கோடிக்கு அலைய ஆரம்பித்து விடுவோம். பல லட்சம் கோடிகளில்கூட நாம் திருப்தி அடைய மாட்டோம். முடிவே இல்லாத இந்தப் போக்கு ஒரு வகை மனநோய் என்றுதான் கூற வேண்டும்.
அனைத்தையும் அனுபவிக்கவும் முடியாது. அதைப் பாதுகாக்கவும் முடியாது. எந்தக் கட்டத்திலும் திருப்தி அடையவும் முடியாது என்று தெரிந்து கொண்டே அதன் பின்னே அலைவது மனநோய்தான்.
இதனால்தான் மனைவி, மக்கள், இன்ன பிற கடமைகளைக்கூட மனநோயாளி மறப்பதைப் போல் சிலர் மறந்து பணத்திற்காக அலைய ஆரம்பித்து விடுகின்றனர்.
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு ஓடை இருந்தால் தனக்கு இரண்டு தங்க ஓடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி 6439, 6436
செல்வம் அவசியம் என்ற போதும் அதைவிட முக்கியமான கொள்கைக்காக செல்வத்தைத் தூக்கியெறியவும் முஸ்லிம்கள் தயாராக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. இப்படி கொள்கைக்காக செல்வத்தையும், வசதி வாய்ப்புகளையும் தூக்கி எறிந்த ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா அவர்களை உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் முன்மாதிரி என்று அல்லாஹ் கூறுவதில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.
என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக! என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.
திருக்குர்ஆன் 66:11
கொடுங்கோல் ஆட்சி செய்த ஃபிர்அவ்ன் என்பவன் தன்னைக் கடவுள் என்று வாதிட்டபோது அவனது மனைவி ஆஸியா அவர்கள் அதை எதிர்த்தார்கள். மனிதன் கடவுளாக முடியாது; அகிலத்தைப் படைத்த மாபெரும் ஆற்றல் மிக்கவன்தான் கடவுள் என்று துணிந்து முழங்கினார்கள். பட்டத்து ராணி என்ற அடிப்படையில் இவ்வுலகில் அனுபவித்து வந்த பல இன்பங்களை இதனால் இழக்க நேரும் என்று தெரிந்து கொண்டே கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். செல்வத்துக்கு முன்னுரிமை கொடுக்காமல் கொள்கைக்காக செல்வத்தை தியாகம் செய்த இப்பெண்மணியை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் முன்மாதிரி என்று அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான்.
இருப்பதைக் கொண்டு எவ்வாறு திருப்தி அடைவது?
இருப்பதை வைத்து திருப்தி அடைவது எப்படி என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர்.
உலகத்தில் நம்மை விட மேலான நிலையில் சிலர் இருப்பது போல் நம்மை விடத் தாழ்ந்த நிலையிலும் பலர் உள்ளனர். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நமது நிலையை ஒப்பு நோக்கிப் பார்த்தால் இருப்பதை வைத்து திருப்தி அடையும் மனநிலை நமக்கு வந்து விடும்.
உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 7617
செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 6490
அனைத்து உயிரினங்களின் தேவைகளுக்கும் அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான் என்பதைப் புரிந்து கொள்பவர்களுக்கு போதுமென்ற மனநிலையை அடைவது எளிதானதுதான். நம் தேவைகளுக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான் என்றால் அவன் குறைவாக நமக்குத் தந்தாலும் அதில் நிச்சயம் நம் தேவையை நிறைவேற்றுவான். இப்படி நம்பும்போது போதுமென்ற மனம் வந்து விடும். போதுமென்ற மனம் வந்து விட்டால் அல்லாஹ்வின் பரக்கத் தேடிவரும்.
வறுமையை அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் நாம்தான் உங்களுக்கும், அவர்களுக்கும் உணவளிக்கிறோம்.
திருக்குர்ஆன் 17:31
பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
திருக்குர்ஆன் 11 :6
ஒரு மூமின் அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அல்லாஹ் அவனுக்கு ஒரு பறவைக்கு உணவளிப்பதைப் போல உணவளிப்பான். அது காலையில் ஒட்டிய வயிற்றுடன் செல்கிறது ஆனால் மாலையில் நிரம்பிய வயிறோடு தன் கூட்டுக்குத் திரும்புகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி)
நூல் : திர்மிதி 2266
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் யாசகம் கேட்டு வந்தார். அப்போது கீழே கிடந்த பேரீச்சம்பழங்களை அவருக்குக் கொடுத்துவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; இதைப் பெற்றுக் கொள். இதைப் பெற்றுக் கொள்ள நீ இங்கே வராவிட்டால் அது உன்னைத் தேடி வந்திருக்கும் என்று கூறினார்கள்.
நூல் : இப்னு ஹிப்பான் 3240
எது நமக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் விதித்து விட்டானோ அது நமக்கு எப்படியும் கிடைத்து விடும். ஏனென்றால் அல்லாஹ் மனிதனை எப்போது படைத்தானோ அப்போதே அவனுக்குரிய செல்வத்தை நிர்ணயித்து எழுதி விட்டான். அவன் எதை எழுதினானோ அதுதான் கிடைக்கும். அதற்கு மேல் வேறொன்றும் கிடைத்து விடாது.
மரணம் ஒருவனைத் தேடுவதைப் போல அவனுக்கு நிர்ணயிக்கப்பட்ட செல்வமும் அவனைத் தேடுகிறது.
சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகிறார்கள் : உனக்கு நான் சில சொற்களைக் கற்றுத் தருகிறேன்; அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ்வைக் கண்முன்னே பெற்றுக் கொள்வாய்!
நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்! மேலும் நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. அனைவரும் சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.
நூல் : திர்மிதி 2440
அல்லாஹ் நமக்குத் தர நினைத்ததைத் தவிர வேறு எதுவும் நமக்குக் கிடைக்காது என்பதையும், அவன் தர விரும்பாத எதுவும் நமக்குக் கிடைக்காது என்பதையும் ஒருவன் நம்பவில்லையானால் அவனிடம் இறைநம்பிக்கை இல்லை என்பதே பொருள்.
அல்லாஹ் நமக்குத் தர நினைத்தது எப்படியும் நம்மை வந்து சேர்ந்து விடும் என்று நாம் நம்பிக்கை வைத்தால் நாம் நினைத்துப் பார்க்காத வகையில் அது நம்மை வந்து அடைந்துவிடும்.
மர்யம் (அலை) அவர்களுக்கு இப்படி நினைத்துப் பார்க்காத வகையில் அல்லாஹ் உணவளித்ததை சொல்லிக் காட்டுகிறான்.
அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்டார். இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான் என்று (மர்யம்) கூறினார்.
திருக்குர்ஆன் 3 :37
அல்லாஹ் நாடினால் இறைத்தூதர்களுக்கு வழங்காத பரக்கத்தை இறைத்தூதர் அல்லாதவர்களுக்கும் வழங்கி விடுவான் என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.
மர்யம் (அலை) அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஸக்கரியா நபி அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் உணவு கொண்டு வருதற்கு முன்பே பள்ளிவாசலில் உணவு இருப்பதைக் காண்கிறார்கள். இது எப்படி வந்தது என்று அவர்கள் கேட்டபோது இது அல்லாஹ்விடமிருந்து எனக்குக் கிடைத்தது என்று மர்யம் (அலை) பதில் அளித்தார்கள். இது மட்டுமல்ல; அல்லாஹ் நாடினால் கணக்கின்றி கொடுத்து விடுவான் எனவும் அவர்கள் கூறியதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். இது மர்யம் (அலை) அவர்களுக்கு மட்டும் உரியது அல்ல; அனைவருக்கும் உரியது என்பதை இதன் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.
திருக்குர்ஆன் 65:2,3
மனிதர்கள் எண்ணிப்பார்க்க முடியாத வகையிலும் அல்லாஹ்விடமிருந்து செல்வம் வந்து சேரும் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கு அருகில் விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக.
திருக்குர்ஆன் 14:37
இப்ராஹீம் நபியவர்கள் பலைவனத்தில் தமது குடும்பத்தைக் குடியமர்த்தியபோது மேற்கண்டவாறு பிரார்த்தனை செய்தார்கள்.
எந்த இடத்தில் குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லையோ அந்த இடத்தில் இப்ராஹீம் நபியவர்கள் தமது மனைவியையும், புதல்வரையும் குடியமர்த்த எப்படித் துணிந்தார்கள்? அல்லாஹ் நாடினால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையிலும் உணவளிப்பான்; வாழ்வாதாரங்களை ஏற்படுத்தித் தருவான் என்று இப்ராஹீம் நபி அவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம்.
அவர்களின் அசைக்க முடியாத இந்த நம்பிக்கைக்காக அல்லாஹ் தந்த பரிசுதான் ஜம்ஜம் நீரூற்று. மக்காவில் பல்லாயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருக்கிறது. இப்போது மக்காவில் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு தினமும் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அல்லாஹ்வை மட்டும் நம்பினால் இப்படிப்பட்ட அதிசயத்தை அவன் நிகழ்த்துவான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக ஜம்ஜம் நீரூற்று அமைந்துள்ளது.